நன்றிகளும் பேரன்புகளும்

October_2024 Wrapper
Published on

அக்டோபர் மாத அந்திமழை இதழில் பிரசுரமான சிறப்புப் பக்கங்களில் இடம்பெற்ற கொஞ்சம் சிரிங்க பாஸ்! - நிஜ வாழ்க்கை காமெடிகள் கலகல உணர்வைத் தந்தன. எத்தனையோ ஆளுமைகளும் நகைச்சுவை உணர்வோடு இருந்திருப்பது ஆச்சரியம்தான்.

எந்த சூழ்நிலையிலும், மன உளைச்சலிலும்கூட சிரிப்பு என்னும் உணர்வைக் கடந்து வந்திருக்கிறார்கள். அது அவசியமானது. நம்மை நாமே புதிப்பித்துகொள்ள புன்னகை அவசியம் என்பதை உணர்த்தியது. புன்னகை இனிது, எவ்வளவு சிறியதாக இருந்தாலும். அவ்வளவு உண்மை சிறப்புப் பக்கங்களைத் தொகுத்த ஆசிரியர் குழுவுக்கு நன்றிகளும், பேரன்புகளும்.

மீ. யூசுப் ஜாகிர், வந்தவாசி.

ஆழம்

தீபாவளி சிறப்பிதழாக, சிறப்புப் பக்கங்களில் நிஜ வாழ்க்கை காமெடிகள் நிறைந்த கட்டுரைகள் தொகுப்பு ஆகியவற்றை வெளியிட்டுச் சிறப்பித்திருக்கிறது அந்திமழை! திடீரென முளைத்தாரா திசநாயக்கா? தமிழ்க்கனலி்ன் கட்டுரை, ஆழம்! எத்தனை அதிபர்கள் முளைத்தாலும் தமிழக மீனவர்களுக்கு விடிவுகாலம் எப்போது வரும் என்று தெரியவில்லை. கம்பீர இராஜேந்திர சோழன் சிரிப்பு இராஜேந்திர சோழர் ஆன கதையை நகைச்சுவை மிளிரச் சொல்லியிருக்கிறார், நடிகர் சிவகுமார். புல்லட் ஆசையை இல்லாமல் செய்துவிட்டது அதிஷாவின் ஒரு பைக்கன்ட வீரகதை. யதார்த்த நடையழகோடு புல்லட் என்பது சாதித்திமிர் போலத்தான் என்று பதிவிட்டு சிந்திக்கவும் வைத்துவிட்டார்.

பிரேமா அரவிந்தன், நடுவிக்கோட்டை

தேவை

பெரும்பாலான வழக்கறிஞர்கள் தங்களுக்கான வருவாயை மட்டுமே கணக்கிலெடுத்துக் கொள்பவர்களாக உள்ளனர். நீதியை நிலைநிறுத்த நீதியின் மீது நம்பிக்கையும் மதிப்பும் பொறுமையும் போராட்டக் குணமும் தேவைப்படுகிறது. மேற்கண்ட தன்மைகள் கொண்ட வழக்கறிஞர்கள் மிகக்குறைவே. அவர்களைப் போன்றோரை உருவாக்கும் லட்சியம் கொண்ட ப.பா.மோகன் பாராட்டிற்குரியவரே. அவரின் முயற்சி வெற்றிபெற நல்வாழ்த்துகள்.

தி. வெற்றிச்செல்வன், மேலச்சிவபுரி

வெகுசிறப்பு

அந்திமழை தீபாவளி சிறப்பிதழில் தா. பிரகாஷ் எடுத்த மக்களிசைப் பாடகர் ஜெயமூர்த்தியின் நேர்காணல் வெகு சிறப்பு. கவிதா பாரதி எழுதும் பெருவழிப்பதையில் தன்னலம் கருதாத நூறு வழக்கறிஞர்களை உருவாக்குவதே என் லட்சியம் என்னும் வழக்கறிஞர் ப.பா. மோகன் பற்றிய அறிமுகம் அருமை.

தங்க. சங்கரபாண்டியன், பொழிச்சலூர்

தீங்கு இல்லை

இரா. பிரபாகரின் ’திருமா வலியுறுத்தும் மதுவிலக்கு சாத்தியமா’ கட்டுரை வாசித்தேன். மது தடைசெய்யப்பட வேண்டிய ஒன்று என்பதில் யாருக்கும் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. ஆனால், அது கள்ளத்தனமாக விற்கப்படும் பட்சத்தில் விலை அதிகமாகிவிடுவதையும், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதனால் பல உயிர்கள் பலியாகிவிடுவதையும் ஏற்றுக் கொள்ள இயலாது.

நல்ல மதுவை அளவோடு குடிப்பதனால் தீங்கு ஏதும் விளைவதில்லை என்றே மருத்துவர்களும் கருதுகிறார்கள். பூரண மதுவிலக்கு சாத்தியமற்ற ஒன்று என்பதையும் நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏற்ற விலையில் பாதுகாப்பு தன்மை கருதி அரசே மதுபானங்களை விற்பனை செய்வதைப் புறந்தள்ள இயலாது என்பதையும் பல்வேறு தரவுகளுடன் காட்டுகிறது கட்டுரை.

மு. காந்திராஜா, அரியலூர்

பேருண்மை

எறும்புக் கூட்டங்கள், மேகம் திரண்ட வானம், காக்கைகள் ஆகியவை கண்ணில் பட்டும் அவை பின்னுக்குத் தள்ளப்பட்டு எதிர்வீட்டுக் கொடியில் தொங்குகிற மார்புக் கச்சையும் பாவாடையும் மனத்திரையை ஆக்கிரமித்துக்கொள்வதன் மூலம் மனம் எதில்

இலயிக்கிறதோ அவையே எண்ணங்களாகப் பரிணமிக்கின்றன என்ற பேருண்மையை சுகதேவின் ஒரு கதையின் கதை சிறுகதை புலப்படுத்தியது.

மு. ராமு, திருச்சி

அது இல்லாமல்...

திருமா வலியுறுத்தும் மதுவிலக்கு சாத்தியமா? சாத்தியமில்லை. தீவிரமாக மதுவிலக்கு அமல்படுத்தினால் மனநோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகும். கள்ளச்சாராயம், கஞ்சா போன்றவற்றின் விற்பனை அதிகமாகும். இன்று காதுகுத்து, கல்யாணம், கருமாதி, பிறந்தநாள் விழா, பதவி உயர்வு போன்ற நிகழ்வுகள் மது இல்லாமல் நடப்பதில்லை.

பஞ்சலிங்கம், மடத்துக்குளம்

பிரச்சாரமும் தேவை

தமிழகத்தில் குடிப்பழக்கம் சர்வ சாதாரணமாகிவிட்டது. விடுதலைப்புலிகள் இயக்கம் மதுவை ஒழிக்க அதிகம் கவனம் செலுத்தியுள்ளது. குடியால் அடித்தள மக்கள்தான் அதிகம் உயிரிழக்கின்றனர். விழிப்புணர்வும் பிரச்சாரமும் தேவை. ப.பா. மோகன் வழக்கறிஞர்களுக்கு ஓர் உதாரணம். அவர் உண்மையான கம்யூனிஸ்ட். கடமையைச் சரியாக செய்பவருக்கு இயக்கத்தில் மதிப்பில்லை. அதற்கு நானும் ஓர் உதாரணம். அந்திமழையின் ஒவ்வொரு செய்தியும் மறக்க முடியாத செய்திகள். பர்வீன் சுல்தானாவின் பதிவு சிறப்பு.

இரா. சண்முகவேல், கீழக்கலங்கல்

விரியவைத்தது

எல்லாமும் தங்களுக்கே வேண்டுமென்ற பேராசையோடு தங்களுக்கென்ற கடமை ஏதொன்றையும் செய்யாமல் உரிமைகளுக்காக மட்டும் ஓடோடி வந்து உறவு கொண்டாடும் பூனை மனிதர்களாகவே பலர் இருப்பதையும் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் பொறுமைசாலிகளாகவும் உயிர்களிடத்து அன்பு பாராட்டுபவர்களாக இருப்பதையும் காட்சிகளாக விரிய வைத்தது, ஹேமா ஜெய்யின் பூனை மனிதர்கள் சிறுகதை.

முத்து. வள்ளிமயில், முத்தரசநல்லூர்

இன்றைய மாவீரன்!

அனுரகுமார திசநாயக்காவின் அரசியல் வெற்றியைக் கொண்டாடியிருந்தது 'திடீரென முளைத்தாரா திசநாயக்க?' கட்டுரை. போராட்டப் பாதையைக் கைவிட்டு ஜனநாயகப் பாதையில் நடைபோடும் ஜேவிபியின் எம்.பி.யாகி இன்று ஆட்சியைப் பிடித்திருக்கும் அனுர, இந்தியா, சீனா நாடுகளோடு கொள்ளப்போகும் அரசியல் உறவுகளின் அடிப்படையில் மட்டுமே அங்கு ஆட்சியில் தாக்குப்பிடிக்க முடியும். கரணம் தப்பினால் மரணம்தான். மாற்றம் ஒன்றே மாறாதது. இராஜபக்சேக்களை விரட்டி மாற்றத்துக்கான வழியை ஏற்படுத்திக்கொடுத்த இலங்கையின் இன்றைய மாவீரன் (டுடேய்ஸ் ஹீரோ) என்று உறுதியாகச் சொல்லலாம்.

பேரா. கரு. பாலகிருஷ்ணன், பெரிய காரை-630 311.

பாயசம்

பூனை மனிதர்கள் சிறுகதை புலிப் பாய்ச்சல் பாய்ந்துள்ளது. ஏழு பக்கங்கள் என்பதால் சிறுகதைகூட குறுநாவலாகி விட்டது. ‘ஆயா’ கேரக்டர் ஆயாசமாக இருப்பினும் இலக்கியத் தடாகத்தில் பூத்த இனிய சிறுகதை மலரின் தேன் பாயசமாக இனிக்கிறது!

ஆர். விநாயகராமன், 46, செல்வமருதூர்

மதுவிலக்கு

திருமா வலியுறுத்தும் மதுவிலக்கு சாத்தியமா? என்ற தலைப்பு கறிவேப்பிலை மாதிரிதான்! எப்போதாவது அருந்துபவர்கூட எப்போதும் அருந்துபவராக மாறுவதும் நிகழ்கிறது. குடிநோயாளியாக மாறுவோர் சதவீதம் எப்படியிருப்பினும், குடியர்களால் குடும்பத்தில் நிலவும் சண்டை சச்சரவுகள் நோயைவிட துன்பமளிப்பவையாக உள்ளதே!

ஆர்.ஜி.பாலன், மணலிவிளை

இல்லையே?

சிறப்புப் பக்கங்களில் முதலாவதாக அன்றைய அரசியல்வாதிகளின் நகைச்சுவைகளை ராவ் குறிப்பிட்டு இன்றைய அரசியல்வாதிகளிடம் நகைச்சுவை உணர்வு குறைவென்று கு(சு)ட்டிக் காட்டியுள்ளார். அநாகரிகப் பேச்சு, அதிரடி சவால், மூர்க்க மோதல் என இன்றைய கட்சித் தலைவர்கள் எதிரிகளாக இருக்கிறார்கள். "கொஞ்சம் சிரிக்க வைத்து, சிரிங்க....பாஸ்" என நல்வழி காட்டியது, சிறப்பு பக்கங்கள்.

அண்ணா அன்பழகன் அந்தணப்பேட்டை.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com