மூவேந்தர்கள்

 மூவேந்தர்கள்
Published on

அரசியலும் சினிமாவும் ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை அசத்தலான திரைப்படங்கள் பற்றிய விரிவான & செறிவான அலசல் வியக்க வைத்தது நிஜம்! சிறந்த ஹாலிவுட் அரசியல் படங்களின் பட்டியல் மிக அருமை! எ(இ)ன்றும் இளமை ததும்ப எழுதும் கி.ரா. வுக்கு அகவை - 95 என்று அறிந்ததும் நெஞ்சில் பெருமிதம் எழுகிறது! மனிதர்களை அறிந்த மனிதர் என்று கி.ரா அவர்களைப் பற்றி ‘ராவ்' அவர்களின் ஒவ்வொரு வரியும் கல்லில் செதுக்கிய எழுத்துக்களாய் இதயத்தில் என்றென்றும் பதிந்திருக்கும்! முகப்பு அட்டையில் மூவேந்தர்களின் (சிவாஜி - கலைஞர் - எம்.ஜி.ஆர்) புன்னகை ததும்பும் பொன் முகங்கள் கண்டு நெஞ்சில் பூ மழை பொழிந்தது.

கொ.சி.சேகர், பெங்களூரு

கட்டாயம்

ஒரு படைப்பு என்பது சமூகம் நம்மிடமிருந்து கோரவேண்டும். கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் திவ்யாவின் கருத்து நியாயமானதே. ஆனால் இந்த சமூகம் என்ன மாதிரியான படைப்புகளை அங்கீகரிக்கிறது என்பதில் ஏமாற்றங்கள்தான் மிஞ்சுகிறது. சமூக விழிப்புணர்வான பார்வை இங்கே எத்தனை பேருக்கு இருக்கிறது? எல்லாவற்றையும் செய்தியாகக் கடந்து போகும் மன நிலையில் தானே பெரும்பாலானவர்கள் நகர்கிறார்கள். இவர்களுக்கு மத்தியில்தான் திவ்யா போன்றவர்கள் போராட்டத்தோடு உண்மைகளைப்பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

நந்தவனம் சந்திரசேகரன், திருச்சி.

பாராட்டு

செப்டம்பர்'17 இதழில் நடுப்பக்கத்தில் வெளியாகியுள்ள தாராபுரம் மகேந்திரன் படைத்த 5 புகைப்படக் கவிதைகள் பார்த்தேன், படித்தேன். அவற்றில் இயல்பான இயற்கையான நுண்ணுணர்வுகள் ஊடாடும் காட்சி களைக் கண்டேன் & மீண்டும் கண்டேன் - மீண்டும் மீண்டும் கண்டேன். பரவசமுற்றேன். அவைகள் ஏக்கம், களிப்பு, கவலை, விடிவு, நம்பிக்கை ஆகிய உணர்வுகளை வெளிச்சம்போட்டு விளக்குவதாக அமைந்திருந்தன. பாராட்டுக்கள்.

கவிஞர் மேலை.தமிழ்க்குமரன், முத்தரசநல்லூர்.

பரவசம்

அட்டைப்படம் வித்தியாசமாக இருந்தது, பாராட்டுக்கள். காமிரா கண்கள் படங்கள் பார்க்கப் பார்க்க பரவசத்தை உண்டாக்கியது. மக்ஸிம் கார்க்கியின் தாய் நாவல் பற்றிய இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் கட்டுரை சூப்பர். முத்துமாறனின் த்ரில்லர் அரசியல் கட்டுரை கண்டேன். அதன் ஒட்டுமொத்த கருத்தையும் அதன் ஆரம்பத்தில் உள்ள பொன்மொழி உணர்த்திவிட்டது.

அ.முரளிதரன், மதுரை.

பிரமிப்பு

மாதம், மாதம், மிக துல்லியமாக சிறப்பிதழ் தேர்வில் அந்திமழையை மிஞ்ச வேறு யாராலும் முடியாது. இந்த மாத சிறப்பிதழ் அரசியலும் சினிமாவும், ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை அசத்தலான அரசியல் திரைப்படங்களின் அணி வகுப்பு செம என்று தான் பாராட்டத் தோன்றுகிறது. ஹாலிவுட் படங்களில் அரசியல் பற்றின கட்டுரைத் தொகுப்பும் மனதைக் கவர்ந்தது. சிறந்த அரசியல் தொகுப்பு பட்டியல் பிரமிப்பை ஏற்படுத்தியது. நன்றி.

இ.டி.ஹேமமாலினி, சென்னை.

வாழ்க்கை வரலாறு

ராவ் எழுதிய கி.ரா பற்றிய கட்டுரை படித்து மகிழ்ந்தேன். அற்புதமான கட்டுரைகளை ராவ் ஒவ்வொரு இதழிலும் தனது அனுபவத்தை எழுதினால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். தவிரவும் அவரே அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதச்சொல்லி தொடராக வெளிவந்தால் நல்லது.

தீபம் எஸ்.திருமலை, வேளச்சேரி.

விதியின் சதி

26 - ஆண்டுகளுக்குப் பிறகு ‘‘பரோலில்'' வந்திருக்கும் பேரறிவாளன், அவரது தாய், தந்தை, சகோதரிகள், பால்ய நண்பர்களுடன் மனம் பூரித்து மகிழ்ந்திருக்கும் வேளையில், வன்னி அரசு, அவரை சந்தித்து உரையாடியது பற்றிய கட்டுரை அவர்கள் அருகில் இருந்த உணர்வை நமக்கு அளிக்கிறது. ‘‘விதி செய்த சதி'' பேரறிவாளனை அவரது 19&வது வயதில் சிறையில் அடைத்தது கொடுமை. அடுத்து அவரைப்பற்றிய செய்திகள் அனைத்தும் கல்நெஞ்சங்களையும் கரையச்  செய்வன. மிகப்பெரிய அரசியல் சூழ்ச்சி, பேரறிவாளனை கால்நூற்றாண்டுக்கும் மேலாக சிறையில் வைத்திருப்பது, நியாய தர்மத்திற்கு நிச்சயம் எதிரானது. தூக்குதண்டனைக் கைதியாக, சிறையில் பல்வேறு இம்சைகள், அவமானங்களை சகித்துக்கொண்டே பேரறிவாளன் பல மேற்படிப்புகளையும் படித்துத் தேறியதோடு, ஏனைய சிறைவாசிகளையும் படிக்கவைத்து, பண்படுத்திய செய்தி வியப்பிற்குரியது. மேலும் சி றைக் கலையரங்கில் பாட்டு, பட்டிமன்றம், நாடகம் மூலம் சிந்தனையைத்தூண்டும், கலை நிகழ்ச்சி களை நடத்தியதோடு, சிறை வளாகம் முழுவதும் பழ மரங்கள், காய்கறித் தாவரங்கள், மலர்ச்செடிகளை வளர்த்துப் பசுமையாக்கியதும் பேரறிவாளனின் தனிச்சிறப்பு.

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை.

மகிழ்ச்சி

கார்ப்பரேட் சாமியார் பாபா குர்மீத் ரஹீம்க்கு கொடுக்கப்பட்ட சிறைத் தண்டனைக்கு பத்திரிகையாளர் ராமச்சந்திர சத்ரபதியின் கடிதமும் ஓர் காரணம் என்பது மகிழ்ச்சியே. சல்மான்கான் வழக்கிலும் ஒருவர் அனாதையாக்கப்பட்டார்(சில மாதங்களுக்கு முன்பு அந்திமழை இதழில்தான் படித்தேன்). உண்மைகளைப் போலிகள் கொலை செய்து கொண்டே இருக்கின்றன. ச த்ரபதியின் மரணத்திற்கும் நீதி கிடைக்கவேண்டும், சிறைப்பறவை பேரறிவாளனுக்கு தற்காலிகமாகக் கூண்டு திறக்கப்பட்டது மகிழ்ச்சியை தந்தது, நிரந்தரமான விடுதலை கிடைத்தால் பெரும் மகிழ்ச்சி.

தமிழழகன், நாமக்கல்.

ஆவல்

சாதியும் கட்சியும் என்ற சுகுமாரனின் கட்டுரையும், எங்கே சோழனின் குண்டலம் என்கிற எம்.கே.மணியின் கட்டுரையும் அருமை. மலையாள அரசியல் படங்கள் பற்றிய விரிவான அலசல் சுகுமாரனின் கட்டுரையில் பரவிக் கிடந்தது. அதிகம் அறிந்திராத துலாபாரம் படத்தைப் பற்றி எம்.கே.மணி எழுதியிருந்தது படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டியது. செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்தைப் பற்றிய பார்வை வித்தியாசமாக இருந்தது. மலையாளம் தமிழ் என இரண்டு மொழிகளின் அரசியல் படங்களைப் பற்றிய கட்டுரை இதழின் கனம் கூட்டியது என்றால் அது மிகையில்லை. எனினும் தமிழின் முக்கியமான படமான ‘இருவர்' பற்றி யாரேனும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்.

கமல் சித்தார்த், அம்பத்தூர்.

திருப்தி

செப்டம்பர் மாத இதழில் சிவபாலனின் சிறுகதை ஒரு தெளிவான நீரோட்டம் போலதான ஒரு கதை. கதை ஆரம்பித்து முடிவை நோக்கி நகரும் போது காணாமல் போன அவன் மீண்டும் கிடைத்து விடுவானா என்று, படிக்கும் நமக்கும் பதட்டம் தொற்றிக்கொள்கிறது. மகள்களின் எதிர்பார்ப்புகளால் மனம் துவளும் நர்ஸ் சரளாவுக்கும், தன் உறவினர்கள் வந்து தன்னை அழைத்துப் போவார்கள் என்று காத்திருக்கும் வசந்தகுமாருக்கும் எந்த ஒரு வித்தியாசமுமில்லை என்பதை அழகாக நமக்குப் புரியவைத்து விடுகிறார் ஆசிரியர் சிவபாலன். ஒரு நல்ல கதை படித்த திருப்தி. வாழ்த்துகள்.

மது நீலகண்டன், திருவண்ணாமலை.

logo
Andhimazhai
www.andhimazhai.com