வழிகாட்டல்

வழிகாட்டல்
Published on

அந்திமழை ஜூலை 2018 இதழில் ''பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா?'' என்ற சிரிப்பூட்டும் தலைப்பில் வெளியான கட்டுரை கல்லூரிகளில் சேர்ந்து படிக்க முயற்சிக்கும் மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் மிகச்சரியான வழிகாட்டுதலைப் பதிவு செய்துள்ளது. பெரும்பாலான மாணவர்கள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதை கௌரவமாகக் கருதி எவ்வளவு பணம் கொடுத்தாவது அக்கல்லூரிகளில் சேர்ந்து படிக்கப் போட்டி போடுகிறார்களே தவிர தகுதியுள்ளவர்களாகப் படிப்பை முடிப்பதில்லை. இதுகுறித்து அண்ணாபல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் ஈ.பாலகுருசாமி ‘‘நாம் பட்டதாரிகளைத்தான் உருவாக்குகிறோம்; பொறியாளர்களை அல்ல'' என்று குறிப்பிட்டது கசப்பான உண்மை. மாணவர்கள் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அதிலும் அவர்களின் நுண்ணறிவுக்கு ஏற்ப தேர்வு செய்து ஆர்வத்துடன் படிப்பது சாலச் சிறந்தது.

 அன்பாதவன்,

உடுப்பி..

பொதுவான நீதி

படிப்பு மட்டுமே வேலையைத் தரும் என்ற நம்பிக்கைதான் திறமையை வளர்த்துக்கொள்ளாமல் இன்றைய இளைஞர்கள் தொடர்ந்து மடைமாறும் கல்விப் போக்கிற்கு காரணம். இதை சரியாகவே சுட்டிக்காட்டியிருந்தார் கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன். மாணவர்களின் இன்றைய கல்வித்தேர்வுக்கும் வேலை வாய்ப்புப் போராட்டங்களுக்கும் பெற்றோர்கள், அரசியல் பார்வைகள், தொலைநோக்கில்லாத கல்வி முறைகள், கல்வி பற்றி அறியாத பல கல்வித் தந்தைகள் இப்படி வரிசையான காரணங்கள். பொறியியல் கல்வி மட்டுமல்ல. இன்றைக்கு லாபப் பார்வையிலேயே எல்லாம் தீர்மானிக்கப்படுவதால்தான் விவசாயம் தொடங்கி எல்லாத் துறைகளும் இங்கு போராட்டங்களையே சந்திக்கின்றன.  ‘என்ன செய்வா அந்தப் பொம்பளே' குரூரங்களுடன் கூடிய எதார்த்த உணர்வை அறைந்து சொல்லியதில் உள்ளுக்குள் பதற்றம் கூடிக்கொண்டது.

என்னை மாற்றிய எழுத்து, மிகச் சிறப்பான தொகுப்புதான். என்னை மாற்றிய புத்தகம் என்று எதையாவது சொல்ல முடியுமா? என்னைப் பாதித்த புத்தகங்கள் எவை என்ற பட்டியலைத் தரலாம் என்கிற போகன் சங்கரின் பார்வைதான் பொதுவான நீதி. வாசகனாய் படிப்பவர்கள் இலக்குகளுடன் படிப்பவர்கள், கவி மனதுடன் ரசிப்பவர்கள் எல்லோருமே தங்களின் படிப்படியான வளர்ச்சிக்கற்களில் அடுத்தடுத்த எல்லைக்கற்களில் நிற்கிறார்கள், தொடர்கிறார்கள். அதை ஒரு புத்தகம் மட்டுமே தந்துவிடாது என்பதுதான் உண்மை. ஒரு நல்ல வாசகனுக்கு, வாசிப்பவனுக்கு என்ன தேவையோ அதைத் திரட்டி தருவதில் அந்திமழையின் பங்களிப்பு அபாரம்.

 தஞ்சை.என்.ஜே.கந்தமாறன்,

சென்னை

ஆசை நிறைவேறட்டும்!

அந்திமழை ஜூலை இதழில் எனது அபிமான ஆதர்ச எழுத்தாளர் திரு. தி,ஜானகிராமன் அவர்களைப்பற்றி எண்பத்தியொரு வயது இளைஞர் திரு பாரதிமணி அவர்கள் பகிர்ந்த அனுபவங்கள் மிக அருமை. தனது கதைகளின் விமர்சனங்களுக்கு தி.ஜானகிராமன் அவர்கள் அடித்த கமெண்ட் சூப்பர். பாரதி மணி அவர்களின் ஆசை இனிதே நிறைவேற எனது வாழ்த்துகள்.

இரா.கோவிந்தன், டி.வாடிப்பட்டி 

தரமான ஒன்று

பொறியியல் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பற்றிய தகவல்கள் சூப்பர் எனில் அதற்கான படங்கள் டபுள் சூப்பர். சமுத்திரக்கனியின் பேட்டி அவரது படங்களைப் போலவே வித்தியாசமாக இருந்தது. என்னை மாற்றிய எழுத்து

சிறப்புப் பக்கங்கள் அருமை. காமிரா கண்கள் பக்கத்தில் எந்தப் புகைப்படத்தை புகழ்வது எதை விடுவது என்றே தெரியவில்லை. நூல்கள் அறிமுகம் தரமான ஒன்று.

அ.முரளிதரன், மதுரை-3

ஆவலைத் தூண்டுகிறது

அந்திமழை இதழில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நாவல் முன்னோட்டம் பகுதி சிறப்பாக உள்ளது. எழுத்தாளர் யுவன் சந்திர சேகரின் ‘என்ன செய்வா அந்தப் பொம்பளே' நெகிழ்ச்சியான ஒரு முன்னோட்டம் என்பதில் சந்தேகமில்லை. பெரு நகரத்தின் பேருந்து பயணத்தில் தொடங்கும் கதை மெல்ல மெல்ல ஒரு பெண்ணின் துயரம் தோய்ந்த வாழ்க்கையாக உருமாறுகிறது. கைவிடப்பட்ட பெண்களின் துயரத்தை யாரால்தான் முழுமையாக எழுதித் தீர்க்க முடியும்?  யாரோ ஒரு முகம் தெரியாத பெண்ணின் துயரத்துக்கு கண்கள் கசியும் அந்த நடுத்தர வயதுப் பெண்ணின் முகத்தையும் ஓவியர் கொஞ்சம் தீட்டியிருக்கலாம். முழு நாவலையும் படித்துப் பார்க்கும் ஆவலை அதிகம் தூண்டுகிறது நாவல் முன்னோட்டம் பகுதி.  

தியான் சுந்தரம், பெங்களூரு - 560016.

ஆவலைத் தூண்டினர்

என்னை மாற்றிய எழுத்து சிறப்புப் பக்கங்களில் ரஷ்ய இலக்கிய மேதை லியோ டால்ஸ்டாயின் புத்துயிர் நாவலைப் பற்றி எழுதியுள்ள கவிஞர் சுகுமாரன் எழுத்தில் சைபீரிய பனிப்பொழிவையும் பரந்துவிரிந்த ஸ்டெப்பி புல்வெளிகளையும் தரிசிக்க முடிந்தது. கவிஞர் சபரிநாதன் எழுதிய கட்டுரை கூர்மையாகவும் சிறப்பாகவும் இருந்தது. பாப்லோ நெருதாவைப் படித்தவுடன் 'ரசனையில் ஒரு முறிவு, உணர்திறனில் ஓர் விரிவு ஏற்பட்டது' எனக் கூறும் சபரிநாதனின் எழுத்துநடை தெள்ளத்தெளிவாக இருந்தது. போகன் சங்கர், ந.முருகேசபாண்டியன், கே.வி.ஷைலஜா, மனுஷ்யபுத்திரன் ஆகியோரின் அனுபவங்கள்  குறிப்பிட்டு

சொல்லத்தக்கவை. பிரபஞ்சனின் சிறுகதையொன்றை எழுத்தாளர் தமயந்தியும், வண்ணநிலவனின் ‘மல்லிகா' என்ற சிறுகதையை நினைவுகூர்ந்துள்ள சுகாவும் அந்தக் கதைகளைத் தேடிப்படிக்கும் ஆவலைத் தூண்டினார்கள். 

 கமல் சித்தார்த், சென்னை-87.

வண்ணமயம்

 வழு வழு தாளில் வண்ணமயமான செய்திகள். நறுக்குத் தெறிக்கும் உண்மைச் சம்பவங்களை நேரடியாக கள ஆய்வு செய்து மக்களின் பார்வைக்கு அனுப்பும் அந்திமழை. பூமிக்கு மழை போல மனிதருக்கு அந்திமழை. அந்திமழை கையில் இருந்தால் ஆனந்தம் கொள்ளும் மனது. அந்திமழை இதழின் வயதை அட்டையில் வெளியிட்டால் நன்றாக இருக்கும். வாசகர் கடிதத்திற்கு பணம் கொடுத்தாலும் நன்றாக இருக்கும்.

 -ஆ.ர.அருணகிரி, ஆலாம்பாளையம்.

பயனுண்டா?

 அந்திமழை ஜூலை 2018 இதழில் அட்டைப்படக் கட்டுரைகளாக இடம்பெற்றிருந்த வேலையில்லா பொறியாளர்கள் படிப்பும் பதற்றமும், சிறப்புப் பக்கங்களில் விரிந்திருந்த என்னை மாற்றிய எழுத்து போன்ற படைப்புகள் உள்ளபடியே வாசகர்களை ஈர்த்திருக்கும் என்பது திண்ணம். 'இந்தியாவில் உருவாகும் பொறியாளர்களில் 80 சதவீதம் பேர் வேலை செய்வதற்கு லாயக்கில்லை' என்ற கல்வியாளர் பாலகுருசாமியின் கருத்தும், இன்று மாணவர்களையும் பெற்றோர்களையும் சுரண்டும் நிலையில்தான் கல்வித்துறை உள்ளது என்ற கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன் அவர்களின் கணிப்பும், உண்மையை உரக்கக் கூறியிருப்பதாகவே கொள்ளவேண்டும். மூளையில் சுமக்காத கல்வியைக் கற்றுத் தேறி வீட்டுக்கொரு பட்டதாரி உருவாகிவிட்டதால் பயனொன்றும் இல்லை. தரம் வாய்ந்த கல்வியை உருவாக்காமல் ஏட்டுச்  சுரக்காயாக இருக்கும் பட்டச்சான்றால் பயனேதும் விளைந்துவிடாது.

 தி.ஜாவின் புன்னகையை படிப்பவர்களிடையே நகர்த்தி புன்னகை பூக்க வைத்த பாரதி மணியின் பதிவுகள் பளிச் ரகம். புதுமைப்பித்தனின் பொய்க்குதிரை படித்து ‘ தோணித்து அழுதேன்' என்கிற அ.முத்துலிங்கத்தின் மதிப்பீடு, ஜே.கே தொட்ட வரிகளில் கரைந்து சுகம் கண்ட மாலன், வண்ணநிலவனின் மல்லிகா சிறுகதை தந்த சுகானுபவத்தை அளித்த சுகா, பாமரன், கலாப்ரியா உள்ளிட்டோர்களின் கருத்துப் பரிமாறல்கள் வாசகர்களுக்கு இலக்கிய விருந்தென்பதில் மிகையில்லை.

 நவீன்குமார், நடுவிக்கோட்டை- 614602.    

 எடுத்துக்காட்டு

இயக்குநரும் நடிகருமான சமுத்திரகனியின் பேட்டி விரிவாகவும் அவரைப் பற்றி அரிய தகவல்களைக் கொண்டிருந்ததாகவும் இருந்தது. முன்னேறத் துடிப்பவர்களுக்கு அவர் ஓர் எடுத்துக்காட்டு. எளிய பின்னணி இருந்தாலும் சாதிக்கமுடியும் என அவர் நிறுவுகிறார். அதேபோல் பாலாஜி தரணிதரனின் நேர்காணலும் குறிப்பிடத்தக்க விதத்தில் அமைந்திருந்தது.

ரோஜாமணி,

மதுரை.

logo
Andhimazhai
www.andhimazhai.com