தமிழக வெற்றிக் கழகம் ரசிகர்களால் மட்டும் ஆட்சிக்கு வரமுடியுமா என்பது கேள்விக்குறியே. இதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தங்கலான் படம் குறித்து பிரபாகர் தெளிவாக கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
வயநாடு பேரழிவு மனிதன் வாங்கிய சாபம். கனிமவளங்களை அழிக்க அழிக்க சோதனை. அது மனிதனைப் பழிவாங்கியே தீரும் என்பதற்கு ஓர் உதாரணம். மனிதன் ஆசையால் பல வீடுகள் கட்டி வெளிநாட்டில் இருந்து சம்பாத்தியம். புரட்சிகரமான இயக்கம்கூட இதை மாற்ற முயற்சித்தார்களா? வளர்த்தார்களா? மார்க்சியத்தை சுயநலனுக்காகப் பயன்படுத்தி வாழ்ந்தவர்கள் என்பதை அடையாளம் காட்டியுள்ளார்கள். சமத்துவ சமுதாயம் சொல்லே தவிர நடைமுறையில் இல்லை. விஞ்ஞான உலகில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியுமா? ஆலையின் புகை, சாயப்பட்டறைக் கழிவு தண்ணீரில் கலப்பதுதான் உலகம்.
இரா. சண்முகவேல், கீழக்கலங்கல்
நிஜமே
அந்திமழை இளங்கோவன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் அவருடன் நெருங்கிப் பழகிய நண்பர்கள், பல்துறை ஆளுமைகள் பகிர்ந்துகொண்ட அனுபவங்கள் அன்னாரது தூய நட்பை, பிறருக்கு உதவும் பெருந்தன்மைக் குணத்தை- மாசற்ற மனிதநேயத்தை அப்படியே தெளிவாகக் காட்டின. நெகிழ வைத்த நினைவுகள்!
மேலும், ‘அவர் கொடுத்த விலை அதிகம்’ நக்கீரன் கோபாலைப் பற்றிய கட்டுரை கவனிக்கத்தக்கது. வெறும் வியாபாரமாக இல்லாமல் ஊடக தர்மத்துடன் கொள்கை ரீதியாக தமிழ், இன, மொழி உணர்வுகளுக்கும் சமூகநீதிக்கும் ஆதரவாகவே நக்கீரன் நின்றிருக்கிறது எனும் கட்டுரையாளர் கவிதா பாரதி பதிவு செய்திருப்பது நிஜமே!
பிரேமா அரவிந்தன், நடுவிக்கோட்டை
பயனுள்ளது
‘அந்திமழை இளங்கோவன் நினைவேந்தல்’ என்னும் தலைப்பில் வெளியான முக்கிய பிரமுகர்களின் இரங்கற் செய்திகளை கண்கலங்கப் படித்து நெஞ்சம் நெகிழ்ந்தேன். நக்கீரன் கோபால் பற்றிய கவிதா பாரதியின் கட்டுரை சிறப்புடன் விளங்கியது. ‘ஓர் உயிரைக்காப்பாற்ற நூறு ஆணைகளை மீறலாம்’ எனும் ஆர். பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். அவர்களின் எழுத்தோவியம் மிகவும் பயன் உள்ளது. ‘வயநாடு பேரழிவு மனிதன் கேட்டு வாங்கிய சாபம்’ என்னும் ஷாஜியின் கட்டுரை இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வை மக்களிடையே விதைத்தது.
சுற்றுச்சூழல் குற்றமும் கொடிய குற்றமே என்னும் அ. சங்கர் பிரகாஷின் படைப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை விளக்குவதாய் இருந்தது. அந்திமழை இளங்கோவன் மறைவுக்குப் பின்னும் அந்திமழையை தொடர்ந்து நடத்துவதுதான் நாம் அவருக்குச் செய்யும் சிறந்த நன்றிக்கடனாகும்.
தங்க. சங்கரபாண்டியன், பொழிச்சலூர்
வருத்தம்
அந்திமழை இளங்கோவன் அவர்களின் நினைவேந்தலில் 24 பேரின் பேச்சையும் புகைப்படத்தையும் ஏழு பக்கங்களில் சோக காட்சியாக வெளியிட்டு, வாசகர் மடலை வருத்தமாக எழுத வைத்துவிட்டீர்கள்!
கா. திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்
நெடுந்தொலைவு
கோட்டையைப் பிடிப்பாரா கோட்? படித்தேன். திரைப்படத் துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களில் எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். போன்ற சிலரே துருவ நட்சத்திரங்களாகச் ஜொலித்தவர்கள். விஜய் எந்த அளவுக்குத் தன் ரசிகர்களைத் தன் கட்சிக்கு வாக்களிக்கின்ற வாக்காளர்களாகவும் தொண்டர்களாகவும் மாற்றுகிறாரோ அந்த அளவிற்கே அவருக்கு வெற்றி வாய்ப்பு அமையும். அவர் கோட்டையில் கொடியேற்றும் உரிமையைப் பெற தடைகள் நிறைந்த நீண்ட நெடுந்தொலைவு பயணம் செய்ய வேண்டியதிருக்கும். கட்டுரை சரியான கணிப்புடன் எழுதப்பட்டுள்ளது.
அன்பன். சி.சுப்பையா, புதுக்கோட்டை
யாகம்
சிறப்புப் பக்கங்களில் ‘ஓர் உயிரைக் காப்பாற்ற நூறு ஆணைகளை மீறலாம்’ என்ற பாலகிருஷ்ணனின் முன்னெச்சரிக்கைக் கருத்துகள் முன்னோடியானது. ‘வயநாடு பேரழிவு' என்ற மனிதன் கேட்டு வாங்கிய சாபத்தை கோபத்தோடும் அனுதாபத்தோடும் தொகுத்திருப்பது நெஞ்சை உலுக்கியது. கேரளம் தப்பிக்க வழி இருக்கிறதா? கடல் பேரிடர்களும் கடைசி மைல் கரிசனமும் + புதிய இயல்பாகும் காலநிலைப் பேரிடர்கள் + சுற்றுச்சூழல் குற்றமும் கொடிய குற்றமே + பேரிடர்களில் நிலவியல் ஆய்வுகளும் பரிந்துரைகளும் +பசுமையோடு இணையாத சிவப்பு வெறும் கனவுதான் என்பது வரையிலான தொகுப்பு இயற்கை வனக் கொள்ளையை முதலாளித்துவத்தின் சுரண்டல் என்பதைப் பிரதிபலித்து ‘நாடி' பிடித்து சாடியுள்ள உத்வேகம் அந்திமழைக்குரிய ‘யாகம்!'
என்.ஜானகிராமன், செல்வமருதூர்
பேரதிர்ச்சி
என். பாதுஷாவின் (தமிழில் - ஷாஜி) ‘வயநாடு பேரழிவு – மனிதன் கேட்டு வாங்கிய சாபம்’ கட்டுரை படித்தேன். வசதிகளுக்காகவும் வாய்ப்புகளுக்காகவும் வளர்ச்சி என்ற போர்வையில் இயற்கையின் மீது வன்முறை நிகழ்த்தப்படுவதையும் பழி ஓரிடமும் பாவம் ஓரிடமும் என்பதைப் போல ஏழை, எளிய மக்கள் மட்டுமே பலியாகிவிடுவதையும் கட்டுரை தக்க சான்றுகளுடன் பிட்டுப்பிட்டு வைத்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மு. காந்திராஜா, முத்தரசநல்லூர்
ஏற்புடையதே
உயிர்கள் விலை மதிப்பற்றவை. பொருட்கள் விலை மதிப்பிற்குரியன. எனவே நம் முதற்கவனம் உயிர்களைப் பாதுகாப்பதில் இருக்க வேண்டும். பேரிடர் காலத்தில் அரசு அதிகாரிகள் சுயமாக சமயோசிதமாக நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியது ஆர்.பாலகிருஷ்ணனின் கட்டுரை. அவரின் கருத்து ஏற்புடைய ஒன்றே!
தி.வெற்றிச்செல்வன், மேலைச்சிவபுரி
பூடகம்
ஓரிடத்தில் உருவத்தாலும் நிறத்தாலும் பெரிதாகவும் பளிச்சிட்டும் காணப்படுகின்ற ஒன்று மற்றோரிடத்தில் சிறியதாகவும், மங்கலாகவும் காணப்படுகிறது. வாழ்க்கையும் அப்படித்தான் என்பதை பூடகத்தன்மையுடன் வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது அ.முத்துலிங்கத்தின் ‘அவன் மாதிரி ஒருத்தன்’ மொழிப்பெயர்ப்புச் சிறுகதை.
பெண் என்பவள் தான் சொல்ல விரும்புகிற கருத்தை நறுக்கென்றும் சுருக்கென்றும் பிறருக்கு உணர்த்துகின்ற திறன் மிக்கவள் என்பதை சத்யா பாத்திரத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் இலக்கிய நடராஜன் தன் சிறுகதையான ‘கதை சொல்லிகளில்’. பல்வேறுபட்ட துறைகளில் ஈடுபட்டிருப்போர் அந்திமழை இளங்கோவன் குறித்து நினைவேந்தலில் பகிர்ந்து கொண்டுள்ள செய்திகள் அவரை ஒரு மாமேதையாக உயர்த்திக்காட்டியது.
திரைப்படமென்றால் பார்வையாளனைக் குழப்பத்தில் ஆழ்த்தாமல் தெளிவான புரிதலை அளிப்பவையாகக் காட்சிப் படுத்தப்பட வேண்டுமென்ற கருத்தை உரத்த குரலில் பேசியது இரா. பிரபாகரனின் தங்கலான் குறித்த கட்டுரை.
மு.இராமு, திருச்சி
நினைவுகள்
அந்திமழை இளங்கோவன் நினைவேந்தல் பகுதியில் தங்களுடைய நினைவுகளை ஒவ்வொருவரும் பகிர்ந்து கொண்டது மறைந்தாலும் இன்னும் பலரின் நினைவுகளில் அவர் வாழ்ந்து கொண்டிருப்பதாக உணர்த்தியது.
மீ. யூசுப்ஜாகிர், வந்தவாசி
பேரதிர்ச்சி
‘தங்கலான்' தமிழ் சினிமாவின் தங்க மாலையா? என்ற கேள்வியோடு திசையாற்றுப் படை ஆற்றலோடு விமரிசனக் கோணங்களை ஆற்றுப்படுத்தியிருந்தாலும்,
தொன்மக் கதையின் காட்சியும் பாத்திரங்களும் ‘ரிபீட்' ஆவதை ‘கேலி' யாகச் சுட்டிக்காட்டியது விமரிசன உலகின் வேலி தான் என்றாலும் இரா. பிரபாகரின் தொகுப்பு நியாயமான நிஜமான வேள்வி தான்! தங்கலானைத் தங்க மாலை என்று விமரிசித்துள்ள விதம் சிங்கப்பல் கர்ஜனை தான்!
மருதூர் மணிமாறன் இடையன்குடி