சாதனையாளர்கள்

சாதனையாளர்கள்
Published on

திமுகவில் நடப்பது சகோதரயுத்தம்,ஆனால் அது அதிகாரத்துடன் கூடிய சொத்து விவகார யுத்தம்.அதேசமயம் இது போன்ற சம்பவங்கள் திமுகவில் நடப்பது ஒரு நாடகமாக கூட இருக்கலாம்.தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர அழகிரி மீது நடவடிக்கை என்பதாக கூட இருக்கலாம். தங்களது கட்டுரையில் ‘‘அதிகாரம்'' என்ற போதை எப்படி ஆட்டிப்படைத்துள்ளது என்பதும் நன்கு புரிகிறது. அரசியலில் மூத்தவர் & இளையவர் என்பதெல்லாம் பார்க்க முடியாது. தன்னைத்தானே தயார்படுத்திக்கொண்டு முன்னேற வேண்டியதுதான்.இதையும் அழகாக அருமையாக & புரியும்படி & ‘‘மேக்னஸ் கார்ல்ஸன்'' என்ற செஸ் சாம்பியனை உதாரணம் காட்டி புரியவைத்துள்ளீர்கள். சாதனையாளர்கள் பிறப்பதில்லை. தானே உருவாகிறார்கள்.

கே.ஜி.ஸ்ரீராமன்,பெங்களூரு.

கவிதைக்கும்

சில பக்கம்! ‘இனிது இனிது' தமிழில் வெளியான காதல் கவிதைகள் பலவற்றை வெளியிட்டு,காதலின் அருமையை,வலியை,குரூரத்தை என எல்லா உணர்வுகளையும் ஒரு சேர வழங்கியுள்ளீர்கள். ஒரு கவிதைக்கும் பிற கவிதைக்கும் இடையே, மொழி வெளிப்பாட்டில் வேற்றுமை காணப்படினும், அவற்றின் அடிச்சுவடாக ‘காதல்' எனும் உணர்வே மேலோங்கியுள்ளது. கல்யாண்ஜி, பிரமிள், ஆத்மாநாம், பிரம்மராஜன், சுகுமாறன், வைத்தீஸ்வரன் போன்ற ஆளுமைகளின் கவிதைகள் தமிழுக்கு கிடைத்த கருவூலங்கள். அந்திமழை இனிமேல் கவிதைகளுக்கும் சில பக்கங்களை ஒதுக்கவேண்டும்.

கு.இரவிச்சந்திரன்,ஈரோடு

ஆண்களின் ஆற்றாமை

போராட்ட முதல்வர்கள் பற்றிய சிறப்புக்கட்டுரை பழைய போராட்டத்திற்கான காரணங்களை நினைவுகூற வைத்த பட்டியல் எனலாம். இதில் கடைசியாக போராடிய கெஜ்ரிவால் மட்டுமே ஜெயித்தவரும் ஆவார்; தோற்றவரும் ஆவார். காதல் சிறப்பிதழில் வெளியான 50 காதல் கவிதைகளிலும் ஆண்களின் ஆற்றாமையும், இயலாமையும், பெண்களின் ஆதிக்கத்தன்மையும் வெளிப்பட்டிருந்தன. கடைசிப் பக்கத்தைப் படித்தபோது தமிழ்கவியுடன் நாமும் கண்ணீரைத் துடைக்க நேர்ந்தது.

அ.கருப்பையா,பொன்னமராவதி

என்ன வித்தியாசம்?

கல்யாண நாள் அன்று கட்டிய மனைவியை அடித்து கண்ணீர் சிந்த வைக்கும் கணவனுக்கும் காதலர் தின மாதத்தில் காதலைப் போட்டு பிலு பிலு வென்று உரித்துப்போடும் கவிதை, கட்டுரை போட்ட உங்களுக்கும் என்ன வித்தியாசம்? ஆறுதலுக்காக வைரமுத்து கவிதையாவது போட்டீர்களே! என்ன இமையம் சார் இப்படி உடைந்து போய்விட்டீர்களே! கைத்தடியை தூக்கி அலையும் கலாச்சார போலீசுக்கு போட்டியா நீங்களுமா?

பொன்.முத்துக்குமார்,பணகுடி.

பாராட்டு

காதல் சிறப்பிதழ் பாராட்டுக்குரியது. என்னுடைய சகப்பேராசிரியராக இருந்து என் போராட்டங்களில் துணையிருந்த கவிஞர் மீராவின் கவிதையை முதல் கவிதையாக வெளியிட்டிருக்கிறீர்கள். மீரா அவர்கள் இறந்தும் வாழ்கிறார். என்னுடைய இலக்கிய நண்பர்களிடம் அந்திமழை இதழைக் கொடுத்து மகிழ்ந்தேன்.

நா.தர்மராஜன்,சிவகங்கை

துணிச்சல்

அடுத்தவரின் அந்தரங்கத்தை அம்பலமாக்கி,காசு பார்க்கும் இயக்குநர்களையே பார்த்துப் பழகிய நமக்கு, தனது சொந்த அந்தரங்கத்தை வெளிப்படையாக பதிவு செய்யும் திரைப்படத்தை உருவாக்கிய நேர்மையும், துணிச்சலும் சத்யஜித் ரேயை ஒரு தலை சிறந்த இயக்குநர் என்பதைவிட உண்மையான மனிதராக உயர்ந்து நிற்பவர் எனவும் அடையாளம் காட்டுகிறது. இது போன்ற பல அரிய செய்திகளை தேடிக்கொணர்ந்து வாசகர்களுக்கு வழங்கும் சுகுமாரனையும், அந்திமழையும் சேர்ந்தே பாராட்டலாம்.

சு.இராமசுப்ரமணியன், தோவாளை

அருமை

காதல் சிறப்பிதழில் இனிதாக பூத்த 50 கவிதைப்பூவும் அருமை. ஒவ்வொரு கவிதையும் வாசமிக்க பூவாக இருந்ததை படித்தவர் மட்டுமே உணரமுடியும். அதை அப்படியே மாலையாக கட்டி கழுத்தில் அணிந்து கவிதை மழையில் நனைய வைத்த ‘அந்திமழை' இதழுக்கு பாராட்டு கலந்த நன்றி.

உஷா முத்துராமன்,திருநகர்

உண்மை

அரசியலையும்,பிரச்னைகளையும் என்றைக்குமே பிரித்து பார்க்க முடியாது என்பது உண்மையானாலும் கழகத்தில் உடன்பிறப்புகளுக்கிடையே உண்டான கலகம் இன்று ஏற்பட்டதல்ல! என்றோ,எப்போதோ அதற்கான கொம்பு சீவப்பட்டுவிட்டது என்பதே அப்பட்டமான உண்மை.

ஏ.ஷாகுல் ஹமீது, மங்கலம்பேட்டை

பெருமிதம்

அட அப்படிபோடு! தமிழின் சிறந்த காதல் கவிதைகள் மீராவில் ஆரம்பித்து,கமலஹாசன் அவர்களின் கவிதை வரைக்கும் அருமையாக பிரசுரித்து அசத்திய அந்திமழை காதல் கவிதை மழையாக பொழிந்து நனைத்தது.

இ.டி.ஹேமமாலினி, அயனாவரம்

பேரகராதி

போன்சாய் பூக்களாய் சிரிக்கும் நகரத்துக்காதல்,செம்புலப்பெயல் நீராய் கலக்கும் கிராமத்துக்காதல், சத்யஜித்ரேயின் சாகாக்காதல் என்று காதலின் பல்வேறு முகங்களை தரிசிக்கத் தருகிறது அந்திமழை. ஆகச்சிறந்த கவிதைகளால் நிரம்பிவழியும் பக்கங்கள் காதல் தேசத்தின் பேரகராதி..!

தங்க.முருகதாசன், மயிலாடுதுறை

காதலுடன் அந்திமழை

பிப்ரவரி இதழ் காதலுக்கு மரியாதை செய்து - காதலை ஆராதித்த காதல் இதழ். அது மட்டுமா? ஒரு மலர் வீசும் மணம் நுகர்ந்தாலே,மனம் நிறையும். ஆனால் ஒரு மலர் வனத்துக்குள் நுழைந்த பிரமிப்பு ஏற்பட்டது கவிதை வளத்தைக்கண்டு. காதலை எப்படியெல்லாமோ சிறப்பிக்கலாம். கவிதை மலர்க்கதம்பம் தொகுத்து - தொடுத்து - இப்படியும் சிறப்பிக்க முடியும் என்றது உண்மையில் சிறப்பு.காதலுடன் வாழ்த்துகிறேன்..!

கே.ஏ.நமசிவாயம், பெங்களூரு

வளர்பிறை

சகோதர யுத்தம் பற்றிய அந்திமழை இளங்கோவன் அவர்கள் சிறப்புக் கட்டுரை மிகவும் சிறப்பு. இறுதியில் தரப்பட்டிருக்கும் கருத்துகள் கட்டுரையின் மணிமகுடம்..! காதல் கவிதைகள் காதலர்களுக்கு கிடைத்த தமிழ் அமுதம்!மொத்தத்தில் வாழ்வியல் நெறி கூறும் வண்ணத்தமிழ் இதழ் அந்திமழை! வளர்க வளர்பிறை போல்!

நெய்வேலி க.தியாகராசன், குடந்தை

logo
Andhimazhai
www.andhimazhai.com