சொந்த ஊர்

சொந்த ஊர்
Published on

விவசாயச் சிறப்பிதழைப் படித்து முடித்தபோது, கண்ணீர் முட்டியது. தாத்தா விவசாயம் செய்தவர். விடிந்தால் நாற்பது மாடுகள் மேய்ச்சலுக்கு போகும். பண்ணையாள் காளிமுத்துவோடு சென்று களத்து மேட்டில் குடைபிடித்து அமரும் தாத்தாவின் மடியிலிருந்து பெண்கள் நாற்று நடுவதை, கோரஸாக பாடுவதை ரசித்தவன் நான். உடற்பயிற்சி ஆசிரியராகயிருந்த அப்பா காலத்தில் நிலம் குத்தகைக்குப் போனது. என் திருமணத்திற்குப் பிறகு சென்னை வந்து அடுத்த ஆண்டு வெள்ளி விழா!  குளிர் பெட்டியில் வைத்த பால் சாப்பிட்டு, எந்தக் கடை அரிசி நன்றாக இருக்குமென மாற்றி மாற்றி வாங்கி, நாள்பட்ட மீனை வருத்தத்தோடு வறுத்துத் தின்று ஆக மூன்று தலைமுறைகளை பார்த்ததில் , தாத்தா காலம்தான் பெஸ்ட் என முடிவெடுத்து, கொஞ்சம் பணம் சேர்த்தால் கிராமத்திற்கே போய் விவசாயம் பார்க்கலாமென்ற ஏக்கத்தோடுதான் சொந்த ஊர் பெயரிலேயே எழுதுகிறேன்.

-அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

ஆசிர்வாதம்

நான் ஒரு எளிய தோட்டக்காரன், எல்லாச் செடிகளுக்கும் தண்ணீர் பாய்ச்சுவேன் & என்ற திகசிதான் எத்தனை ஆலமரங்களின் சிறுவேர்க்கு அன்று நீர் பாய்ச்சி வளர்த்தவர். அத்தகைய அனுபவம் எனக்குமுண்டு. சுந்தர சுகன் இதழில் எழுதிய என் சிறு கவிதை ஒன்றுக்காக என்னுடைய கர்நாடகம், சிக்மகளூர் முகவரிக்கு அவருடைய 'அஞ்சல் அட்டை ஆசிர்வாதம்' வந்த அன்று என் கால்கள் தரையில் இருக்கவில்லை. நாகேஷின் இயல்பான குணத்தை மிக இதமாகச் சொன்ன மணாவின் கட்டுரையும் மிகச் சிறப்பு. தமிழகத்தில் நீர் நிலைகள் மீது கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் பற்றிய குறிப்பு பதற வைத்தது.  சிறு குறிப்பே இப்படி என்றால் முழு விவரங்கள் எவ்வளவு அதிர்ச்சியாக இருக்கும்? விவசாயச் சிறப்பிதழ் மிக அருமையான தொகுப்பு. குறிப்பாக, திமுக ஆட்சியில் அணைகளே கட்டவில்லை  என்பவர்களுக்கு ஆதாரம் தரும் பதிலாக அமைந்திருந்த படைப்பு அருமை. விவசாயம் மற்றும் கால்நடைப் பொருளாதாரம் , பண்ணைத் தொழில்கள் பற்றிய சாகுபடி மதிப்புக்கூட்டல், சந்தைப் பார்வையுடன் கட்டுரைகள் அமைந்திருந்தது தனிச்சிறப்பு. விவசாயப் பெருமக்களுக்குத் தேவையான இணைய தள விவரங்களையும் முன் அறிமுகமாக தந்த நிறுவிய ஆசிரியரின் கட்டுரையும் முக்கியமானது. சுருக்கமாகச்  சொல்லப் போனால் 'மாற்றத்தின் விளைச்சல்' அமோகமான  மகசூல். படைப்பும் , செயல்பாடும் கொண்ட விவசாயிகளுக்குப் பாராட்டுகள்.

-தஞ்சை என்.ஜே.கந்தமாறன், சென்னை - 89.

செழுமை விவசாயச் சிறப்பிதழ் அருமை!

கருத்துச்செழுமைக்கு மத்தியில் பயிர்ச்செழுமையும் தெரிந்தது.கார்ட்டூன் சூப்பர் எனில் பேரன்பு விமர்சனம் டபுள் சூப்பர்!

-அ.முரளிதரன், மதுரை-3.

கணிப்பு

நடக்க இருப்பது நாடாளுமன்றத் தேர்தல்.

அதிமுக கூட்டணி, திமுக தலைமையிலான கூட்டணி. இந்த இரண்டும் தான் களத்தில் நிற்கிறது. பாலோடு நீரைக்கலக்கலாம், ஆனால் பாலோடு எண்ணெயைக் கலந்தால் இரண்டுமே கெடும்!  என்னதான் மெகா கூட்டணி என்று சொன்னாலும், மக்களின் வெறுப்புக்குள்ளான கட்சிகள்தான் அனைத்தும். ஆனால் திமுக கூட்டணியோ மிகுந்த நுண்ணறிவோடு அமைக்கபட்ட கட்டுக்கோப்பான கூட்டணி, ஆகவே அதிமுக மெகா கூட்டணியின் வெற்றி என்பது முயற் கொம்பே!

-நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்.

எதிர்காலம்

தமிழகத்தை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரே கட்சி அதிமுக தான். பலமுறை தோற்று இருமுறை பிளவுப்பட்டு சின்னம் முடங்கினாலும் ஃபினிக்ஸ் பறவை போல் உயிர்த்தெழுந்த அதிசயம்! இன்று தலைமையில்லாமல் ஒருங்கிணைப்பாளர்களால் கட்சியும் , ஆட்சியும், தொடர்வதும் , பாராளுமன்றத் தேர்தலை வலிமையான கூட்டணியோடு எதிர்கொள்வதும் இன்னொரு ஆச்சரியம். சரி, மக்கள் எடப்பாடி அ.தி.மு.க வை அங்கீகரிக்கிறார்களா! &அதை தேர்தல் முடிவுதான் தெளிவாக்கும், அதையொட்டியே அதிமுக எதிர்காலம் இருக்கும்.அதிமுக ஆட்சி கவிழ்ந்த அல்லது முடிந்த பிறகு தலைமை மாறுமா! உத்வேகம் பெறுமா! என்பது எதிர்கால ஜோஸ்யம்.

-அ.யாழினி பர்வதம்,  சென்னை- 78.

போதனை

வடக்கே மனீஷா கொய்ராலா முதல்  தெற்கே கௌதமி வரை பெண்கள் தைரியமாக உயிர்க்கொல்லி நோயை எதிர்த்து, குணமாவது மனதிட முன்னேற்றத்தின் முன்னுதாரணங்கள். பிரச்னை களையும், தடைகளையும் கூட அவ்விதமே தாண்டி முன்னேறலாம் என்று சொல்லாமல் சொல்லும் இன்னொரு சாட்சி, தீபா ரவிக்குமார். இவரின் சாதனைதான் 2019 மகளிர்தின போதனை.

-மல்லிகா அன்பழகன், சென்னை - 78.

பேரன்பு

விவசாயச் சிறப்பிதழாக மலந்திருக்கும் இவ்விதழில் பயனுள்ள பன்முகப் படைப்புகள் பலவற்றைப் படித்து மகிழ்ந்தேன். எல்லாவற்றையும் புறந்தள்ளி வியக்க வைத்திருக்கிற படைப்பு எதுவெனில் ஜி.கௌதம் எழுதிய 'பேரன்பே பிரதானம்' எனும் உண்மைக் கட்டுரையே ! மூன்று மாதமே உயிர் வாழ்வார் என்று மருத்துவர்கள் கைவிரித்தபின்னர் இன்றும் நலமாக நடமாடிக்கொண்டிருக்கும் தீபா ரவிக்குமாரின் கதை படிப்பவர்களை உலுக்கி எடுத்துவிட்டது. மருத்துவ அறிக்கைகளுக்கெல்லாம் மரண அறிவிப்பைக் கொடுத்த தன்னம்பிக்கை மனுஷி, என்ற கட்டுரையாளரின் பதிவு உண்மையிலும் உண்மையே! யாரும் கவலைப்படாதீங்க, அந்த வியாதி, மூணு மாசம் கெடுவெல்லாம் மெடிக்கல் ரிப்போர்ட்ல மட்டும்தான் இருக்கு. என் மனசில் இல்லை என்று சொல்லியிருப்பதும் , மனவளக்கலை பயிற்சி , மன உறுதி, சத்தான உணவுகள் , சுற்றியிருப்பவர்களின் அன்பே என்னை உயிர்ப்பித்திருக்கின்றன என்ற வாசகங்களும் அவருக்கு மட்டுமின்றி, படிப்பவர்களையும் கட்டிப்போட்டு, கவனம் கொள்ள வைத்திருக்கிறது. நோயாளிக்கு ஆகச்சிறந்த சிகிச்சை பேரன்பே  என்று நிறைவு செய்திருக்கும் செய்தி, தேர்ந்த அனுபவத்தை அளித்திருக்கிறது.

-நவீன் குமார் , நடுவிக்கோட்டை.

பாராட்டு

அந்திமழை மார்ச் 19 இதழ் கிடைக்கப்பெற்றேன், மிக்க மகிழ்ச்சி,  மா.கண்ணன் எழுதிய கட்டுரை எங்கள் பகுதி கோமதி நாயகம், அந்தோணிசாமி இந்த இரட்டையர்களைப் பற்றியது இக்கடிதம். திரு கோமதி நாயகம் இளமைக்கால வாழ்க்கை ஒரு பொதுவுடைமைவாதி, நானும் அதில் உள்ளவன். அதனால் அவர்களிடம் உடல்நலக்குறைவு என்றாலும் முடிந்த வரை விவசாய உற்பத்தி, அதிலும் இயற்கை விவசாயம் என்பதில் முன்னோடி.

பேரையூர் அருகில் பழையாற்றில் முத்துலட்சுமி வாழ்க்கை சிறப்பான எடுத்துக்காட்டு. கடும் உழைப்பு, நல்ல வருமானம், சிறந்த தம்பதியர். இப்படி கட்டுரைகளை அந்திமழை வெளியிடுவது பாராட்டுக்குரியது. 

-தோழர் இரா.சண்முகவேல், ஜீவா படிப்பகம், கீழக்கலங்கள்.

சந்திப்பு
சந்திப்புஅந்திமழை

சந்திப்பு

அந்திமழையில் கடந்த மாத இதழில்  வந்த இயற்கை விவசாயி அந்தோணிசாமி பற்றிய கட்டுரையைப்  படித்தேன். அவரை நேரில் பார்க்க ஆசைப்பட்டேன்.  நானும் மேலும் சில நண்பர்களும் புளியங்குடியில் உள்ள அவரது தோட்டத்திற்குப் போனோம். அவரது கரும்புத்தோட்டத்தைச்  சுற்றிப்பார்த்தோம்.  அவரது வாழைத்தோட்டம், நாட்டுச் சர்க்கரை தயாரிக்கும் இடம் என்று சுற்றிவிட்டு  அவரது வயலைப் பார்க்க  அவருக்கு போன் செய்தோம். உடனே அவர் நீங்க எல்லோரும் வீட்டிற்கு வந்துடுங்க என்றார்.

எல்லோருக்கும் பப்பாளிபழம் கொடுத்தார். நல்ல கனிந்த சிவந்த நாட்டு பப்பாளிப்பழம் சாப்பிட்டோம். அந்த விதையுள்ள நாட்டுப் பப்பாளி பழத்தின் சுவையை  இதற்குமுன்  நாங்கள் அறிந்ததில்லை. அவருடைய விவசாய முறைகளைக் கேட்டுத் தெரிந்துக்கொண்டு கிளம்பத் தயாரானோம். அதைப்புரிந்துக்கொண்டு எங்களுக்கு 25 கிலோ காட்டுயாணம் நெல்ரகத்தை அவல் இடித்து சாப்பிட கொடுத்தார். அந்திமழைக்கு நன்றி.

-சு.மணிகண்டன்  திருநெல்வேலி.

logo
Andhimazhai
www.andhimazhai.com