தொடரட்டும்

தொடரட்டும்
Published on

எழுத்தாளர் காமுத்துரை, கார்த்திக் புகழேந்தி ஆகியோர் எழுதிய இரண்டு சிறுகதைகள், ஒரு உறவுச்சிக்கல் பற்றிய கவர் ஸ்டோரி, ஒரு நீண்ட அரசியல் நேர்காணல், தேசிய பிரச்சனை பற்றிய ஒரு அலசல் கட்டுரை, செம நக்கலான சினிமா விமர்சனம், வரலாற்றுத் தகவல்கள், சமையல் குறிப்புகள் என்று ஜூலை மாத அந்திமழை இதழ் சரியான கலவையுடன் வெளிவந்திருந்தது. கு.ராமகிருஷ்ணனின் எமர்ஜென்சி தடா அனுபவங்களும் மிகவும் நெகிழ்ச்சியாக அமைந்திருந்தன. உங்கள் பணி தொடரட்டும்!

லட்சுமிகந்தையா, கோவை

வெற்றிச்சிகரம்

இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்பட்ட மாதிரி, ஹீரோக்களாகத் துடிக்கும் நம் காமெடியன்களின் வெற்றி தோல்விகளை அலசிய ‘ பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?' கட்டுரை அருமை. ஒவ்வொரு வெற்றிப்படத்துக்கும், பக்கபலமாய்த் துணைபுரிவதே காமெடியன்களின் பங்களிப்பே. விருந்திற்குச் சுவையூட்டும், பொரியல், கூட்டு, வடை, ஸ்வீட்களை மட்டுமே, எப்படி முழு விருந்தாக உண்ண முடியாதோ, அதைப் போன்றுதான், ஹீரோக்களாக முனைந்து மண்ணைக் கவ்வும் காமெடியன்களின் கதையும் ஹீரோக்கள் காமெடியன்களாகிக் கலக்குவதற்கும் வித்தியாசம் உண்டல்லவா..? நாகேஷ் போன்றவர்கள் வெற்றி பெற்றது கூட சென்டிமெண்ட் படங்களில் அல்ல. வெறும் தோரணங்களால் கிச்சுகிச்சு மூட்ட முயலாமல், நல்ல கதையை முன்னிறுத்தினால், யாரும் வெற்றி சிகரத்தை எட்டிப்பிடிக்க முடியுமே..

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

முற்றுப்புள்ளி

அட்டைக்கட்டுரை, அதிகரிக்கும் கணவன் மனைவி மோதல்கள் பற்றிய இன்றைய நிலையை அப்படியே தோலுரித்துக்காட்டியிருந்தது! இன்றைய நிலையை நினைத்தால் பயம் இல்லாமலில்லை! குடும்ப வாழ்க்கை என்பது கடவுள் நமக்குத்தந்த வரம், இவ்வளவு உன்னத வரம் வேறு ஏதாவது உலகில் உண்டா என்றால் இல்லை, மிக எச்சரிக்கையோடும், விழிப்போடும் இருந்து வாழ்ந்துவிட்டால் சொர்க்கம் வேறு எங்கும் தேடிபோக வேண்டியதில்லை! திடீர் என்று வந்து இணைந்தவர்கள் அல்ல தம்பதிகள் கடவுள் இணைத்த பந்தம்! ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால் அதை மிகைப்படுத்தாமல், விட்டுவிட்டு வாழ்ந்தாலே பிரச்ச னைகள் பறந்தோடிவிடும், நல்ல வார்த்தை மணம்பரப்பும் ரோஜா பூ போன்றது, மோசமான வார்த்தைகள், கூர்மை மிகுந்த முள் போன்றது என்ற நினைப்புடன் வாழ்ந்தாலே, பல பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.

இ.டி.ஹேமமாலினி, சென்னை.

கௌரவம்

அமலாக்கப் பிரிவால் தேடப்படும் ஒரு குற்றவாளி அயல்நாட்டில் சுதந்திரமாக மோசடிப் பணத்தில் சொகுசாக வாழ்ந்து கொண்டு, இந்திய தலைவர்களை அன்றாடம் விமர்சிப்பது அரசியல் சட்டத்திற்கே அவமானமாகும். தப்பு செய்த போதும், தப்பிச் சென்ற போதும் துணை நின்ற பாவத்திற்குத்தான் இன்று அரசியல் தலைவர்கள் பலனை அனுபவிக்கிறார்கள் என்றாலும், லலித்மோடியை உடனே கைது செய்து நீதிமன்றத்தின் முன்னால் கொண்டுவந்து நிறுத்துவதுதான் இந்திய ஜனநாயகத்திற்கு கௌரவமாகும்.

அ.யாழினி பர்வதம், சென்னை.

களம்

மாறும் புரிதல் இல்லாத வாழ்க்கை, திரியில்லாத விளக்குதான். கணவன் - மனைவி என்ற நிலை, இன்று நிலை தடுமாறி நிற்கிறது. காரணம் ஒருவருக்கொருவர் தன் முனைப்புடன் வாழ்வதுதான். இதற்கு முக்கிய காரணங்கள் மூன்று : ஒன்று : படிப்பு இரண்டு : வருமானம் மூன்று : குடும்பம் இவை மூன்றில் ஏதாவது ஒன்று இன்று தம்பதியிடையே ஊடாக நிற்கிறது. நல்ல இல்லறம், இல்லத்தில் மட்டுமல்ல, உள்ளத்திலும் இருப்பின் படுக்கையறை போர்க்களமாகாது; ‘‘போகக்களமாகும்''

கே.ஏ.நமசிவாயம், பெங்களுரு

உளவியல்

அந்திமழை இளங்கோவன் எழுதியுள்ள ‘‘ அதிகரிக்கும் கணவன் மனைவி மோதல்கள் '' கட்டுரை உடற்கூறு மற்றும் உளவியல் சார்ந்தது. கணவனும் மனைவியும் சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அல்லாமல், ஓஷோ சொல்கிறபடி மணவாழ்க்கை என்றில்லாமல், நிரந்தர உறவு நிலைகள் என்றில்லாமல், ஆண்களும் பெண்களும் வாழ்தல் என்பது தீர்வாகாது. அந்த நிலையில் பிறக்கும் குழந்தைகள் அன்னையின் அரவணைப்பு இல்லாமல் அனாதைகள் போல் ஆகிவிடுவர். சமூகம் முற்றிலும் சீர்குலைந்துவிடும்.

க.சி.அகமுடைநம்பி, மதுரை.

உணர்ச்சிகள்

மா.சு.அண்ணாமலை அவர்களின் ‘ என்னை சர்க்காரால் தூக்கிலிடப்படும் ' கட்டுரை நம் தேச விடுதலைக்காக போராடிய மறைக்கப்பட்ட வீரர்களின் வரலாறு. காங்கிரஸ் தான் நாட்டிற்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்தது போன்ற கருத்தாக்கத்தை உருவாக்கி வைத்துள்ளார்கள். அப்துல் காதர் தன் தந்தைக்கு எழுதிய கடிதத்தில் ‘‘மணி அடிக்கிறது. மரணம் எதிர்பார்க்கிறது' என்ற வரிகளை படிக்கும்போது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. பதினெட்டே வயதான ராமுத்தேவரின் வீரம் விதைக்கப்பட்டுள்ளது. டி.பி.குமரன் தான் எழுதிய கடிதத்தில் இரட்டை நாடகமாடும் முறைகளையும் விட்டு மிகச்சீக்கிரத்தில் வெளியேறப்போகிறேன் என கூறியுள்ளார். ஆம், நம்மை அடிமைப்படுத்தியவர்களும், ஆண்டுக்கொண்டு இருப்பவர்களும் நாடகம் ஆடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

தமிழழகன், நாமக்கல்

காமெடி நாயகர்கள்

தமிழ் திரை நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகர்களாக மாறிய இன்றைய படங்கள் அவர்களின் அடுத்த பரிணாம நிலைக்கான முயற்சி கள். இவர்களின் உச்சமும் வீழ்ச்சியும் பற்றி பெட்ரோ மாக்ஸ் லைட்டே தான் வேண்டுமா என்ற கட்டுரையில் கட்டுரையாளர் பிரித்து மேய்ந்துவிட்டார். மணிக்கணக்கில் சம்பளம் பெற்று ஹீரோவுக்கு இணையான சம்பளம் மற்றும் முக்கியத்துவம் இருந்தும் ஹீரோ என்ற தகுதி தனிச்சிறப்புடையது. அது தரும் கௌரவம், மரியாதை, புகழ் வெறும் பணம் என்றும் தராது. ஆனால் இந்த காமெடி கதாநாயகர்களின் படங்கள் வெற்றி அடையாதபோது அவர்களே தோல்வியையும் நஷ்டத்தையும் சுமக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள். பெரும்பாலும் விஷப்பரீட்சையாகி விடுகிறது.

மேட்டுப்பாளையம் மனோகர், சென்னை - 18

logo
Andhimazhai
www.andhimazhai.com