போற்றுதலுக்குரியவர்

போற்றுதலுக்குரியவர்

Published on

நேருவின் 50வது நினைவு நாளை நினைவு கூர்ந்து, நினைவுகளை, கொள்கைகளைப் பகிர்ந்து கொண்ட விதம் எல்லாமே நூதனம்! ஆனாலும் அன்றைய காலகட்டத்தில் அது சரியானதாகவும் இன்று அவை சொதப்பலாகவும் கூட இருக்கலாம்.. ஆனால் நேருஜியின் கலப்பற்ற தேசியப்பற்றை குறைகாண முடியாது,.. நாட்டுப் பற்றும் தொலைநோக்கு திட்டங்களும் , அஹிம்சையின் மீது அவர் கொண்ட நம்பிக்கையும் போற்றுதலுக்குரியவை. காட்சி1, காட்சி 2 , என்று பிரித்து பிரித்து வந்தபாலுமகேந்திரா கட்டுரை படிக்க படிக்க மனசு அந்த ஜாலம் செய்தவரை எண்ணி விம்மியது. திரைப்படங்களை பாதுகாக்க வேண்டும் என்ற அவர் விருப்பத்தை பூர்த்தி செய்யலாமே.

ஜே.சி.ஜெரினாகாந்த், ஆலந்தூர் , சென்னை -16.

அச்சங்கள்

தாராளமயம், தனியார்மயம், உலகமயம், புகழ் காங்கிரசுக்கு எங்கே நேருவைச் சொன்னால் ‘‘கை''விட்ட ஜனநாயகம், சோசலிசம், மக்கள் நினைவுக்கு வந்து விடுமோ? என்ற அச்சம். நேருவைச் சொன்னால் அதன் பலன் நேரு குடும்பத்திற்கு போய் விடுமோ என்ற அச்சம் எதிர் கட்சிகளுக்கு, இந்த சூழலில் அந்திமழை வெளியிட்டுள்ள அரசியல் வித்தகர் நேரு பற்றிய கட்டுரைகள் பல தெளிவுகளைத் தருகின்றன, கலைவித்தகர் பாலு மகேந்திரா நினைவு கட்டுரைகளோ நெகிழ்வூட்டுகின்றன.

பொன் முத்துகுமார் பணகுடி.

காத்திருக்கிறோம்

மரணம் சுமக்கும் மனிதர்களோடு மல்லுக்கட்டும் கருணை இயந்த கையை காட்சிப்படுத்துகிறது நேர்கோடு. பாமரன் பட்டியலிடும் நன்றிக்குரியவர்களை நாமும் நெஞ்சில் நிறைப்போம், ஒரு இரட்சகரைப் போல அற்புதங்கள் நிகழ்த்தி மூன்று உயிர்களை உயிர்த்தெழ செய்திருக்கும் , அற்புதம்மாள் என்கிற அந்த ஒற்றை மனுஷியின் தீரத்தை அறிய காத்திருக்கிறோம் . புத்தகங்கள் மூலமாக சுகுமாரன் முன் வைக்கும் கேள்விகள் பொது வெளியில் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது.

தங்க முருகதாசன், மயிலாடுதுறை

தேவையில்லை

இந்த மாத சிறப்புக் கட்டுரை பல உண்மைகள் உரக்கச் சொன்னது! தன்னை தான் மாய்த்துக் கொள்ள கூட மனிதனுக்கு சட்டத்தில் இடமில்லாதபோது, கொடுங்கோல் மன்னர்களின் சட்டமான தூக்கு தண்டனை ஜனநாயக ஆட்சியில் தேவையில்லாத ஒன்று தான் ! ராஜிவ் கொலை வழக்கில் மரண தண்டனை பெற்றவர்கள் 23ஆண்டுகளாக மரணதண்டனையின் வலியையும், வேதனையையும் கட்டாயம் உணர்ந்திருப்பார்கள் என்பதுதான் உண்மை ! அந்திமழையின் சிறப்பான பணியையும் பாராட்டியே தீர வேண்டும், மரண தண்டனையை ஆதரிப்போர் கண்டிப்பாக பார்க்க வேண்டியபடங்கள் பற்றி படங்களின் பெயர்களை பட்டியலிட்டு அசத்தி விட்டீர்கள் ! உங்க திறமை யாருக்கு வரும் ?

இ.டி.ஹேமாமாலினி, சென்னை - 23.

பாராட்டு

மார்ச் மாத அந்திமழை இதழ் பக்கத்திற்கு பக்கம் புதிய ‘சாரலை' தெளித்து உற்சாகப் படுத்தியது அருமை, நேருவுக்குப் பிறகான இந்தியாவின் 50 ஆண்டுகள் பற்றிய விளக்கம் அரசியல் புரியாதவரையும் புரிய வைக்கும் விதம் தெளிவாக இருந்தது , மனம் நிறைந்த பாராட்டுகள்.

உஷாமுத்துராமன் , திருநகர்.

நன்றி

இனியவை நாற்பது அரசியல் கட்டுரை நடுநிலையோடு அலசப்பட்டிருந்தது, நேருவுக்குப் பிறகான இந்தியா (50ஆண்டுகள்) சிறப்புப் பகுதியில் இடம் பெற்ற கட்டுரைகள் நேருவின் பலம், பலவீனம், இரண்டையும் நன்கு சுட்டிக்காட்டிவிட்டு , அவர் விட்டுச்சென்ற பணியை அவரது குடும்பம் பின் பற்றாத வருத்தத்தையும் நினைவூட்டின. உலகம் உன்னுடையது பகுதியில் இடம்பெற்ற திரு லியோ முத்து அவர்கள் கல்விப்பணிபுரிய கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி இன்று பலருக்கு கல்விபெற நல்ல நல்ல வாய்ப்புகளை அளித்து வருகின்றார், மகிழ்ச்சி, அவருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்க வேண்டும். நினைவுகள் பகுதியில் பாலு மகேந்திராவை படம் பிடித்த ஒரு ரசி கனின் சினிமா காட்சி வருணனை ஓவியமாய் மனதில் நிற்கிறது. இம்மாத அந்திமழை பல நல்ல செய்திகளின் தொகுப்பு எனலாம்.

அ.கருப்பையா , பொன்னமராவதி

பெருமிதம்

தமிழக அரசியலில் எம்.ஜி.ஆர் தொடர் முதலமைச்சராக இருந்துள்ளார், ஆனால் ஜெயலலிதாவை பொருத்தவரை ஒரு தரம் விட்டு ஒரு தரம் ஆட்சி என்பதே உண்மை. பாராளுமன்ற தேர்தல் வேறு ,சட்டமன்ற தேர்தல் வேறு. இது கூட புரியாமல் நாற்பதும் நமதே என்பது, தன்னை தானே ஏமாற்றி கொள்வதை தவிர வேறு அல்ல.

கே.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு.

பொருத்தம்

2 பெண்கள் 2புத்தகங்கள் பற்றிய கட்டுரை படித்தேன். அதில் ஷகீலாவை பற்றிய நூலில் பெண்ணை வெறும் போகப் பொருளாகவும் , கேளிக்கைத் துணையாகவும் நினைக்கும் பொதுப் புத்திக்குக் கொடுக்கப்படும் சாட்டையடி. ஷகீலா ஒரு வகையில் அப்பாவிதான் , ஏனெனில் அவரை அப்படி உருவாக்கியதில் யார் யாருக்கெல்லாமோ பங்கிருக்கிறது, இல்லையா? என கட்டுரையை முடித்திருப்பது சாலவும் பொருத்தம்.

முத்தூஸ் , தொண்டி

நல்ல படைப்பு

எத்தனையோ கதைகளை எத்தனையோ பேர் எழுதினாலும், ஒரு சில தான் படைப்புகளாகத் தேறுகின்றன. அப்படி ஒரு படைப்பு , மார்ச் 2014 அந்திமழை இதழில் வெளியான ஸர்மிளா ஸெய்யித்தின் ‘ வாய்மையின் இன்னபிற' சிறுகதை எனலாம், வலி இரு வகைப்படும். ஒன்று உடல் வலி , அது ஏற்பட்டவருக்கு மட்டுமே வலிக்கும் , மற்றது மனதில் ஏற்படும் வலி , அது ஏற்பட்டவரோடு , உடன் இருப்பவர்களுக்கும் வலிக்கும். அப்படிபட்ட ஒரு வலியைத்தான் மெஹ்ரூன் அனுபவிக்கிறார். கதை முடிவும் சரிதான்.

சு.இராமசுப்பிரமணியன், தோவாளை.

நிராசை

இருப்பதை விட்டு , பறப்பதை பிடிக்க நினைத்தால் இருப்பதும் இல்லாது போகும். அறிந்தும் அதையே செய்ய விரும்புவோரை என்னவென்று சொல்வது. அதிமுகவை பொறுத்தவரை அதுதான் நடக்கிறது. என்னதான் அதிமுக ஆசைப்பட்டாலும் அது நிராசையாகவே முடியும் , கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளது போல் ஆளுக்கு ஒரு பக்கம் இழுத்தால் அடிக்கடி டீ பார்ட்டி தான் நடக்கும் , மூன்றாவது அணியில் அதிமுக , எங்கள் தலைவிதான் பிரதமர் என்று ஏன் அடித்துச் சொல்லவில்லை?

நமசிவாயம், பெங்களூரு.

logo
Andhimazhai
www.andhimazhai.com