தகவல்மழை! 

தகவல்மழை! 
Published on

                                                                                                             சிறப்புக்கட்டுரையாகட்டும்;சிறப்புப்பக்கங்களாகட்டும்;அனைத்துமே  தகவல் மழை மட்டுமல்ல, ஞான மழையாகவும் அந்திமழை பொழிந்துள்ளது! வீழ்வேன் என்று நினைத்தாயோ? தோல்வியிலிருந்து வெற்றிக்கு என்ற வரிசையில்  ஒரு தாயின் சபதம்! என்று சோனியா காந்தி குறித்த 1997 - 2004 வரையிலான ஃபிளாஷ் பேக் யதார்த்தம் எதிர்ப்பையும் ஏதோ ஒரு உணர்வில் கலந்ததுபோல் உள்ளது. இப்போதைய தோல்விக்கான சூழ்நிலை இதுவும்கூட கடந்துபோகும் என்று நம்பவைக்கிறது! 1991 -1998 வரையிலான பொறுமை, விலகியிருந்த சூழல் இரண்டில் இப்போது விலகியே இல்லாமல் அதே சமயம் பொறுமையாக இருந்தால் போதும்!என்று தோன்றுகிறது.

ஆர்.ஜி.பாலன், திசையன்விளை

கற்கண்டு

செப்டம்பர்  2019 அந்திமழை சுத்த பாலில் கற்கண்டு கலந்த சுவை போன்றது. சித்திரக் குரலோன் 'நன்னன்','பந்தம்' சிறுகதை, அஜித் சொல்லும் பெண்ணியம், மறக்கமுடியாத குரல் டி.எம். எஸ்., வீழ்வேன் என்று நினைத்தாயோ, கலைஞர், தூரிகை ரகு, போன்ற பக்கங்கள் பிரமாதம். அந்திமழை தனது ஆதிக்கத்தை நேயர்கள் மத்தியில் இப்போதுதான் விதைக்க ஆரம்பித்திருக்கிறது!

ஆர். சுந்தரம், கும்பகோணம்.

ஈர்ப்பு

இதழின் அட்டைப்படக் கட்டுரையாக சிறப்புப் பக்கங்களில் விரிந்திருக்கும் இளங்கோவன் வரைந்திருக்கும் கட்டுரை 'வீழ்வேன் என்று நினைத்தாயோ?'. டேக்வொண்டோ என்ற கொரியன் தற்காப்புக்கலையில், தடைகளைத் தகர்த்தெறிந்து தன்னம்பிக்கையுடன் பத்துவயதுச் சிறுவன் தங்கப் பதக்கம் வென்றதையும், சிகாகோவில் தேர்வில் தோல்வியடையும் மாணவர்களை fail என்று சொல்லாமல், நாட் யெட் (Not yet) என்று குறிப்பிடுவார்கள் என்ற செய்தியையும் அறியத் தந்து வியக்க வைத்திருப்பதுடன், ஐன்ஸ்டீன்
சொன்னது போல் ஒரே விஷயத்தை செய்துவிட்டு முடிவை வெவ்வேறாக எதிர்பார்ப்பது கிறுக்குத்தனமானது. மேலும் அடுக்கடுக்கான தோல்விகளைக் கடந்து வெற்றிவாகை சூடியவர்களின் வாழ்வு விட்டுச் சென்றுள்ள தடங்களைப் பின் தொடர்ந்தால் தென்படும் சூத்திரங்களாக ஐந்து பிரிவுகளாக பிரித்து  படிப்பவர்களை ஈர்க்கும் விதத்தில் எழுதியிருப்பது
சிறப்பாக இருந்தது.

நவீன் குமார், நடுவிக்கோட்டை.

தனித்துவம்

அந்திமழை - செப் - 19 இதழில் இடம் பெற்ற ஓவியங்கள் அருமை. தோல்விகளைத் தோற்கடிப்பது எப்படி எனக் கேட்டு, அதற்குத் தீர்வு
சொன்ன வழி முறைகள் சரியான வழிகாட்டல். டி.எம்.எஸ் & சின்
சிறப்பான முகத்தை மணா, மணக்க மணக்க விளக்கி இருந்தார், பெண்ணியம் சார்ந்து அஜித்தை வைத்து இப்போது பேசப்படும் கருத்தை நடிகர் திலகம் வசந்த மாளிகையில் பேசி இருப்பார்.வாணிஸ்ரீயை கெடுக்க முனையும் வில்லனை அடித்து உதைத்து விட்டு இப்படி
சொல்வார்: 'விரும்பாத பெண் விலைமாதாக இருந்தாலும் தொடக் கூடாது!'  பந்தம் சிறுகதை இரு முரண்கள் நட்புச் சொந்தம் கொண்டாடும் சூழல் போக்கில் அந்தம் வரை தொட்டிருந்த விதம் மனதை நெகிழ்த்தியது. அவர்கள் அவர்களே தொடரில் நன்னன் பற்றிய திருமாவேலனின் சொற்சித்திரம் சிறப்பு. ஆனாலும் நன்னனின் தூய்மை மிக்க தமிழ்ச் சேவையை நாம் இன்னும் முழுமையாக உணரவில்லையோ என்ற ஏக்கமும் நெருடுகிறது. வழக்கம் போன்றே தனித்துவம் மிக்கது அந்திமழையின் ...வீழ்வேன் என்று நினைத்தாயோ... ?சிறப்புப் பக்கங்கள் அருமை. இன்னும் நிறையத் தரவும், இந்திய மற்றும் உலக அளவிலான பார்வையில் அது அமையச் செய்யவும் அந்தி மழையால் முடியும். காத்திருக்
கிறோம்..                               

தஞ்சை என்.ஜே.கந்தமாறன், சென்னை.

யதார்த்தம்

தோல்வியினை ஆய்வு செய்யச் சொல்லும் செய்தியாக இருக்கலாம், நாம் நம்மிடம் உண்மையாக இருப்பது அவசியம்  என்று 'வீழ்வேன் என்று நினைத்தாயோ?' எனத் தன் கட்டுரையில் இதழாசிரியர் இளங்கோவன் குறிப்பிடுகிறார். கலைஞர் கருணாநிதியை குறித்து ' அந்த பதின்மூன்று ஆண்டுகள்' என்ற கட்டுரையில் யதார்த்த நிலையை அப்படியே பேசுகிறார். ஒரு கட்சிக்கு எதிராக மிசா சட்டம் மிருகத்தனமாக அவிழ்த்துவிடப்பட்ட காலம் அது. இந்திய அரசியல் வரலாற்றில் அப்படி ஒரு கொடுமை எந்த கட்சிக்கும் ஏற்பட்டதில்லை. ஆனால் மனம் தளரவில்லை, எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தமிழினத்தின் மாபெரும் சமூக பொருளாதார வளர்ச்சியில் கலைஞர் கருணாநிதியின் பங்களிப்பை எவரும் மறுக்கமுடியாது. 48 சட்டமன்ற உறுப்பினர்களுடன் 13 ஆண்டு காலம் எதிர்க்கட்சி தலைவராக சிறப்பாக பணியாற்றினார். அவரின் போர் குணத்தைக் கண்டு தமிழ்நாடு வியந்தது எனலாம். 1980ம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் தோல்வியால்  கலைஞர் சுருண்டுபோய்விடவில்லை.
சென்னை கடற்கரையில் அவர் பேசிய பேச்சு மிக உருக்கமாக இருந்தது: 'என்னை நெருப்பிலே தூக்கி எறிந்தால் நான் விறகாக அடுப்பெரிக்கப் பயன்படுவேன்'. துயரத்தின்  உச்சியிலும் நான் உங்களவன் என்று சொல்லும் பண்பாடு அவருக்கு மட்டுமே உரியது.

இராம. இலக்குமணன், திம்மராஜம்பேட்டை.

வாழ்த்து

கால்நூற்றாண்டுக்கும் மேலாக தன்னம்பிக்கை இதழின் கௌரவ ஆசிரியராக  தன்னம்பிக்கைக் கட்டுரைகளைப் படிக்கும் வாய்ப்பு எனக்கு நேர்ந்திருக்கிறது. ஆனால் வீழ்வேன் என்று நினைத்தாயோ கட்டுரையைப் படித்து முடித்தபோது முழுமையாக ஒரு தன்னம்பிக்கை நூலையே படித்தது போன்ற தாக்கம் இருந்தது. 'சிம்மக்குரலோனை அசத்திய சித்திரக்குரலோன்' என்ற திருமாவேலன் கட்டுரையைப் படிக்கிறபோது கருத்து வண்ணத்துக்குச் சொல்வண்ணம் கூட்டி சுவை வண்ணம் குன்றாமல் கேட்கும்படி மொழிகின்ற நன்னன் எம் எண்ணம் நிறைந்தார். 'எழுத்தையும் எண்ணையும்
சேர்த்து எழுதக்கூடாது' என்பது எனக்குப் பாடமானது. பேராசிரியர் நன்னனை முதன்முதலாகச் சந்தித்தது நினைவுக்கு வருகிறது. தந்தை பெரியார் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, சென்னை பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில், சென்னை மாவட்டக் கல்லூரி மாணவ & மாணவியர்க்கிடையே நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி 4.11.79 அன்று பெரியார் திடலில் நடத்தப்பட்டது. நன்னன் மகள் அவ்வைக்கும் எனக்கும் தான் கடும் போட்டி. அவ்வை முதற்பரிசு பெற்றார். நான் இரண்டாம் பரிசு பெற்றேன். தம்பி நல்ல பேசுறீங்க என்று பேராசிரியர் என்னை வாழ்த்தினார். சிறந்த இதழாக வெளிவருகிற அந்திமழை வாழ்க.

பெரு. மதியழகன், சென்னை.

வருத்தம் தமிழ்ச்சொல்லே

மக்கள் தொலைக்காட்சியில் நன்னன் ஐயா களத்துமேடு உள்ளிட்ட நல்ல பல தமிழ் நிகழ்வுகளை தொடர்ந்து ஆற்றினார்; சிலம்பு கூட சுற்றி வீரத்தமிழனாக விளங்கினார். 'தமிழ்பேசு தங்கக்காசு' எனும் தமிழ் வளர்க்கும் போட்டி நிகழ்வின் நடுவராக இருந்து நடத்தும் வாய்ப்பு எனக்கு வந்தது. நான் நடத்திய நிகழ்வுகள் மூன்றாண்டுகள் ஒளிபரப்பாகின. அதே 'மக்களில்' 'தமிழ்முற்றம், எனும் நேரலை (Live) நிகழ்ச்சி வாயிலாகத் தமிழன்பர்களின் ஐயங்களுக்கு உடனுக்குடன் விடை விளக்கம் தந்து ஆற்றிய பணி பெரும் புகழ்தந்தது.

தினகரன் நாளேட்டில் தினமொரு சொல் எனும் தலைப்பில் பழந்தமிழ் சொற்களுக்கு
விளக்கம் (15 வரி அளவில்) எழுதி வந்தார்கள். ஏனோ அதைத்தொடராமல் சில நாட்களில் நிறுத்திவிட்டார்கள். நாளேட்டின் துணையாசிரியர், நம்மிடம் தொடர்புகொண்டு எழுதுமாறு கேட்டார். இசைந்து, ஓர் ஆண்டு முழுவதும் 'நாளொருசொல்' விளக்கம் எழுதினேன்... இப்படி நன்னன் ஐயா வழியில் நான் நடந்த செய்திகள் இன்னும் பலவுண்டு.

தினமலர் நாளேட்டில், மதிப்புரைப் பகுதியில் திருக்குறள் நன்னன் உரை நூலுக்கு நான் மதிப்புரை எழுதினேன். நன்னன் ஐயா படித்துவிட்டு ஓர் அஞ்சலட்டையில் எனக்குத் தம் மகிழ்வையும் நன்றியையும் புலப்படுத்தி எழுதியதோடு அந்த ஆண்டில் நடைபெறவுள்ள நன்னன்குடி ஆண்டு விழாவில் உரையாற்ற வேண்டும் எனக்கேட்டிருந்தார்கள்.

பிள்ளைபோல் நல்லமனம், தாயனைய அன்பு, பெருந்தன்மை, முனைவர் முதலாய பட்டங்களைவிடப் புலவர் படிப்பை மதித்து தம்நூல்களிலும், பிறவற்றிலும் புலவர் நன்னன் என்றே குறிப்பிட்ட தகைமை என நிரம்பச்சொல்லலாம். அவர், தமிழாழம் கண்ட வேழம்; அவர் உச்சம், நான்
சொச்சம். அவர்தொட்ட பணிகள் சில நாமும் செய்ய இயல்பாக அமைந்தது யான் பெற்ற பேறு. அந்திமழையில் வினவிய வருத்தம் தமிழ்ச்சொல்லே!

கவிக்கோ ஞானச்செல்வன்,

சென்னை.

logo
Andhimazhai
www.andhimazhai.com