கொண்டாட்டம்

கொண்டாட்டம்
Published on

வாழ்வில் மகிழ்ச்சிகரமான தருணங்கள் வாய்ப்பது அரிதானது மட்டுமல்ல, அருமையானதும் கூட. அத்தருணங்களில் நாம் நம்மை எவ்வாறு வெளிப்படுத்திக்கொள்ள விரும்புகிறோம் என்பது ஒவ்வொருவருக்கும்  வேறுபட்டதாகவே இருக்கும். திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள், பதிப்பாளர், எழுத்தாளர்கள், கவிஞர்கள், மருத்துவர், பேச்சா ளர்கள், ஓவியர், பேராசிரியர், இதழாளர், ஒளிப்பதிவாளர், பரத நாட்டியக் கலைஞர், தொலைக்காட்சி விவாத நெறியாளர், மேடை நடிகர், குழந்தைகள் உரிமைச் செயல்பாட்டாளர், இந்தியவியல் - சிந்துவெளி ஆய்வாளர் என்று பல்வேறுபட்ட துறைகளைச் சார்ந்தவர்கள் தங்களின் மகிழ்ச்சிகரமான தருணங்களை எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பதன் தொகுப்பாக அமைந்த ‘தினந்தோறும் கொண்டாட்டம்‘ சிறப்புப் பக்கங்கள் கொண்டாடப்பட வேண்டிய பக்கங்களாக அமைந்திருந்தன.

மு. இராமு, திருச்சி

நியாயம்

 சிநேகிதமாய் ஒரு கலைஞனோடு அவரது வாழ்க்கை குறித்து எதார்த்தமாக நாமே நேரில் விவாதிப்பதுபோன்ற உணர்வை, பளிச்சென்ற ஒளிப்பதிவால் நிஜம்போல உணர வைக்கிறது, அந்தி மழை Youtube சேனலின் ‘சாட் வித் சென்‘. ராஜீவ்மேனன் எபிசோடை பார்த்துவிட்டு கட்டுரையை வாசிப்பது நிருபர் பணிக்கு முயற்சிப்பவர்களுக்கு நல்லதொரு பாடப் பயிற்சியாகும். மறைந்த தாய் நினைவாக ராஜீவ் மேனன் உருவாக்கிய பாடல் நிஜமாகவே நம் தாயை நினைத்து உருக வைக்கும். பாடல்வரிகள் ராஜீவ் மேனனை நல்ல கவிஞரென நிரூபித்தது.

 ‘பண்டிகை தினத்தன்று மட்டுமல்ல, எல்லா நாளும் கொண்டாடப்பட வேண்டிய தகுதி உங்கள் வாழ்க்கைக்கு உள்ளது' என்ற அந்திமழை இளங்கோவனின் அசரீரி..  40 வி. ஐ. பி. கொண்டாட்டங்களையும் படித்து முடித்தபோது, ‘உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா, இதை உணர்ந்து கொண்டால் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா' என்ற கண்ணதாசன் வரிகளை ஞாபகத்துக்குக் கொண்டுவந்து வந்து, அந்திமழை இளங்கோவனின் அசரீரியை நியாயப்படுத்தியது.

அ. யாழினிபர்வதம் சென்னை.78.

கொடுமை

ஆழி சூழ் உலகம் நாவல் பிறந்த கதையை உருவாக்கிய ஜோ டி குரூஸ் கட்டுரை சிறப்பு. புத்தக வாசிப்பு ஒரு மனிதனை எப்படி உருவாக்குகிறது என்பதை சிறப்பாகக் குறிப்பிடுகிறார். படித்த படிப்பும் சில நேரம் கை கொடுக்க வில்லை. அதோடு மதவெறி சாதிவெறியோடு அலைகிற காட்சியைப் பார்க்கின்றோம். பாலித்தீவு பற்றி பிரபாகர் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார்.

சிறு குழந்தைகளை வைத்து பாலியல் பிழைப்பு நடத்தும் தொழில். தப்பினால் வெட்டி சமையல் செய்து சாப்பிடச் சொல்லும் கொடுமை. நம் இந்திய நாடு எவ்வளவு பரவாயில்லை.  கவிஞர் கபிலன்  முன்னேறுவதற்கு வழி வகுத்தவர்களை நன்றி மறக்காமல் நன்றி கூறியுள்ளார். இரா. சண்முகவேல், கீழக்கலங்கல் கொள்ளை கொண்டது பாலித்தீவினை நேரல் கண்டது. போன்று இருந்தது பிரபாகரின் கட்டுரை. கடைசிப்பத்தி, தர்ம சிந்தனை, சமூகப்பொறுப்பிற்கு மாந்தர்கள்  ஆற்றவேண்டிய கடமைகளும் எழுத்தாக்கங்களில் வடிக்கும் நல்லெண்ணம் கொண்டோரால் மட்டும் எழுதக் கூடிய வரிகள். ஆயிஷா கதை எழுதி என் உள்ளத்தைக் கொள்ளைக் கொண்ட எனதருமை இரா.நடராஜன், ‘அகனமர்ந்து' குறளைக் கொண்டு அசரவைத்துவிட்டார். கலாய்க்கவும் வைத்துவிட்டார். எழுத்து,மேற்படி இருவருக்கும் சேவகம் செய்கிறது. ஜோ.டி.குரூஸ்  கட்டுரை சமுதாய அக்கறையுள்ள நல்ல மனிதரின் ஆதங்கங்களைச் சொல்கிறது. அவருக்கு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. அறிந்து நேரில் சென்று பாராட்டி மகிழ்ந்தேன்.

டி.கே. சுப்ரமணியன், விழுப்புரம்

நிறைவு

பெரும்பாலான கொண்டாட்டங்கள் விதவிதமான உணவில் தான் நிறைவு கொள்கின்றன. திருமூலர் இதைத் தான் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்றாரோ!

சிகரத்தை அடையலாம். அதற்கு முயற்சியும் பயிற்சியும் அவசியம். முயற்சியுடையார் இகழ்ச்சியுடையார். கபிலனின் நேர்காணல் அதைத்தான் முன்னிறுத்துகிறது.

'யாகாவாராயினும் நா காக்க' என்பதுதான் 'யானை வெடி'சிறுகதைக்கு அடிப்படை.

வெ. சின்னச்சாமி, மானூர் - பழனி

 நன்று

‘ஆழி சூழ் உலகு' நாவல் பிறந்த கதையை மிக யதார்த்தமாகவும், உண்மைத் தன்மையுடனும் உணர்வுப் பூர்வமாகவும் பதிவு செய்து இருக்கிறார் ஜோ டி குரூஸ்! கவிஞர் கலாப்ரியாவின் ஒட்டுவாரொட்டி சிறுகதை கவித்துவ நடைச்சித்திரமாக  அழகூட்டப் பெற்றிருந்தது. பன்னாட்டுக் கருத்தரங்கு நிகழ்விட உரையாடல்கள், பிரிந்த தோழர்கள் கேசவன்- நந்தினி மீள இணைய நேரும் சந்தர்ப்பங்கள், கூட்டுக்குழு தோழர்களின் புன்னகை முகங்கள் வழி கிடைக்கும் அனுபவங்கள் கதை வழி காட்சிப்படுத்தப்பெற்றிருப்பது சிறப்பு. அந்திமழை இளங்கோவன் தொகுத்திருந்த தினந்தோறும் கொண்டாட்டம்-பல்துறை கலைஞர்களால் பகிர்ந்தளிக்கப் பெற்றிருந்த மகிழ்வான தருணங்கள் ஒவ்வொன்றும் நன்று!

பிரேமா அரவிந்தன்,  நடுவிக்கோட்டை

சிறப்பு

ஒட்டுவாரொட்டி சிறுகதை  மனிதர்களில் ஆண்களும் பெண்களும் கூட அப்படித்தான் என்பதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்தது. இயந்திர மனிதர்கள் மனிதர்களுக்குப் பணிகளைச் செய்து உதவலாம். ஆனால் தனிமையின் தவிப்பைப் போக்க இயலாது. அகனமர்ந்து எனத்தொடங்கும் திருக்குறளை அங்கதச்சுவை மிளிரும் கதையாக்கியிருந்த ஆயிஷா நடராஜனின் யானை வெடி சிறுகதை சிறப்பாயிருந்தது.

முத்து வள்ளிமயில், முத்தரசநல்லூர்

வைரங்கள்

எனது கொண்டாட்டங்களில் 40 அனுபவங்களும் 40 வைரங்களாக ஜொலிக்கின்றன. பல்துறை வித்தகர் ராஜீவ் மேனனின் பேட்டி அருமையிலும் அருமை. ஜோ.டி.குரூஸ் கட்டுரையைப் படித்ததும் அவரது புதினத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது.

அ.முரளிதரன், மதுரை

மகிழ்ச்சிக்குரியது

 சிறப்பான கொண்டாட்ட உணர்வைத் தந்தன நாற்பது பிரபலங்களின் வித்தியாசமான அனுபவங்கள். யானை வெடி சிறுகதை மூலம் மலரும் நினைவுகளில் என்னை ஆழ்த்தினார் ஆயிஷா நடராசன்.

பாடலாசிரியர் கபிலனுக்காக சினிமா கதவைத் திறந்தவர்கள் குறித்த நேர்காணல் அருமை. கலாப்ரியாவின் ஒட்டுவாரொட்டி சிறுகதையில் நடப்பைப் போகிற போக்கில் உணர்த்திய விதம் அவருக்கே உரிய தனித்துவம். இலக்கற்ற பயணங்களின் இரசனையில் இம்முறை மிரளவும் வைத்துவிட்டார் இரா.பிரபாகர். மனித மாமிசம் தின்ற கதைதான் அது.

ஜோ டி குரூஸ் - ன் வாழ்வின் பதிவு குறித்த சுயவிவரம் இன்று மிகவும் தேவையான ஒன்று. அது இன்றைய பல இளம் எழுத்தாளர்களிடம் தென்படுவது மகிழ்ச்சிக்குரியதே.

தஞ்சை என்.ஜே.கந்தமாறன்,

சென்னை -  89.

சில்லிட்டது !

இரா. பிரபாகர் இலக்கற்ற பயணங்களில் சொல்லியிருந்த பாலி நகரத்து பாலியல் பெண்கள் நரமாமிசம் சாப்பிட்ட பரிதாபம் கலந்த கையறுநிலை படித்தபோது மனம் பதறியது, உ டல் சில்லிட்டது. சுற்றுலா, கலாசாரம், பண்பாடு, நாகரிகம் என்ற போர்வைக்குள் தெற்காசிய நாடுகளில் பெண்களின் அவல நிலையை கட்டுரையாளர் காட்சிப்படுத்திய விதம் அருமை. மகிழ்ச்சியான தருணம் எது என்ற கேள்விக்கு பல கோணங்களில் அமைந்த பிரபலங்களின் பதில்கள் சிந்திக்க வைத்தன. பேரா. கு. ஞானசம்பந்தன் அவர்கள் தனது மகிழ்ச்சியான தருணம் குறித்து சொல்லும் போது தமிழர்களின் 'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும்' மாண்பினை பறைசாற்றும்படி பதில் சொல்லியிருந்தது பெரும் சிறப்பு.

கரு. பாலகிருஷ்ணன்,

பெரிய காரை.

 ஆச்சரியம்

‘கதை எழுதி 1900 கோடி சம்பாதித்தவர்‘ கட்டுரையில் ஆங்கிலக் கதையுலகின் மாஸ்டர் ஜெப்ரே ஆர்ச்சர் அவர்களின் கதை எழுதும் பயணத்தையும், கதை எழுதுபவர்களுக்கு அவர்

சொல்லும் வழியும் ஆச்சரியம் அளித்தன.

மீ. யூசுப் ஜாகிர், வந்தவாசி.

ரசித்தேன்

இயக்குநர் மிஷ்கின் நேர்காணல் ரொம்ப இயல்பாக தன்னடக்கமாக உள்ளது. படம் செத்துருச்சு சார் என்ற ஆதங்கத்தைக் கேட்டும் சலிக்காமல்  மிஷ்கின் நம்பிக்கை மிஸ் ஆகாமல் ஹிட் ஆன மேட்டரை அமைதியாக ரசித்தேன்.

மருதூர் மணிமாறன், இடையன்குடி

ஒரு இஞ்சி டீ சொல்லுங்க!

ராயல்டி தராமல் ஏமாற்றும் பதிப்பகங்கள், மலிவான சன்மானம் தரும் பத்திரிகைகள், விவாதங்களுக்கு அழைத்து இலவச விளம்பரம் என்று சொல்லி, வெறுங்கையோடு அனுப்பும் டி.வி சேனல்கள்!  இந்த லட்சணத்தில் எழுதியே இங்கிலீஷ் எழுத்தாளர் ஜெப்ரே ஆர்ச்சர் ரூ1900 கோடி சம்பாதித்ததை கேள்விப்பட்டால், தமிழ் எழுத்தாளர்களுக்கு ஹார்ட் அட்டாக்கே வரலாம்.

என்று எழுதியதோ! இன்று காஸா எல்லையில் நடக்கும் போருக்கும் பொருந்தும் பாலஸ்தீன கவிஞர் மஹ்முத் தர்விஷ் கவிதை, கொல்லப்பட்ட பாலஸ்தீன கவிதாயினி ஹெபா அபு நடாவுக்கு அஞ்சலியாகவும் அமைந்தது. நல்ல நடையில் செய்தி சாரல் தொகுப்பவருக்கு மழைக்காலத்தை முன்னிட்டு, ஒரு இஞ்சி டீ சொல்லுங்கப்பா!

அண்ணா அன்பழகன்

அந்தணப்பேட்டை

logo
Andhimazhai
www.andhimazhai.com