யுக்திகள்

யுக்திகள்
Published on

திராவிட இயக்கங்கள் ஆட்சி பீடத்தை அடைந்ததில், மேடைப் பேச்சிற்கு பெரும்பங்கு உண்டு. சிறந்த பேச்சாளர்களுக்காக, எவ்வித சன்மானமும் பெறாமல் நீண்ட தூரம் மக்கள் பயணித்த பொற்காலம் அது. காலப்போக்கில், அத்தகைய பேச்சும்,பேச்சாளர்களும் அரிதானதால், பொதுக்கூட்டங்களுக்கு, விலை கொடுத்து மக்களை திரட்டும் அவலநிலை உருவானது. ஆனால், நவீன தேர்தல் பிரச்சார யுக்திகளின் ஒரு அங்கமாக, புதுமையான மக்களை கவரும் விளம்பரங்களை, ஊடகங்களின் வழியே கொண்டு சேர்க்கும் பாணி பரபரப்பாக அறிமுகமாகியுள்ளது. பத்திரிகை, தொலைக்காட்சி விளம்பரங்களுடன் சமூக வலைதள பிரச்சாரங்களும் குறிப்பிடத்தக்க அதிர்வை ஏற்படுத்தியிருப்பது நிஜமே!

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

மதிப்பு

சிறந்த கட்டுரைகளால் சிந்திக்க வைக்கும் மார்ச் 2016 இதழில் திராவிடக் கட்சிகளின் முதுகுகள் போதுமா? கட்டுரை படித்தேன். இந்தியா பல்வேறு பண்பாடுகள் கொண்ட, பல்வேறு மாநிலங்களைக் கொண்ட ஒரு கூட்டமைப்பே என்பதை தேசியக் கட்சிகள் மறந்துவிடுகின்றன. பறவை இனந்தானே என்று வல்லூறுவையும் வண்ண புறாவையும் ஒரே கூண்டில் அடைத்து வைக்க நினைக்கிறார்கள். இதனால் ஏற்படும் சிக்கலே தேசியக் கட்சிகள் காலூன்ற முடியாமல் போவதற்கு காரணம். மொழியால், இனத்தால், பண்பாட்டால் வேறுபட்டு வாழும் மக்களைக் கொண்ட நாடே இந்தியா என்பதை தேசிய கட்சிகள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மாநில மக்களின் உரிமைகளை நசுக்கிவிட்டு அவர்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதே தேசியங்களின் வெறி. இது எந்தக் காலத்திலும் நடைபெறப்போவதில்லை.மாறாக, வேண்டாத விளைவுகளே ஏற்படும். நல்லெண்ண உறவு பாழ்படும். மொழியால் தமிழன், இனத்தால் திராவிடன், நாட்டால் இந்தியன். இதனை செயல்படுத்துவது தான் திராவிட இயக்கம். இதை புரிந்து கொள்ளாமல் இருக்கும் வரை தேசியம் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது. எனவே மாநில மக்களின் உரிமைகளை மதித்து, அப்படி மதிப்பதால் மாநில மக்களின் மதிப்பை பெற்று வாழ்வதே, இனி எதிகாலத்தில் இந்தியா வல்லர சாவதற்கான வலிமையான அடித் தளம் ஆகும். இதை தேசியத் தலைவர்களும் உணர்ந்து கொண்டால் சிக்கல் எழாது. இன்றேல் சிக்கல்தான்!

நெய்வேலி க.தியாகராசன், பி.ஏ, கொரநாட்டுக்கருப்பூர்.

நன்று

விருந்தினர் பக்கம் கட்டுரைகள் அருமை, குறிப்பாக போராளியின் வாழ்க்கை கட்டுரையை சொல்ல லாம். இப்படி பண்றீங்களேம்மா கட்டுரை அருமை. கடைசி 20 வரிகள் மிகவும் சிறப்பு.

அ.முரளிதரன்,மதுரை - 3

உண்மை

தனிச்சல்ல ஞான்! எனும் தலைப்பிலான கல்பனா (மறைந்த) அவர்களின் நினைவலைகள், படிக்க, படிக்க இதயமும் கனத்தது! கண்களும் குளமானது! இனி வெறும் ஒரு நினைவு மட்டுமாகி விட்டாரே கல்பனா. யாராலும் நினைத்து பார்க்கமுடியாத இழப்புதான் கல்பனா அவர்களுடையது. அவர் ஏழைகளின் காணமுடியாத தெய்வமாக வாழ்ந்தவர். அவர் இருக்கும் இடத்தில் நகைச்சுவையால் அனைவரையும் மூழ்கடிப்பவர், ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்பதுதான் உண்மை.

ஹேமமாலினி,அயனாவரம்

வருத்தமே

ஆண்கள் ஆளும் உலகம் பிரமாதமான தலைப்பை எடுத்துக் கொண்டு ஏன் இப்படி மேலோட்டமாகவே பேசியிருக்கிறீர்கள்? கவர்ச்சி கரமாக அந்த நாள் சூப்பர் ஸ்டார்களுக்கே சவால் விட்ட ‘வன மோகினி' தவமணிதேவி, நடிப்பு, இசை, இயக்கம் என நிலைத்து நின்ற பானுமதி,கொஞ்சநாள் தனக்கேற்றவாறு கதாநாயகர்களை கதைக்கு ஏற்ப தேர்ந்தெடுத்துக் கொண்ட கே.ஆர்.விஜயா, தமிழிலிருந்து தெலுங்கிற்கு சென்று அங்கு 35 படங்களை இயக்கிய ஒரே பெண் எனப்படும் விஜய நிர்மலா, சுஜாதாவுக்கு மாற்று குறைவாகவே சில படங்களில் அமைந்த கதாநாயகர்கள், முழுமையாக இயக்குநராகவே பரிமளிக்க முடியாமல் போன ஸ்ரீபிரியா, ரேவதி, சுகாசினி என்ற ஆய்வுப் பாதைகளில் கட்டுரை அமையாமல் போனதில் கொஞ்சம் வருத்தமே!

தஞ்சை என்.ஜே.கந்தமாறன், சென்னை - 89

logo
Andhimazhai
www.andhimazhai.com