அந்திமழை மார்ச் 2018 இதழின் சிறப்புக்கட்டுரைகளில் தொடக்கக் கட்டுரையான அந்திமழை இளங்கோவனின் அரசியல் வியூகக் கட்டுரை வரலாற்றையும் சமகாலத்தையும் ஆராய்ந்து நடுநிலையுடன் ஒப்பு நோக்கியுள்ளது. திமுகவில் செல்வாக்கு பெற்றிருப்பவர்களே கட்சியின் தொடக்க கால வரலாறு தெரியாமல் இருக்கிறார்கள் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. திமுக தலைவர் கலைஞரைப் பற்றிய சுபகுணராஜனின் அலசல் ஆழமானது. கலைஞர் மீது எறியப்படும் காழ்ப்புணர்வை புறந்தள்ளி ஒரு திராவிட இயக்கத் தலைவராக அவரது இடத்தை சரியாக நிறுவியிருக்கிறார். தி.மு.க மீதான நம்பிக்கையை மீட்டெடுங்கள் என்ற மாலனின் கட்டுரை காலம்கருதி எழுதப்பட்ட சிறப்பான ஒன்று. தலைமைக்கும் தொண்டர்களுக்கும் இடையேயான தொடர்பு இன்னும் பலப்படுத்தவேண்டும் என்கிற கூற்றும் சரி, கட்சிக்கு புதிய ரத்தத்தைப் பாய்ச்ச வேண்டும் என்ற கூற்றும்சரி திமுகவின் தற்போதைய கட்சித்தலைமை கவனத்தில் கொள்ளவேண்டிய கட்டாயம் இருக்கவே செய்கிறது.
செ.முருகன், காஞ்சிபுரம்
கேரள மாநிலத்தில் அட்டப்பாடி வனப்பகுதியில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மது என்ற இளைஞர் திருட்டுச்செயலில் ஈடுபட்டார் என்று, அப்பகுதி மக்களால் அடித்துக்கொல்லப்பட்ட செய்தி காட்டுமிராண்டி செயல்! ‘‘வெற்றிக்கு ஸ்டாலின் செய்ய வேண்டியது என்ன?'' என்ற ஒரு முழுமையான ஆய்வு, திமுகவுக்கு மட்டுமல்ல, தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பது உறுதி. அதில் நடுநிலை இதழியலாளர் மாலனின் அரசியல் வியூகம் அர்த்தமுள்ளது. ஸ்டாலினுக்கு நயமாக சொல்லப்பட்ட ‘‘திமுக மீதான நம்பிக்கையை மீட்டெடுங்கள்'' என்ற அவரின் ஆலோசனை ஏற்கத்தக்கது. இன்று கட்சியை சீரமைக்க முயற்சிக்கும் ஸ்டாலின் கருணாநிதியின் அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். அவர் பின்னால் நிற்கும் சிலரின் எண்ணப்படி மட்டும் நடவாமல், கட்சிக்குள் புதியவர்கள், புதிய சிந்தனைகளுக்கு வாய்ப்புக் கொடுத்தால்தான், ரஜினி & கமல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முடியும் என்ற அவரின் வழிகாட்டுதல்கள் அர்த்தமுள்ளது. மேலும், பிற கட்சிகளுடான உறவுகளைப் பேணி, திமுக வாக்குகளைக் காப்பாற்றுவதும், அதிமுகவுக்கு எதிரான வாக்குகளை அப்படியே அள்ளுவதும் என்ற இரண்டு சவால்களை எதிர்கொண்டு கடந்துவிட்டால் வெற்றி நிச்சயம் என்ற மாலனின் கூற்று அக்மார்க் உண்மை.
மேட்டுப்பாளையம் மனோகர், கோவை.
கேரளப் பழங்குடி இளைஞன் மது கொல்லப்பட்டது மனதைச் சிதற வைத்தது. உண்மையான கொள்ளையர்கள் உலவிக்கொண்டிருக்க பசிக்குப் போராடியவன் அடித்துக்கொல்லப்பட்டான். சட்டத்தை வளைப்பவர்களும், வாக்கு வங்கி பொதுவுடமை பேசுபவர்களும் சிந்திக்கவேண்டிய காலகட்டம் இது. சிறு வெடிப்புகள்தான் பெருத்த விரிசல்களாய் உருவெடுக்கும். கலைஞர் நின்று நிதானமாய் ஆடி நிரூபித்த தமிழக அரசியல் களத்தில் ஸ்டாலின் இன்னும் எவ்வளவு பக்குவமாய் ஆடி வெற்றிபெற வேண்டும் என்பதை அந்திமழை அரசியல் வியூகம் பகுதி ஆழமாகவே சுட்டிக்காட்டியிருந்தது. குறிப்பாக சமூக சீர்திருத்த இயக்கத்துடனான தி.மு.கவின் அரசியல் பயணம் இணைக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் களத்தில் ஆட வேண்டிய எதிர்ப்பாட்டம் பற்றியும் நம்பிக்கையும் பிரச்சினையும் ஒன்றேயான தடத்தில் தடுமாறாமல் செல்லவேண்டியது பற்றியும் குறிப்பிட்டது ஆழமான அலசல்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் வங்கி மோசடிகளை அரசு எடுத்துக்கொள்ளும் விதத்தைப் பார்க்கும்போது, இங்கு எப்போதும் நடக்கும் கிளிகளைக் காப்பாற்ற கூண்டில் அடைத்துவிட்டு பூனைகளை சுதந்திரமாக தப்பிக்கவிடும் அதே போக்குதான் தொடர்கிறது. இனியென்ன? வெளிநாடுகளில் இருப்பவர் பாஸ்போர்ட் முடக்கப்படும். அவர்கள் அரிசி கோதுமை வாங்கமுடியாமல் ரேஷன் கார்டு தடை செய்யப்படும். இதற்கு எங்கே போய் முட்டிக் கொள்வது?
தஞ்சை.என்.ஜே.கந்தமாறன், சென்னை -89.
மார்ச் மாத அந்திமழை அட்டைப்படம் சூப்பர். வெளிநாட்டுப் பத்திரிகை அட்டை போல் தோற்றம் பளபளப்பாக இருந்தது. நடிகை ஸ்ரீதேவியைப் பற்றிய தேவதைகள் மறைவதில்லை என்ற கட்டுரையைப் படித்ததும் என் கண்கள் குளமாயின. இனி எப்போது காண்போம் ஸ்ரீதேவியை? மக்களின் எதிர்பார்ப்பை திமுக பூர்த்தி செய்ய வேண்டும் எனக் கூறும் மாலனின் கட்டுரை சூப்பர். கடைசி ஒன்பது வரிகள் அருமையினும் அருமை!
அ.முரளிதரன், மதுரை-3.
அந்திமழை மார்ச் இதழில் அட்டப்பாடி வனப்பகுதியில் பழங்குடி இன இளைஞர் மது கொல்லப்பட்டதைப் பற்றிய சுகுமாரன் அவர்களின் கட்டுரையை படித்தபோது நாம் கற்காலத்தில்தான் வாழ்கிறோமோ என்ற எண்ணம் ஏற்பட்டது. மனிதம் தொலைத்த மனிதர்களிடம் அகப்பட்ட மது என்னும் மனநலம் குன்றிய மனிதனின் இறப்புக்கு ஒவ்வொரு இந்தியனும் வெட்கப்பட வேண்டும். ஒரு ராக்கெட்டில் பல நாட்டு செயற்கைக்கோள்களை செலுத்தி அதனை துல்லியமாக நிலை நிறுத்தி வானில் சாதனை நிகழ்த்தும் இந்தியா, நிலத்தில் பழங்குடியினரை நசுக்குவது வேதனை அளிக்கிறது. மதுவின் மரணத்தை நினைக்கிறபோது ஹோசிமின்னின் கவிதை வரிகள் நினைவுக்கு வருகிறது.
‘' மலைகளில் புலிகளைச் சந்தித்தேன்; காயமின்றி மீண்டேன்.
சமவெளியில் மனிதனைச் சந்தித்தேன்; சிறையில் கிடக்கின்றேன்.''
நடிகை ஸ்ரீதேவி தொடர்பான கட்டுரை பதின்ம வயதின் நினைவுகளை மீட்டெடுத்தது. நடிப்பு அழகு இரண்டும் கலந்த கலவை ஸ்ரீதேவி. என்னுடைய பள்ளி கல்லூரி காலங்களில் வெளியான ஸ்ரீதேவியின் படங்களை தவறாமல் பார்த்துவிடுவதுண்டு. அந்த அழகு மயிலின் நடிப்பே தனி தான். ஆத்மார்த்தியின் சிறுகதை வாசனைகள் நிரம்பிய உலகத்தில் தனக்கென ஒரு தனி வாழ்க்கையை வழும் ஒருவனின் அக&மன உணர்வுகளின் வெளிப்பாட்டினைத் துல்லியமாகக் காட்டியது.
ஆர்.மோகன், சேலம்-1.
மார்ச் 2018 இதழில் இடம்பெற்றிருந்த தடை தாண்டும் ஆட்டம்; வெற்றிக்கு ஸ்டாலின் செய்ய வேண்டியது என்ன? பல்துறை சார்ந்த ஆளுமைகளின் அரசியல் வியூகக் கட்டுரைகள் அருமை. திமுகவில் செல்வாக்கு பெற்றிருக்கும் பலருக்கும் கழகத்தின் வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வெற்றியை உறுதிசெய்ய ஸ்டாலின் மேலும் உழைக்க வேண்டும் என்ற அந்திமழை இளங்கோவன் உணர்த்தியிருப்பதும், திமுகவின் வாக்கு வங்கியைத் தக்க வைத்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல் அதிமுகவுக்கு எதிரான வாக்குகளைப் பெறவேண்டிய சூழலை உருவாக்கிக் கொள்வதுடன், பிற கட்சியினருடனான உறவைப் பேணி வளர்த்துக்கொள்வது அவசியம் என்று வழிகாட்டும் மாலனின் கட்டுரையும், பெரிய எதிர்க்கட்சி என்ற முறையில் களத்தில் மட்டுமல்ல சமூகக் களத்திலும் திமுகவுக்கு பெரும் பொறுப்பு இருக்கிறது என்று நினைவூட்டும் தோழர் குமரேசன் கருத்தும் கவனிக்கத் தக்கதே. நிற்க. தற்போதைய அரசியல் சூழலை எதிர்கொள்ள திமுக தன் கடந்தகால வரலாற்றுத் தொடர்ச்சியை கொள்கை அடையாளத்தை மீட்டுருவாக்கம் செய்யவேண்டிய அவசியத்தை விடுதலை ராஜேந்திரனும், தேசிய அளவில் நிலைப்பாடு எடுக்கும் அளவுக்கு ஸ்டாலினின் பிம்பம் இன்னும் உருவாகவில்லை எனும் சுபகுணராஜன் கணித்திருப்பதையும் உற்சாகத் தோடு தோழமைக் கட்சிகளின் இணக்கமான நட்பையும் பேணி வளர்த்துக்கொள்வது காலத்தின் கட்டாயம் என்று வாசுகி பாஸ்கர் வகுத்தளித்திருப்பதையும் புறந்தள்ள முடியாத ஆழமான கட்டுரைகள் என்பேன். ஆத்மார்த்தியின் வாசனை புது மாதிரியான சுகந்த மணத்தை நுகர வைத்துவிட்டது.
நவீன்குமார், நடுவிக்கோட்டை - 614 602.
ஏப்ரல், 2018.