அந்திமழை இளங்கோவன் நினைவேந்தல்

Andhimazhai Elangovan
அந்திமழை இளங்கோவன்
Published on

மறைந்த அந்திமழை இளங்கோவன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி ஆகஸ்ட் 17 அன்று சென்னை், தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கில் நடைபெற்றது. அதில் திரளான எழுத்தாளர்களும் நண்பர்களும் வாசகர்களும் கலந்துகொண்டனர். அவர்களில் சிலர் அந்நிகழ்வில் பேசியதிலிருந்து சில துளிகள் இங்கே:

மருத்துவர் ஜி. நடராஜன் - அஞ்சல் துறைத் தலைவர் - சென்னை

என்னிடம் இருந்த இலக்கிய வாசிப்பு அவரை நட்பாக்கியது. அந்திமழை கையெழுத்துப் பத்திரிகையில் அவரின் குழுவுடன் சேர்ந்து பணியாற்றியிருக்கிறேன். நிறைய உற்சாகப்படுத்துவார். இந்த குணத்தில் அவருக்கு நிகர் யாரும் இல்லை. படித்தது கால்நடை மருத்துவமாக இருந்தாலும் பெரிய பத்திரிகையாளராக வேண்டும்; பத்திரிகை நடத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

2012ஆம் ஆண்டு அந்திமழை இதழை தொடங்கினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கல்லூரி காலக் கனவுக்கு, தானே பணத்தைப் போட்டு, தானே நடத்தவும் செய்தார். இதை நான் எதிர்பார்க்கவில்லை. கனவை அடைவதற்கு கடும் உழைப்பைப் போடுவதில் அந்திமழை இளங்கோவனுக்கு நிகராக யாருமே இல்லை.

டாக்டர் கே. பி. ஆனந்த் – தமிழ்நாடு, புதுச்சேரி தலைமைக் கணக்காயர்

கல்லூரியில் அந்திமழை கையெழுத்துப் பிரதி ஆரம்பிக்கும்போது, இளங்கோவனும் அவருடைய நண்பர்களும் விடுதியில் தங்கி இருந்தார்கள். நான் வீட்டிலிருந்து வருவேன். எனக்கு என்ன வேலை என்றால், விடுதியில் தங்கியிருப்பவர்களை எழுத வைத்து, அவற்றை இளங்கோவனிடம் ஒப்படைப்பதுதான். கனவு மெய்ப்பட வேண்டும் என்பது அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. தொழில்முனைவோராக இருந்துகொண்டு இதழையும் நடத்திக் கொண்டிருந்தார்.

நான்கு வருடங்களுக்கு முன்னர் என்னுடைய தாய் – தந்தை இருவரும் ஒரே மாதத்தில் இறந்த வருத்தத்தில் இருந்தேன். நான் கவலையில் இருந்தபோது கூட, ’நீ எழுதுப்பா… நா இருக்கிறேன்.’ என்றார். நான் எழுதிக் கொடுத்ததைப் புத்தகமாக அச்சிட்டார்.

திருமாவேலன் – பத்திரிகையாளர்

பொதுவாக சமூகத்தை பத்தியே கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றவனுக்கு மரணம் என்பது கிடையாது என டால்ஸ்டாய் சொன்னதை அந்திமழை இளங்கோவன் ஒரு முறை எழுதினார். அந்த அடிப்படையில் பார்த்தால், அந்திமழை இளங்கோவனுக்கு மரணம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

நான் பதினோராம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து இளங்கோவனைத் தெரியும். கோவில்பட்டியில் திருவள்ளுவர் மன்றத்தில் நாமக்கல் கவிஞர் நூற்றாண்டு விழா கவியரங்கம் நடந்தது. அதில் பாடுவதற்காக திருநெல்வேலியிலிருந்து ஆறு பேர் வந்திருந்தார்கள். அதில் இளங்கோவனும் ஒருவர். 1990களில் மண்டல் கமிஷனுக்காக மிகப்பெரிய போராட்டம் நடத்தியபோது, கல்லூரி விடுதிகளுக்கு சென்று மாணவர்களை திரட்டியபோது, திடீரென தான் வேப்பேரி விடுதியில் அவரைப் பார்த்தேன்.

அவர் பத்திரிகையாளராக வளர்ந்து கொண்டே வந்தார். நான் விகடனில் பணியாற்றியபோது, அவர் குமுதம், குமுதம் ஜங்ஷன், விண் நாயகன் போன்ற பத்திரிகைகளில் எழுதி வந்தார். இவ்வளவு தொழில்கள், முதலீடுகள், பணம், வளர்ச்சி என இருந்தாலும் தன்னுடைய அடையாளம் என்பது அந்திமழை இளங்கோவன் என அவர் போட்டுக் கொண்டதுதான். பத்திரிகையாளன் என சொல்லிக் கொள்வதில்தான் அவருக்கு ஆர்வம் இருந்திருக்கிறது.

ஓவியர் டிராட்ஸ்கி மருது

அந்திமழை கையெழுத்துப் பிரதியாகத் தொடங்கப்பட்ட போதே என்னுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார் இளங்கோவன். அன்றிலிருந்து கடைசி வரை என்னோடு நட்பிலிருந்தார். எனக்குத் தெரிந்து இரண்டு துறைகளில் மாறி மாறி சாகசமான பல முடிவுகளை எடுத்தவர். வாழ்நாள் முழுக்க பத்திரிகையோடு இருக்க வேண்டும் என நினைத்தவர்.

நிதானமாக முடிவெடுங்க இளங்கோவன் என்று சொன்னால் ‘இல்லணா… செஞ்சிடலாம்ணா’ என்பார். நட்புகளைக் கைவிடாமல் கொண்டுவந்தவர். அதுதான் அவரின் பலம். அவரின் இறப்புச் செய்தியைக் கேட்டது, இவ்வளவு சீக்கிரம் விட்டுட்டுப் போய்ட்டீயே என நினைத்துக் கொண்டேன். எப்போது சென்னைக்கு வந்தாலும் இரவு பத்தரை மணி ஆனாலும் என்னை வந்து பார்ப்பார்.

பத்திரிகையாளர் ராவ்

பல ஆண்டுகளாக இளங்கோவனைத் தெரியும். அவரின் இழப்பு என்பது நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அவருக்கும் எனக்கும் சில பழமொழிகள் பிடிக்கும். ஒருமுறை எனக்கு பிடித்த பழமொழியை நான் எழுதிக்காட்டுகிறேன், உங்களுக்குப் பிடித்த பழமொழியை நீங்கள் எழுதிக் காட்டுங்கள் என்று சொன்னேன். இரண்டு பேரும் ஒரே பழமொழியை எழுதியிருந்தோம். அதுதான் ஆச்சரியம். ‘கிட்டாதாயின் வெட்டென மற’ என்பதுதான் அந்த பழமொழி. ஒரு காரியம் நடக்காது என்றால், அந்த இடத்தில் அவர் இருக்கமாட்டார், அடுத்த நிமிடம்.

மற்றொரு பழமொழி, நினைப்புதான் பொழப்பை கெடுக்கும். வீண் கற்பனைகளைச் செய்ய வேண்டாம் என்பதுதான் அவரின் கேரக்டர்.

அவர் அந்திமழையை வெற்றிகரமாக நடத்தியது அற்புதமான விஷயம். அதைத் தொடர்ந்து நடத்த வேண்டும். அதுதான் நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலி.

அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்

எனக்கும் அவருக்குமான தொடர்பு என்பது நான்கு முறை சந்தித்துப் பேசியதுதான். அந்த சந்திப்புகளிலேயே ஆத்மார்த்தமான நட்பாக இருக்க வேண்டும் என்புதற்்கு உதாரணமாகத் திகழ்ந்தவர். முகநூலில் எழுதிக் கொண்டிருந்தேன். சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது அந்த குறிப்புகளை நக்கீரனில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. இதைப் பார்த்துவிட்டு அந்திமழையில் எழுதச் சொன்னார்கள். தயங்கிய என்னை உற்சாகப்படுத்தி எழுத வைத்தார்கள். அவர் தான் ஈட்டிய பொருளை எந்தவித வருமான நோக்கமும் இல்லாமல் தமிழ் சமூகத்திற்கு பங்களிப்பு செய்ய வேண்டும் என இந்த இதழை நடத்தினார்.

டாக்டர் என்.கண்ணன் ஐபிஎஸ்

மறைந்த கவிஞர் குமரகுருபரனும் நானும் கல்லூரி அறை நண்பர்கள். குமரகுருபரனுக்கு கல்லூரி வரும்வரை இலக்கியம் பற்றி எதுவும் தெரியாது. கல்லூரியின் நூலகத்தில் அந்திமழை கையெழுத்துப் பிரதி இருக்கும். அதைப் பார்த்துத்தான் குமரகுருபரனுக்கு இலக்கியத்தின் மீது ஆர்வம் வந்தது. அப்படித்தான் எழுத வந்தார்.

இளங்கோவன் கல்லூரியை விட்டுச் செல்லும்போது அந்திமழையை நடத்தும் பொறுப்பை குமரகுருபரனிடம் விட்டுச்சென்றார். அவர் அசோகனிடம் விட்டுச் சென்றார். அப்படியே ஒரு வரிசை உருவானது. இளங்கோவன் இப்படி ஒரு நீண்ட வரிசையை உருவாக்கி இருந்தார். தொழிலதிபராக இருந்தும் இலக்கிய ஆர்வத்தை விடாமல் இருந்தது அவரது அடையாளம்.

மதன் – பத்திரிகையாளர்

இளங்கோவனை அவர் கல்லூரி படிக்கும் காலத்திலிருந்து தெரியும். அவருக்கு எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அதனால் என்னை சந்திக்க வந்திருந்தார். கால்நடை மருத்துவக் கல்லூரியில் இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்ட இளைஞர் கூட்டம் அவருடன் இருந்தது. அதற்குத் தலைமை தாங்கி பத்திரிகையைக் கொண்டு வந்த அனுபவமும் இருந்தது. சென்னை வந்தால் என் வீட்டுக்கு வருவார். அவரின் குழந்தை அந்திமழை. அந்த இதழைப் பார்த்தாலே அவரின் குணாதிசயங்கள் தெரிந்துவிடும். ரொம்ப சீரியசாக நடத்தினார். மக்களைக் கவர ஜனரஞ்சகமான விஷயங்களைப் போடவேண்டும் என்ற நிலைக்கு அவர் வந்ததே கிடையாது. அவர் ஒரு உதாரணம். இப்படிப்பட்ட பத்திரிகையை மக்கள் ரசிப்பார்களா என்ற எண்ணம் மேலோங்கியிருந்த காலத்தில்; அப்படியில்லை ரசிப்பார்கள் என நிரூபித்தவர் அவர்.

அந்திமழையில் ஒரே பிரச்னை என்னவென்றால், எல்லா பக்கங்களிலும் விஷயங்கள் இருக்கும். அதன் எல்லா பக்கங்களையும் வாசிக்காமல் இருக்கமுடியாது. சுவையோடு இருக்கும் பத்திரிகை அந்திமழை. அவர் ரூட் போட்டு கொடுத்துவிட்டார். அதிலேயே பயணிக்கலாம்.

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்

அந்திமழை இளங்கோவனின் மறைவு என்பது எனக்குத் தனிப்பட்ட அளவில் மிகப்பெரிய இழப்பு. நல்ல நண்பரை இழந்திருக்கிறேன் என்று சொல்வேன். அந்திமழை பத்திரிகை வரத்தொடங்கிய நாளிலிருந்து என்னுடைய கதை, கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார். அவருடன் பேசியிருக்கிறேன், பழகியிருக்கிறேன். பெங்களூர் போன சமயங்களில் அவரை சந்தித்துப் பேசியிருக்கிறேன்.

அவர் இறந்த செய்தியைக் கேட்ட உடனே, அவரது குரல், அதிலிருக்கக் கூடிய வாஞ்சை. அவர் எழுத்தாளர் மீது வைத்திருக்கும் அன்பு. என் மீது மட்டுமல்ல. தமிழில் உள்ள எல்லா எழுத்தாளர்களோடும் அவருக்கு நல்ல நட்பும், அவர்களின் எழுத்தைப் பற்றிய அபிப்பிராயமும் உண்டு. இன்னும் சொல்லப்போனால், எழுத்தாளர்கள் பொருளாதார சிரமம் இன்றி இருக்க வேண்டும் என்ற கவனத்துடன் இருந்தார். ஒவ்வொரு முறை பேசும்போதும், எதாவது உங்களுக்கு உதவி வேண்டுமா எனக் கேட்பார். நிறைய பேருக்கு செய்யவும் செய்திருக்கிறார்.

எனக்கு அந்திமழை என்ற பெயரை எப்போது கேட்டாலும், அது நண்பர்கள் இணைந்து செய்கிற காரியம் என்றுதான் நினைப்பேன். நாலைந்து நண்பர்கள் இளமையிலேயே இரு கனவு கண்டு, அந்த கனவுக்கு செயல்வடிவம் கொடுத்து, அதை வெற்றிகரமான பத்திரிகையாக்கியிருக்கிறார்கள் என்றால், ஒரு நல்ல நட்புக்கு இதைவிட மிக சிறந்த அடையாளமாக எதுவும் இருக்க முடியாது. அதுதான் அந்திமழை. அது இளங்கோவனுக்கு பிறகும் தொடரும் என நினைக்கிறேன். அவர்தான் இல்லை, அவரின் அணிந்துரை இல்லை, அவரின் வழிகாட்டுதல் இல்லை, ஆனால், அவரின் விருப்பம் அப்படியேதான் தொடரும் என நினைக்கிறேன்.

மருத்துவர் மாரியப்பன்

அந்திமழைக்கும் எனக்குமான தொடர்பு என்பது நான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும்போது இரண்டு கவிதைகள் எழுதிக் கொடுத்ததோடு சரி. ஆனால், 1994 இல் கல்லூரி முடித்த பிறகு எனக்கும் அவரின் மற்ற நண்பர்களுக்கும் வாழ்க்கையில் சறுக்கல் ஏற்படுகிறபோதெல்லாம் உதவிக் கரம் நீட்டி அவர்களை மேலே கொண்டு வருவதற்குத் தயாராக இருந்தார். 2010ஆம் ஆண்டிலிருந்து அவர் மறைவதற்கு முதல்நாள் வரை நண்பர்கள் ஏழு பேரும் அவருடன் இருந்தோம்.

அவர் மறைவுக்கு முதல்நாள் மாலை மூன்றரை மணிக்கு எனக்கும் அவரது துணைவியார் சரஸ்வதிக்கும் கையெழுத்துப்போட்டு ஒரே புத்தகத்தை ஆளுக்கொன்றாக இருவருக்கும் கொடுத்தார். அவர் எப்போதும் சொல்வது ஒன்றுதான், எல்லோரும் புத்தகம் படிக்கவேண்டும் என்பார். புத்தகம் படித்தால் அறிவு வளரும், அதை செயல்படுத்த முடியும். அந்திமழை இதழில் கூட, ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நூலகம் இருக்க வேண்டும் என சொல்லியிருப்பார். அந்த நூலகத்தில் என்னென்ன புத்தகங்கள் இருக்க வேண்டும் அதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்பது உட்பட சொல்லியிருப்பார்.அவர் கண்ட கனவை மெய்ப்பட வைக்க நாங்கள் பயணிப்போம்.

எழுத்தாளர் பாமரன்

அந்திமழை இளங்கோவன் என்றால் எங்கள் நட்பு வட்டத்தில் அவருக்கு வேறு ஒரு பெயர் இருக்கு. ஓகே இளங்கோவன். நாம் எதைச் சொன்னாலும் ஓகே ஓகே ஓகே என சொல்வார். என் மொபைலில் கூட ஓகே இளங்கோவன் என்று பதிவு செய்து வைத்திருக்கிறேன்.

வாழாவெட்டி என்றொரு வார்த்தை இருக்கிறது. என்னைப் பொருத்தவரை நான் எழுதாவெட்டி. எழுதுவதென்றால் சீக்கிரம் உட்கார மாட்டேன். ஆனால் இந்த பன்னிரண்டு வருடத்தில், என்னை எழுத வைத்ததில் பெரும்பங்கு இளங்கோவனைத்தான் சேரும். நம்மகிட்ட இந்த விஷயம் இருக்கா என நமக்கே தெரியாது. ஆனால் இளங்கோவனும் அசோகனும் அதை தெரிஞ்சிருப்பாங்க.

என்னுடைய வாழ்க்கையில் பத்திரிகை ஆசிரியருக்கும் எனக்குமான உறவு என்பது என்றும் இருந்தது கிடையாது. சொல்லுவார்கள் எழுதுவேன், எதாவது மாற்றச் சொல்வார்கள் மாற்றுவேன் அவ்வளவுதான். இதைத்தாண்டி ஒரு நேசப்பூர்வமான, குடும்ப உறவாக இருந்தது அந்திமழை இளங்கோவன், போன்ற வெகுசிலர்தான்.

அந்திமழை இதழில் என்னை ஒரு கட்டுரை எழுதச்சொனார்கள். அந்த சமயம் விடியல் சிவா, பெரியார்தாசன், மணிவண்ணன் அவினாசி லிங்கம் என நண்பர்களாக இறந்து கொண்டிருந்தார்கள். தாங்க முடியாத வேதனையில் ’என்றாவது எழுதக் கூடும்’ என்ற கட்டுரையை எழுதி அனுப்பினேன். அதில், ‘ஒருவேளை என்னுடைய இரங்கலுக்கான அஞ்சலியை நான்தான் எழுதியாக வேண்டும் போல’ என்றொரு வரியை எழுதியிருந்தேன். கட்டுரையை படித்த இளங்கோவன் ‘கட்டுரையை படிச்சேன். ஆனால், அந்த வரியைப் போட முடியாது’ என்றார். அவ்வளவு மென்மையான மனிதர்.

எழுத்தாளர் ஷாஜி

இப்படியொரு சூழ்நிலை வரும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. அந்திமழை இன்றைக்கு இருக்கின்ற வடிவத்தில் வர ஆரம்பித்த நாள்களிலிருந்துதான் இளங்கோவனைத் தெரியும். கொஞ்சம் நெருங்கிப் பேச பழக ஆரம்பித்து ஐந்து வருடம் ஆகியிருக்கும்.

நான் இப்படியொரு மனிதரைப் பார்த்ததே இல்லை. இனி பார்க்க முடியுமா என்பது சந்தேகம்தான். அவர் இறந்ததிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நினைவு சரியாக தூக்கம் வருவதில்லை.

திடீரென கால் பண்ணி, ‘சார் நான் உங்கள் ரசிகன் பேசுகிறேன்’ என்பார். எப்படி சார் இப்படி சொல்ல முடியும், நீங்கள் எங்கள் ஆசிரியர் என்பேன். பெங்களூர் வாங்க என்பார்.

பாமரன் சொன்னதுமாதிரி, நானும் எழுதுவதில் சோம்பேறிதான். என்னை வற்புறுத்தி எழுத வைத்ததில் அவருக்குப் பங்குண்டு. இப்போ அந்திமழையில் வந்து கொண்டிருக்கும் யூடியூப் நேர்காணலுக்கு அவரின் பெரிய உந்துதல் முக்கிய காரணம். இறந்து போன அன்று பாடகி சுஜாதா நேர்காணலைப் பார்த்துவிட்டு ரொம்ப நல்லாருந்தது என கால் பண்ணி சொன்னார். அந்திமழை இளங்கோவன் இறந்திருக்கலாம். ஆனால் அவரின் தொலைநோக்குக்கு மரணம் இல்லை.

இயக்குநர் ராசி அழகப்பன்

வெள்ளந்திச் சிரிப்பு, நினைத்ததைப் பேசுவது,… நட்பு கொண்டோரை வாழ வைப்பது என்ற மூன்றையும் கொண்டவர்தான் அந்திமழை இளங்கோவன்.

நட்சத்திரங்களுடன் வண்ணத்துப்பூச்சி என்ற தொடரை என்னை எழுத வைத்தார். அதை எழுதி முடிக்கும் முன்னர் எனக்கு பணம் கொடுத்தார். தமிழ்நாட்டில் இதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம்.

எம்.ஜி.ஆர். நடத்திய தாய் பத்திரிகையில் வேலை பார்த்திருக்கிறேன். மய்யம் இதழின் ஆசிரியராக இருந்திருக்கிறேன். இருப்பினும் அந்திமழையில் எழுதிய எழுத்தாளனாக அறிமுகம் செய்துகொள்வதில் மகிழ்வாக இருக்கிறேன்.

பெங்களூரில் ஒரு கல்லூரியில் பாரதியார் விழாவுக்குப் பேச சென்றேன். அதைக் கேள்விப்பட்டு தன்னைப் பார்க்க வர வேண்டும் என்று காரை அனுப்பி வைத்தார். போய் பார்த்தேன். அறை முழுவதும் புத்தகம். இலக்கியம், வரலாறு, தொழில்சார்ந்த புத்தகங்கள் என அடுக்கி வைத்திருந்தார். ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தேன். அந்த நினைவுகள் கண் முன் வந்து நிற்கிறது.

நீதிபதி சந்துரு

அந்திமழை இளங்கோவனை சந்திக்க வேண்டும் என பதினோரு வருடங்கள் காத்துக் கொண்டிருந்தேன். 2013ஆம் ஆண்டு நான் ஓய்வு பெற்றபோது, அந்திமழை இதழிலிருந்து தொடர்பு கொண்டு என்னுடைய பேட்டியைக் கேட்டார்கள். நான் அந்திமழை இதழை அவ்வளவாக பார்த்திருக்கவிட்டாலும், ஆனாலும் கேட்கிறார்களே என ஒத்துக் கொண்டேன். பேட்டி எடுத்த பிறகு அது அட்டைப்படக் கதையாக வந்தது. எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம். அன்றிலிருந்து அவரை சந்திக்க வேண்டும் என நினைத்திருந்தேன். ஒரு நீதிபதியைப் பற்றி ஏன் எழுத வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்தது எனக் கேட்க வேண்டும் என நினைத்திருந்தேன். அவர்களுக்குக் கடமைப்பட்டுள்ளேன். நான் இன்றைக்கும் தேடிக் கொண்டிருக்கும் இளங்கோவனை என்றைக்கும் தேடிக் கொண்டிருப்பேன்.

வழக்கறிஞர் சங்கர்

எந்தவித சமரசமும் இல்லாமல் இதழை நடத்தியுள்ளார். அவரின் குடும்பத்தாருக்கு ஒரே ஒரு வேண்டுகோள். இளங்கோவன் பெயரில் அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தலாம், அந்த அறக்கட்டளை மூலம் அந்திமழை இளங்கோவன் என்ற பெரியரில் இலக்கிய விருது வழங்கலாம். அப்படி தொடங்க நினைத்தால், அதற்கான சட்ட நடவடிக்கைகளை நான் செய்கிறேன். எழுத்தையும் இலக்கியத்தையும் நேசித்த அவரின் பெயரில் நற்பணியைச் செய்ய வேண்டும்.

எழுத்தாளர் ஜா. தீபா

இளங்கோவனுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும் என்றால், முதல் முறையாக நான் அந்திமழை இணையதளத்தில் "பெண் என்று சொல்வேன் " என்ற தொடர் எழுதினேன். என் முதல் புத்தகம் கூட அந்திமழையில் தான் வெளிவந்தது. அதற்காக அவருக்கு நான் பெரிய நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

எந்த சமரசமும் இல்லாமல், ஒவ்வொரு அந்திமழை இதழையும் மற்ற பத்திரி்கைகளை விட வித்தியாசப்படுத்திக் காட்டுவதிலும் , அதன் உள்ளடக்கத்திலும் அவர் காட்டும் ஈடுபாடும், அர்ப்பணிப்பும் ரொம்ப ஆச்சரியமாக இருக்கும். அதற்குப் பின்புலமாக இருந்தது இளங்கோவன் என்பது மிக முக்கியமான விஷயம். குடும்பத்துடன் இந்நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என குழந்தையையும் அழைத்துக் கொண்டு வந்தோம்.

ஒளிப்பதிவாளர் ரவிசங்கர்

நான் இளங்கோவனை முதலில் சந்தித்தது மருது சார் இல்லத்தில்தான். அந்திமழை கையெழுத்்துப் பிரதியாக வந்தபோது என நினைக்கிறேன். அதில் என்னை புகைப்பட ஸ்டோரி பண்ண சொன்னார் மருது சார். அதன் பிறகு, அந்திமழை அச்சிதழாக வரத்தொடங்கியபோதும் என் போட்டோக்கள் வரத்தொடங்கின. தொடர்ந்து என்னுடன் நட்பில் இருந்தவர். இல்ல நிகழ்வுகளில் தவறாமல் கலந்துகொண்டவர். அவரது மறைவு மிகவும் பேரிழப்பு.

மு. செந்தமிழ்ச்செல்வன்

அவர் நம்மை துயரத்தில் ஆழ்த்திவிட்டுச் சொல்லாமல் சென்ற செய்தி என்னவென்றால், அடுத்தவருக்காக வாழ வேண்டும் என்பதுதான். அவர் இறந்ததால் அவருக்கு இழப்பு இல்லை. அவரை நம்பி இருந்த நமக்குத்தான் இழப்பு. அவர் இருந்திருந்தால் இன்னும் நிறைய குடும்பங்கள் வாழ்ந்திருக்கும். நம் சுற்றத்தாரையும் வாழ வைக்க வேண்டும் என அவர் தன் மறைவின் மூலம் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

மீனா கபிலன்

எங்கள் குடும்பத்தில் யாருக்கு பிறந்த நாள் திருமண நாள் வந்தாலும் வாழ்த்து செய்தி வந்துவிடும். கூடவே கேக்கும் அனுப்பி வைப்பார். அவரிடம் எதிர்மறையான சொற்களே கிடையாது. போதுமா என கேட்கமாட்டார், இன்னும் வேண்டுமா என்றுதான் கேட்பார்.

அவருடைய தம்பி ஊரிலேயே சித்த மருத்துவராக இருந்தார். அவரை சென்னைக்கு வர வைத்து இன்றைக்கு வெற்றிகரமானவராக  மாற்றியிருக்கிறார். தான் மட்டும் ஜெயிப்பது மட்டுமே வாழ்க்கை கிடையாது, தன்னை சுற்றி இருப்பவர்களுக்காகவும் வாழ்ந்தவர்.

அவர் இறந்த அன்று அந்திமழை குழுவினர் தாமதமாக இரவுதான் பெங்களூர் வந்தார்கள். அவர்கள் வருவதற்கு ஏன் தாமதம் என்று கேட்டார்கள். இளங்கோவன் மரணச் செய்தி கிடைத்த பின்னும் கூட அவர்கள் அன்று காலையில் தொல்.திருமாவளவனை நேர்காணல் எடுத்துவிட்டு வந்தார்கள் என அறிந்தேன். அந்தளவுக்கு ஈடுபாட்டுடன் அந்திமழையை வழி நடத்தியிருக்கிறார்.

திருவேங்கிமலை சரவணன்

நான் இளங்கோவன் அவர்களை நேரில் பார்த்ததில்லை. அந்திமழையில் சில கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். ஒவ்வொரு மாதமும் ஒரு தலைப்பில் இதழைக் கொண்டு வருவார்கள். புதுப்புது தலைப்பாக இருக்கும். தமிழின் தலைசிறந்த இதழ் அந்திமழை. இளங்கோவன் ஆண்டுதோறும் ஒரு நாட்குறிப்பு அனுப்புவார். அதுஒரு சிறந்த பரிசாக இருக்கும்.

சுந்தர புத்தன்

அந்திமழை இளங்கோவனை என்னால் மறக்கவே முடியாது. பத்திரிகைத் துறையில் ஒரு சமயம் நான் மிகவும் பொருளாதார நெருக்கடியில் இருந்தபோது அதைக் கேள்விப்பட்டு, என்னை அவரது இணையதளத்துக்கு எழுதச் செய்து சிறு ஊதியத்தை தொடர்ந்து அளித்து உதவினார். அந்திமழை இதழின் முதல் அச்சு பிரதியை கோயம்பேடு அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் எனக்குக் காண்பித்தது இன்னும் நினைவில். ஈதல் இசைபட வாழ்ந்தவர் அந்திமழை இளங்கோவன்.

பேரா. செல்வகுமார், துணைவேந்தர்,தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம்

இளங்கோவன் கால்நடை மருத்துவக் கல்லூரியில் படித்தபோது நான் அங்கு உதவி பேராசிரியராக இருந்தேன். அப்போது இளங்கோவன் பழக்கமில்லை. பின்னர் அவரை இரண்டு முறை சந்தித்திருக்கிறேன். 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வேளாண்மைக்கு என தனியான பட்ஜெட் போடுவதற்கான முயற்சியிலிருந்தார்கள். அந்த முயற்சியில் கருத்தரங்கம் ஒன்று ஏற்படு செய்திருந்தார்கள். அதற்கு இளங்கோவனைத்தான் அழைத்திருந்தோம். அப்போதுதான் அவரை சந்தித்தேன்.

அவருடைய நோக்கமே, மாணவர்கள் தொழில்முனைவோர் ஆகவேண்டும் என்பதுதான்.

கால்நடை மருத்துவ கல்லூரியின் மாணவர்களைத் தொழில்முனைவோராக்க முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். veterinary incubation foundation என்ற அமைப்பின் மூலமாக மத்திய – மாநில அரசுகளின் உதவியுடன் இந்த முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றோம். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் வருடந்தோறும் மாணவர்களுக்கு ஒரு போட்டி நடத்தி வருகிறோம். அதில் சிறந்த தொழில்முனைவோருக்கான ஐடியா எதுவோ, அதை தேர்ந்தெடுத்து அதற்கு பரிசுகள் வங்கி வருகிறோம். அந்திமழை இளங்கோவன் நினைவைப் போற்றும் வகையில் இனி அந்தப் பரிசுகள் அவர் பெயரில் வழங்கப்படும்.

கரு பழனியப்பன்– திரைப்பட இயக்குநர்

அந்திமழை இளங்கோவனை எனக்கு பத்தாண்டு காலமாக தெரியும்.

வள்ளுவர் சொல்லுவார்:

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து

நல்விருந்து ஓம்புவான் இல்.

எவன் ஒருவன் தன் வீட்டுக்கு வருபவனை இன்முகத்தோடு வரவேற்று நல்லவிதமாகப் பார்த்துக் கொள்கிறானோ, அவன் வீட்டில் திருமகள் எப்போதும் நிலைத்திருப்பாள்.

இளங்கோவனை சந்திக்கும்போதெல்லாம் இந்த திருக்குறள்தான் நினைக்கு வரும்.

அவரின் மகன் திருமணத்துக்கு சென்றிருந்தபோது, பெரும் திரளாக வந்திருந்த அத்தனை பேரையும் நேராக விசாரித்து, உபசரித்து, வழி அனுப்பி வைத்தார்கள். அதுதான் அந்த குடும்பத்தின் வழக்கமாக இருந்தது. அது இளங்கோவன் வழியாக அந்த குடும்பத்துக்கு வந்தது.

நான் இரவு 9 மணிக்கு மேல் யாருக்கும் கால் பண்ண மாட்டேன். வரும் போனையும் எடுக்க மாட்டேன். ஆனால் இளங்கோவன் அழைத்தால் எடுப்பேன். ஒரு நோக்கமும்் இல்லாமல் கால் பண்ணுவார்அந்திமழை யூடியூப் சேனலை அவருக்கு பெரிய மீடியாவக மாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்தது. பத்திரிகையை நடத்திக்கொண்டே, யூடியூப் சேனல் நடத்தி, ஒரு படம் எடுக்க ஆசைப்பட்டார். அவரின் ஆசை நிறைவேறும் என்று நினைக்கிறேன்.

இளங்கோவன் எப்படி எந்த காரணமும் இல்லாமல் போன் பண்ணுவாரோ அப்படி அவரின் மகனும் எந்த காரணமும் இல்லாமல் கால் பண்ணும் காலம் வரும்.

தமிழ்நாட்டில் எந்த துறையை தொட்டாலும் அதில் அந்திமழைக்கோ இளங்கோவனுக்கோ நண்பர்களாக இருப்பார்கள். இளங்கோவனின் எல்லா கனவுகளும் நிறைவேறும்

மருத்துவர் கபிலன்

எனக்கும் என் உடன் பிறந்த சகோதரர் இளங்கோவனுக்கு ஒன்றரை வயதுதான் வித்தியாசம். எனக்கு எல்லாமே அவர்தான். 1983ஆம் ஆண்டு. அப்போது அவருக்கு 14 வயசு. தீபாவளி அன்னைக்கு தங்கமகன் படம் வெளியாகிறது. அவர் ரஜினியின் தீவிர ரசிகர். காலையில் வீட்டில் சாப்பிட்டுவிட்டு படத்துக்கு போய்விட்டார். போனவர் இரவு 9: 30 மணிக்குத்தான் வீட்டுக்கு வருகிறார். காலை ஷோவுக்கு டிக்கெட் கிடைக்காமல், அடுத்த ஷோவுக்கு காத்திருந்திருக்கிறார். அதற்கும் டிக்கெட் கிடைக்காமல் காத்திருந்திருக்கிறார். மாலை 6:30 ஷோவுக்குத்தான் டிக்கெட் கிடைத்திருக்கிறது. படம் பார்த்துவிட்டுத்தான் வீட்டுக்கு வருகிறார். எந்த ஒரு காரியத்தை எடுத்தாலும் அதில் வெற்றி் கிடைத்தால்தான் அடுத்த வேலைக்கு போவார்.

அவர் பள்ளிப் பருவத்திலில் கால்பந்தாட்ட வீரராகவும், கராத்தே மாஸ்டராகவும் இருந்திருக்கிறார். இளம் வயதில் அவர் யோசித்ததைத்தான் இப்போது நிறைவேற்றியிருக்கிறார். அவர் வாழ்க்கையில் சண்டை வந்து பிரிந்து போன நண்பர்களே கிடையாது. எதாவது பிரச்னை என்றால் அதுக்கு தீர்வு சொல்வார், இல்லையென்றால் உதவியும் செய்வார்.

(தொகுப்பு: தா.பிரகாஷ்)

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com