வாழ்க மாநிலக் கட்சிகள், மாநில கட்சிகள் ஒழிக !

பிற மாநிலங்களில் தேசிய கட்சிகள்
வாழ்க மாநிலக் கட்சிகள், மாநில கட்சிகள் ஒழிக !
Published on

உத்தரப்பிரதேசம், மேற்குவங்காளம், தமிழ்நாடு, டெல்லி, தெலுங்கானா, சிக்கிம், ஒரிஸா ஆகிய மாநிலங்களுக்கு இடையே  2016 ஆம் ஆண்டில் நிலவும் ஒற்றுமை என்ன? அந்த மாநிலங்களில் இன்று ஆண்டுகொண்டிருப்பது அந்த மாநிலங்களைச் சேர்ந்த  கட்சிகள்தான். தேசிய கட்சிகளாக அங்கிகரிக்கப்பட்டிருக்கும் காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள் ஆகியோருக்கு இங்கு இடம் இல்லை. பீஹார், புதுச்சேரி, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், ஆந்திரப்பிரதேசம், நாகாலாந்து, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் தேசிய கட்சிகள் மாநிலக்கட்சிகளின் துணையுடன் ஆளும் கட்சியாகவோ அல்லது ஆளும் கூட்டணியில் பங்குதாரர்களாகவோ இருக்கின்றன.

தென்னிந்தியாவில் தமிழ்நாடு தவிர பிற மாநிலங்களில் தேசியக் கட்சிகளுக்கு செல்வாக்கும் வாக்குவங்கியும்  இருக்கிறது. ஆந்திரா, தெலுங்கானாவில் உள்ளூர் கட்சிகள் ஆண்டாலும் காங்கிரஸ் பிடியில் சமீபகாலம் வரை அவை இருந்தவை.

மத்தியில் காங்கிரஸோ பாஜகவோ ஆளும்போது அவற்றின் பிடியில் எத்தனை மாநிலங்கள் இருக்கின்றன என்பது நாடுமுழுக்க அவர்கள் கொண்டிருக்கும் செல்வாக்கை அது காட்டும். இப்போது காங்கிரஸ் தனியாக எட்டு மாநிலங்களிலும் பாஜக தனியாக 9 மாநிலங்களிலும் ஆட்சியை நடத்துகின்றன. காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் பொதுவாக சிறிய மாநிலங்கள்.

நாடு விடுதலை அடைந்த பின்னர் பெரும்பாலும் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிதான் வெற்றிபெற்றது. நேருவின் மரணத்துக்குப் பிறகு 1967-ல் தமிழ்நாடு, ஒரிஸா உள்ளிட்ட மாநிலங்களில் பிராந்திய கட்சிகள் ஆட்சிக்கு வந்தன. மேற்குவங்கத்தில்  இடதுசாரிகள் ஆதரவளித்த கூட்டணி ஆட்சி உருவானது. அதுமட்டுமல்லாமல் பீஹார், உபி. மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களில் ‘கிச்சடி அரசுகள்’ உருவாயின. இதனால் “முதல் முதலாக டெல்லியில் இருந்து கொல்கத்தாவுக்கு ரயிலில் போகும்போது வழியில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் எதுவுமே  இல்லை” என்று எழுத்தாளர் ராமச்சந்திரா India After Gandhi  புத்தகத்தில்  குறிப்பிடுகிறார். இதற்கடுத்து பெருமளவுக்கு காங்கிரசுக்கு  மாநிலங்கள் பறிபோகச் செய்த விஷயம் என்பது இந்திரா கொண்டுவந்த அவசர நிலைச்சட்டம். அதன் பின்னர் நடந்த தேர்தல்களில் பீஹார், ராஜஸ்தான், உத்தரபிரதேசம்,மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஜனதாக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. இது இந்தியா முழுக்க தேசியக் கட்சியான காங்கிரசின் பிடி தளர்ந்ததற்கு முதல் அறிகுறியாக அமைந்தது.

 பீஹாரிலிருந்து இதைப் பார்க்கலாம். பீஹார் மாநில அரசியலில் திருப்புமுனை என்பது 1974-ல் ஜேபி எனப்படும் ஜெயப்பிரகாஷ் நாராயணனின்  இந்திரா காந்திக்கு எதிரான போராட்ட அழைப்புடன் தொடங்கியது. ஜனநாயகத்துக்கு எதிராக சர்வாதிகாரத் தன்மையுடன் நடந்துகொண்ட இந்திராவுக்கு எதிராக முழுமையான புரட்சிக்கு அவர் அறைகூவல் விடுத்தார். அதற்கு பெருமளவுக்கு மக்கள் ஆதரவு பீகாரில் கிடைத்தது. அந்த சமயத்தில் அவரது அழைப்பை ஏற்று பீஹார் பல்கலைக் கழகத்தில் மாணவர்களாக படித்துக்கொண்டிருந்த பல இளைஞர்கள் அரசியலில் குதித்தார்கள். அதில் மூன்று பேர் இன்றைக்குக் குறிப்பிடத்தகுந்த பீஹார் மாநிலத் தலைவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் லாலு பிரசாத் யாதவ்(ராஷ்டிரிய ஜனதா தளம்), நிதிஷ்குமார்(ஐக்கிய ஜனதா தளம்),சுஷில் மோடி(பாஜக).

அவசரநிலை விலக்கிக்கொள்ளப்பட்டு 1977-ல் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்ட கையோடு உருவான ஜனதா கட்சி மத்தியிலும் பல மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் முதல்முதலாக பீஹாரில்  ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டது அப்போதுதான்! ஜனதா கட்சி ஆட்சிக்காலத்தில்  கர்ப்பூரி தாக்கூர் முதலமைச்சர் ஆனார். அவர் வெகுநாள் நீடிக்கவில்லை. சிவசுந்தர் தாஸ் என்பவர் முதல்வர் ஆனார். இப்படி உள்கட்சி சண்டைகள்; முதல்வர் மாற்றங்கள் என்பது பீஹாரைப் பொருத்தவரை அதற்கு முந்தைய காங்கிரஸிலும் பிந்தைய ஜனதா கட்சி ஆட்சியிலும் தொடர்ந்தன. மத்தியில் ஜனதா ஆட்சி கவிழ்ந்து, இந்திரா மீண்டும் 1980-ல் ஆட்சியைப் பிடித்ததும் செய்த வேலைகளில் ஒன்று ஜனதா கட்சி ஆட்சி செய்த மாநிலங்களின் சட்டமன்றங்களைக் கலைத்தது. பீஹாரும் காலி செய்யப்பட்டு, மீண்டும் நடந்த தேர்தலில் காங்கிரஸ் ஜெயித்துவிட்டது.  பிறகு அடுத்து வந்த தேர்தலிலும் காங்கிரஸ் வென்றது! இதில் என்ன கூத்து என்றால் இந்த இரண்டு ஆட்சிக் காலத்திலும் ஆறு முதல்வர்கள் மாறிவிட்டார்கள்! மக்கள் பொறுமை இழந்தார்கள்!

1989-ல் மத்தியில் ராஜீவ் ஆட்சிக்கு எதிராக தேசிய முன்னணி  உருவாக்கி, விபிசிங் ஜெயித்த பின்னர் பீஹாரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் துடைத்து எறியப்பட்டது! ஜனதா தளம் சார்பில் முதல்வர் ஆனவர் முன்னாள் மாணவர் தலைவர் லாலுபிரசாத் யாதவ்! மிகவும் பிரபலமான மக்கள் தலைவராக உருவெடுத்தார்!

அன்றிலிருந்து பலகோமாளித்தனங்களை லாலு செய்தும் காங்கிரசுக்கு பிஹார் மக்கள் திரும்ப வாக்களிக்கத் தயாராக இல்லை! 14 ஆண்டுகள் லாலுவின் ராஜ்யம் முடிந்து, நிதீஷ்குமார் சற்று குழப்பத்துக்குப்பின் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து 2005-ல் ஆட்சியைப் பிடித்தார்! பாஜக கூட்டணி என்றதும் இன்னொரு தேசியக் கட்சி உள்ளே வருகிறது என்பதைக் கவனிக்கவேண்டும்! காங்கிரசின் இடத்தை பீகாரில் தேசியக் கட்சியாக அது நிரப்பியது. சுஷில் மோடி பாஜக சார்பில் துணை முதல்வர் ஆனார்!  இந்த  கூட்டணி இரண்டுமுறை வென்றது! இந்த காலகட்டம் பிஹாரின் வரலாற்றில் மிக முக்கியமான வளர்ச்சிக்காலம் என்று கருதப்படுகிறது! வளர்ச்சியே காணாத காட்டுப்பிரதேசமாக  பிகார் ஐம்பது ஆண்டுகளாக இருந்ததற்கு அந்த மாநிலத்தை சுமார் நாற்பது ஆண்டுகாலம் ஆட்சி செய்த காங்கிரசைத் தான் முதல் காரணியாகச் சொல்லவேண்டும்! அத்துடன் அந்த மண்ணில் வாய்த்த தலைவர்களும் அப்படி!  டெல்லியில் ஆண்ட தலைவர்கள் பீஹாரை மதிக்காமல், அதற்கு நிதியே ஒதுக்காமல் ஓரவஞ்சனை செய்துவந்ததாகச் சொல்லித்தான் முக்கியமாக அந்த கட்சியை லாலு பிரசாத் யாதவ் 1989-ல் ஒரங்கட்டினார்! ஆனால் காங்கிரஸ் இப்போதும் இழந்த பழைய செல்வாக்கை அடைய முயற்சி செய்யாமல் இல்லை.

பீஹாரில் 2015-ல் சமீபத்தில் நடந்த தேர்தல் உச்சகட்ட திருப்பங்களைக் கண்டது. நிதீஷ்குமார் பாஜக கூட்டணியில் இருந்தபோதும் மோடி பிரதமர் ஆவதை எதிர்த்தார். எனவே மாநிலத்திலும் கூட்டணி முறிந்துபோனது. அத்துடன் பாஜகவும் சுயமாக வளர்ச்சி அடைந்திருந்தது. எனவே அந்த தேர்தலில் ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம்,பாஜக என மும்முனைப்போட்டி இருந்தால் பாஜகவே வெல்லும் என்கிற நிலை! பார்த்தார்கள் முன்னாள் ஜனதா கட்சிக்காரர்கள்! வேற்றுமையை மறந்து நிதிஷும் லாலுவும் கூட்டணி வைத்துப் போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்துவிட்டார்கள்! இந்த களேபரத்தில் நிதிஷ்-லாலு கூட்டணியில்  காங்கிரசும் இடம் பிடித்து 27 இடங்களில் வென்று ஆசுவாசப்படுத்திக்கொண்டது!

இன்றைக்கு முலாயம் சிங் தன்னுடைய மகன், தம்பி, இன்னபிற உறவினர்களுக்கான பதவிச்சண்டை நடக்கும் இடமாக உத்தரபிரதேசத்தை வைத்திருக்கலாம். ஆனால் காங்கிரஸ் பிடியில் இருந்த உத்தர பிரதேசத்தை 1989-ல்   ஜனதா தளம் கைப்பற்றியபோது முதல்வர் ஆனவர் முலாயம் சிங். அதன் மூலம் காங்கிரஸே அந்த மாநிலத்தில் காணாமல் போக பிள்ளையார் சுழி போட்டவர்  சிங். அதன் பின்னர் காங்கிரஸுக்கு உபியில் சிரமதசைதான்! இத்தனைக்கும் டெல்லியின் அண்டை மாநிலம் உபி. காங்கிரசின் அத்தனை  பிரதமர்களும் உபியில் நின்று ஜெயித்தவர்கள். பாஜகவின் முக்கிய தலைவர்கள் உபியில் இருந்து வந்தவர்கள்.  அப்படி இருந்தும் ஏன் தேசியக்கட்சியான காங்கிரசிடம் இருந்தும் பாஜகவிடம் இருந்தும் உ.பி. கை நழுவிப்போய்க்கொண்டே இருக்கிறது? எப்படி மாயாவதியும் முலாயமும் சக்திவாய்ந்த உ.பி. தலைவர்கள் ஆனார்கள்?

இதற்கு கடந்த ஐம்பதாண்டு உபி அரசியல் வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால் விடை கிடைக்கும்.  உபியின் முதல் முதல்வரான கோவிந்த் வல்லப பந்த், அடுத்து முதல்வர் ஆன சம்பூரானந்த், இவர்களை விட்டால் அதற்கடுத்து ஆட்சிக்கு வந்த எந்த முதல்வரும் ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்ய விடப்பட்டதே கிடையாது. இவர்கள் மாற்றப்பட்டுக்கொண்டே இருந்தார்கள். 1989வரை ஒன்பது தேர்தல்கள், 19 முறை முதல்வர்கள் மாறினார்கள் என்றால் நாடு தாங்குமா? இதற்கிடையில் உருவான மண்டல் கமிஷன், பாபர் மசூதி இடிப்பு ஆகிய இரு பிரச்னைகளும் உபி தேர்தலில் முக்கியமான அம்சங்களாக அமைந்து குழப்பமான அரசியல் சூழலை  உருவாக்கின. ஒரு  பத்தாண்டுகளில் சமாஜ்வாடி, பாஜக,  பிஎஸ்பி என எல்லா கட்சிகளுமே ஆட்சிபீடத்தில் அமர்ந்து இறங்கிவிட்டன. இடையில் மூன்றாண்டுகள்(1997-2000) பாஜக முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்தது. அப்போது அது மூன்றுபேரை முதல்வர் ஆக்கிப்பார்த்த குழப்படியும் உண்டு!

2007-ல் மாயாவதி பிராமணர்- தலித் என்ற சமூகக்கூட்டணியை அமைத்து பெரு வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். “பிராமணர்கள், பனியாக்கள், தாக்கூர்களை செருப்பால் அடி” என்று கோஷமிட்ட பகுஜன் சமாஜ், “பிராமணர்களின் சங்கு ஒலிக்க, யானை(பகுஜன்சமாஜ் சின்னம்) முன்னோக்கிச் செல்லும்” என்று மாற்றிக்கோஷம் போட்டது. 2007 தேர்தலில் 89 பிராமணர்களுக்கும், 2012 தேர்தலில் 74 பிராமணர்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பை அளித்தது.  ஆனால் 2012 தேர்தலில் இந்த உத்தி பலிக்கவில்லை. சமாஜ்வாடி கட்சி வென்று முலாயம் சிங் தன் மகன் அகிலேஷ் யாதவுக்கு முதல்வர் பதவியைக் கொடுத்தார்.

அயோத்தியில் ஆரம்பித்த பாஜகவின் அகில இந்திய எழுச்சி, அயோத்தி அமைந்திருக்கும் மாநிலமான உத்தரபிரதேசத்தில் வெற்றியை ஆரம்பத்திலேயே கொடுத்திருக்கவேண்டும். ஆனால் அது நிகழ மோடி பிரதமர் பதவிக்குப் போட்டியிடும் வரை(2014) காத்திருக்க வேண்டி இருந்தது. குஜராத்தில் இருந்து மோடி தன் நண்பரான அமித் ஷாவை உ.பி. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பொறுப்பாளராக அனுப்பினார். மேற்கு உபியில் ஏற்பட்ட மதரீதியிலான பிளவுகள், மோடி உபியில் வாரணாசியிலேயே போட்டியிட்டது உள்ளிட்ட இன்னபிற காரணங்களால் அபார வெற்றியை உபி நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்குத் தந்தது. அதனால் தற்போது நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வென்று உத்தரபிரதேசத்தில் மீண்டும் தேசியக் கட்சியின் ஆட்சியை ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்படுகிறது. சமாஜ்வாடி உள்கட்சிப் பூசல்களால் தடுமாறுகிறது; ஏற்கெனவே தான் பயன்படுத்திய பிராமணர்- தலித் கூட்டணியை இம்முறை மாயாவதி பயன்படுத்தப்போவதில்லை. அது இன்னொருமுறை பலன் அளிக்குமா என்பது உறுதி இல்லை. காங்கிரஸ் கட்சி உபியில் முதல்வர் வேட்பாளராக ஷீலா தீட்சித்தை அனுப்பி வைத்திருக்கிறது. அதன் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ரீட்டா பகுகுணா பாஜகவில் இணைந்து விட்டார். இந்த நான்கு கட்சிகளுக்குமே 2017 தேர்தல் புதிய அணுகுமுறையுடன் அணுகவேண்டியதாகவே இருக்கிறது.

காங்கிரஸ் கடந்த இருபது ஆண்டுகளில் தொடர்ந்து வாக்கு வங்கியை இழந்துகொண்டே வந்து இப்போது பத்துசதவீதத்துக்கும் குறைவான வாக்குகளையே இங்கு பெற முடிகிறது. இத்தனைக்கும் சோனியாவும், ராகுலும் நாடாளுமன்றத்துக்கு கிழக்கு உபியில் உள்ள சுல்தான்பூர், அமேதி தொகுதிகளில் இருந்துதான் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். கடந்த மக்களவைத் தேர்தலில் மோடியின் தேர்தல் பிரச்சா ரத்தை திட்டமிட்டவரான பிரஷாந்த் கிஷோரை காங்கிரஸ் உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகத்தை வகுப்பதற்காக நியமித்துள்ளது. காங்கிரசுக்கு ஆதரவாக இருந்த பிராமணர் வாக்குகளை மீண்டும் பெறுவது முக்கியமானது என்பதால் அதற்கான திட்டங்களை அக்கட்சி தீட்டுகிறது. பிராமணரான ஷீலா தீட்சித் உபிக்கு முதல்வர் வேட்பாளராக அனுப்பப்பட்டது அதற்கொரு முக்கிய நடவடிக்கை.

 காங்கிரஸ், பாஜகவின் உபி திட்டங்கள் இப்படி இருக்க இன்னொரு மாநிலமான மேற்குவங்கத்தில் இரு கட்சிகளையும் ரவுண்டு கட்டி அடிக்கிறார்கள். 34 ஆண்டுகாலம் இன்னொரு தேசிய கட்சியான சிபிஎம் கூட்டணிக்கே வாய்ப்பைத் தந்தவர்கள் அவர்கள். திரிணமூல் காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்து முன்னாள் காங்கிரஸ்காரரான மம்தா பானர்ஜி கம்யூனிஸ்ட்களிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறார்.

இடதுசாரிகள் கடந்த ஐந்தாண்டுகள் மம்தாவின் ஆட்சியில் பெரும் இழப்புகளைச் சந்தித்தே வந்துள்ளனர். அவர்களுக்கும்  திரிணாமூல் தொண்டர்களுக்கும் இடையே வன்முறை நிறைந்த உறவே நிலவி வருகிறது. இடதுசாரிகளின்  நில சீர்திருத்தங்களால் பயனடைந்த விவசாயிகள் இப்போது திரிணாமூல் பக்கம் என்று சொல்லப் படுகிறது.  நகர்ப்புற நடுத்தர வர்க்கம் இப்போதும் இடதுசாரிகளை ஆதரித்தாலும் கிராமப்புறங்களில் மம்தாவே செல்வாக்கானவராக இருக்கிறார். 2016 தேர்தலில் தனித்துப்போட்டியிட்டு அதிக இடங்களைப் பெற்று செல்வாக்கு மங்காதவராகவே இரண்டாவது முறை ஆட்சி செய்கிறார் மம்தா.

2011 தேர்தலில் மம்தாவுடன் கூட்டணி வைத்தனர் காங்கிரஸ் கட்சியினர். பின்னர் 2016 தேர்தலில் இடதுசாரிகளுடன் பெரிய கூட்டணி அமைத்து படுதோல்வியைத் தழுவினர். இப்படி எல்லாவற்றையும் தவறாகவே காங்கிரஸ் செய்வதால் அங்கே அதற்கு மீட்சி என்பது இல்லை! பாஜக 2011 தேர்தலில் மூன்று இடங்களிலும் 2016 தேர்தலில் ஆறு இடங்களிலும் வெற்றிபெற்றது. மோடி அலை வீசிய 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் அங்குள்ள 42 இடங்களில் பாஜக வென்றது இரண்டு இடங்கள்தான்! இப்போதைக்கு பாஜக அங்கே வளர்ச்சி அடையாத கட்சிதான்!

 இந்த மூன்று மாநிலங்களை விட்டால் தேசியக் கட்சிகளுடன்  ஊடலும் உறவும் கொண்டிருக்கக்கூடிய மாநிலங்கள் காஷ்மீரும் பஞ்சாப்பும். காங்கிரசும் பாஜகவும் உள்ளூர் கட்சிகளான பிடிபி, தேசிய மாநாட்டுக்கட்சிகளுடன் சேர்ந்தால்தான் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கமுடியும்.

பஞ்சாப்பில் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார், சீக்கியர்களுக்கு எதிரான டெல்லி கலவரம்,  சீக்கிய தீவிரவாதம் ஆகிய பிரச்னைகளால் காங்கிரசுக்கு இழப்பு ஏற்பட்டது. இந்த இடைவெளியில் சிரோன்மணி அகாலிதளம் வளர்ந்தது. அதனுடைய நெருங்கிய கூட்டாளியாக பாஜக தன்னைப் பொருத்தி அங்கே ஆளும் கூட்டணியில் வலம் வருகிறது.

 தென்னிந்தியாவில் பாஜக கர்நாடகா தவிர்த்து பிறமாநிலங்களில் தன்னை நிலை நிறுத்த முடியவில்லை. ஒரிசாவில் பிஜுஜனதா தளத்துடன் இருந்த கூட்டணியும் உடைந்துவிட்டது. வடகிழக்கில்  முதல் முறையாக அஸ்ஸாமில் பாஜக தற்போது ஆட்சியைப் பிடித்திருப்பது அக்கட்சிக்கு வளர்ச்சி!

வலிமையான மாநிலக்கட்சித் தலைவர்கள் இருக்கும் இடத்தில் தேசிய கட்சிகள் வேறுவழியில்லாமல் அவர்களுடன் சேர்ந்து இயங்குகின்றன. ஆனால் மாநிலங்களில் இருந்து டெல்லி வேலை நிமித்தமாகச் செல்லும் தலைவர்களை அங்கிருப்பவர்கள் கிள்ளுக்கீரையாகத்தான் பாவிக்கிறார்கள். இதற்கு பல்வேறு புகழ்பெற்ற உதாரணங்கள் உண்டு. வேண்டுமானால் தலைவரைக் காண்பதற்காக வாரக் கணக்கில் டெல்லியில் முகாமிடும் தேசிய கட்சிக் காரர்களைக் கேட்டுப் பாருங்கள்.

அது 1982. பிரதமர் இந்திராவின் மகனும் எம்பியுமான ராஜிவ் காந்தி ஹைதராபாத் விமானநிலையத்தில் வந்து இறங்குகிறார். அவரை வரவேற்க காங்கிரஸ் முதல்வர் அஞ்சையா என்பவர் மாலையோடு செல்கிறார். உடன் ஆதரவாளர்கள் கூட்டம். ராஜிவுக்குக் கோபம் வருகிறது. அஞ்சையாவை மாநில முதல்வர்  என்றுகூடப் பாராமல் ஏன் இவ்வளவு கூட்டம் என்று திட்டுகிறார். அந்த கொடுமை தாளாமல் அஞ்சையா அங்கேயே அழுதுவிடுகிறார். இந்த செய்தி ஏற்படுத்திய தாக்கமும் ஆந்திராவில் என்.டி.ஆரின் தெலுங்கு தேசம் உருவாகி ஆட்சியைப் பிடிக்க ஒரு காரணியாக அமைந்ததாக சொல்வார்கள்.

மாநிலங்கள் தேசியக் கட்சிகளின் கையைவிட்டு விலகிச் செல்வது ஏனென்று புரிந்துகொள்ளலாம். அஞ்சையா ஆவதற்கு யாருக்கும் விருப்பம் இல்லை.

டிசம்பர், 2016.

logo
Andhimazhai
www.andhimazhai.com