ரோமாபுரி காட்டும் வழி!

ரோமாபுரி காட்டும் வழி!
Published on

மதுரையில் 21, பிப்ரவரி 2018 இல்  தொடங்கப்பட்ட கமலின் ‘மக்கள் நீதி மய்யம்' வர இருக்கின்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் என்னவாகும் என்பதை விரிவாகப் பார்ப்பது தான் இந்த கட்டுரையின் நோக்கம்.

மய்யத்தின் நோக்கம் ஆட்சியைப் பிடிப்பதா அல்லது வாக்குகளைச் சிதறடித்து வேறு யாருக்கோ உதவுவதா? அல்லது யாரின்  ‘பி‘  டீம் என்ற கேள்விகளும் சந்தேகங்களும் பொது வெளியில் அதிகமாக உள்ளன.

‘அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து சங்கி,  ‘பி' டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது. தன் வாழ்க்கையே தன் செய்தி என வாழ்ந்து காட்டிய காந்திக்குத் தான் நான் ‘பி' டீம். என்கிறார் கமல்.

கமலின் இந்த பதில் பலரைப் போல் அவரது நண்பரான மாலனையும் திருப்திப்படுத்தவில்லை. ‘அரசியலில் உங்கள் எதிரி யார் என இன்றும் விளங்கவில்லை. விளக்கப்படவில்லை. ஒருநாள் உங்கள் லட்சிய நாயகன் பெரியார் என்கிறீர்கள். இன்னொரு நாள் காந்தியின்   ‘பி' டீம் என்கிறீர்கள். ஒருநாள் ஃபிடல் காஸ்ட்ரோவைப் போன்ற தோற்றத்தில் படம் ஒன்று பிரசுரமாகிறது. இன்னொரு நாள் கார்ப்பரேட்டுகள் வளர்ச்சிக்கு அவசியம் என்கிறீர்கள். குழப்பமாக இருக்கிறது' என்று மாலன்  துக்ளக் கட்டுரையில் குறிப்பிடுகிறார். மாலன் குறிப்பிடும் குழப்பம் தான் மய்யத்தின் முதல் எதிரி.

கமலின் படங்கள்  ‘ஏ' செண்டரில் நல்ல வரவேற்பை பெறும். அதே போல் தான் மய்யத்தின் நிலவரமும் என்கிறார் அரசியல் விமர்சகர் ஒருவர். 2019 நாடாளுமன்ற தேர்தலில் 37 தொகுதிகளில் போட்டியிட்ட ம.நீ.ம பெற்ற மொத்த வாக்குகள் 16,13,708. இதில் கோவை, ஸ்ரீபெரும்புதூர், வடசென்னை, மத்திய சென்னை, மதுரை, திருவள்ளுவர், திருப்பூர், பொள்ளாச்சி, விருதுநகர் மற்றும் சேலம் ஆகிய பத்து தொகுதிகளில் பெற்ற மொத்த வாக்குகள் 8,68,635. மீதமுள்ள 27 தொகுதிகளில் சேர்த்து 7,45,073 வாக்குகள் தான் வாங்கியுள்ளனர். 27 தொகுதிகளில் ம.நீ.ம பெற்ற மொத்த வாக்குகள் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் டி.ஆர்.பாலு பெற்ற வாக்குகளை விட 48208 (7,93,281 - 7,45,073) வாக்குகள் குறைவு.

2019க்கும் 2021க்கும் இடைப்பட்ட காலத்தில் ம.நீ.ம அதிக ஓட்டுகளைப் பெறுவதற்கு தேவையான உழைப்புகளை பெரிதாக செய்யவில்லை. இரண்டாம் மூன்றாம் கட்ட தலைவர்களையோ போதுமான உள்கட்டமைப்புகளையோ ஏற்படுத்தவில்லை. தொலைக்காட்சி விவாதங்களில் நிகழ்த்தப்படும் ஆவேசமான பங்கேற்புகள் வாக்குகளாக மாறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

திரைப்படங்களில் பரிசோதனை செய்வது போல் பரப்புரையிலும் தொடர்ச்சி இல்லாமல் பேசும் பாணியை (Non Linear) கமல் திடீர் திடீரென்று கடைப்பிடிப்பது  ஏன் என்று பிடிபடவில்லை.

சம்பந்தமில்லாமல் எம்.ஜி.ஆர் மடியில் வளர்ந்தேன், எம்.ஜி.ஆர் படத்தை ஸ்டாம்ப் சைசில் வைத்துள்ளார்கள் என்று இவர் சொல்லப்போக,  உஷாரான அதிமுகவினர்  போஸ்டர்களில் எம்.ஜி.ஆர் படத்தை பெரிதுபடுத்திவிட்டனர். எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாடுவதன் மூலம் எல்லோரும் வாக்குகளை பெற்றுவிட முடியாது.  ‘எம்.ஜி.ஆர் என்ற பல்கலைகழகத்தில் நாற்பது ஆண்டு காலம் படித்தவள்,' என்று ஓட்டு கேட்ட எம்.ஜி.ஆரின் மனைவி வி.என்.ஜானகியும் தோற்றார் என்பது தமிழகத்தின் அரசியல் வரலாறு.

ஹோம் வொர்க் செய்வதில் கமல் மிகவும் கெட்டிக்காரர், செய்யும் விஷயங்களில் கரை கண்டுவிட்டுத் தான் புதுசாக எதையாவது அறிமுகப்படுத்த தொடங்குவார் என்பது திரைத்துறையில் கமலோடு பயணம் செய்பவர்கள் தரும் பாராட்டு. 1960-ஆம் ஆண்டு திரைப்பயணத்தை ஆரம்பித்த கமலுக்கு இயக்குநராகும் தகுதி எப்போதோ வந்துவிட்டது. ஆனால் ஹேராமை இயக்கியது 2000-இல். இதற்குமுன் அவ்வை சண்முகியின் இந்தி ரீமேக்கான ‘சாச்சி 420' திரைப்படத்தை 1997-இல் இயக்கினார்.

இயக்குநர் ஆவதற்கு தன்னை இவ்வளவு தயாரிப்புகளுக்கு ஆட்படுத்திய கமல், முதல்வராவதற்கு போதுமான களப்பணியோ தயாரிப்புகளோ ஆற்றவில்லை என்பதற்கு சமீபத்திய எதிர்வினைகள் தான் சாட்சி.

சொன்னதைச் செய்வது அரசியலின் நம்பகத்தன்மை பெறுவதற்கான முதல் முயற்சி. ம.நீ.ம தொடங்கப்பட்டபோது, ‘மக்களையும் நீதியையும் மையமாக கொண்டது மக்கள் நீதி மய்யம்.

தராசின் நடுமுள் நாம், எந்த பக்கமும் சாய மாட்டோம். எட்டு கிராமங்களை தத்தெடுத்து அனைத்தையும் செய்து காட்டுவோம், தவறு இருந்தால் திருத்திக்கொள்வோம். கிராமங்களை தத்தெடுப்பதை கிண்டல் செய்கிறார்கள், நாங்கள் விஞ்ஞானிகள் அல்ல சமூக சேவகர்கள். செய்ய வேண்டியதை செய்தாலே போதுமானது' என்று கமல் பேசியது செய்தியாக வந்தது. 34 மாதங்கள் கடந்துவிட்டன. ஆனால் அந்த எட்டு கிராமங்கள் பற்றி எந்த பரப்புரையிலும் கமல் எதுவும் பேசவில்லை. இந்த எட்டு கிராமங்கள் தத்தெடுப்பது என்னாச்சு?

‘நாப்பிளக்க வாய்ச்சழக்கு

பேசுகின்ற தலைவர்கள்

மக்கள் நீதி மலரும்போது

எந்த பக்கம் ஓடுவீர்?!'

இது கமல் ட்விட்டரில் கேட்ட கேள்வி.

மக்கள் நீதி மலர வேண்டுமானால் அவர் கிமு 64இல் கூறப்பட்ட அறிவுரையை பின்பற்றி பார்க்கலாம். இது ரோமாபுரியில் நடந்தது. அரசியலுக்கு புதியவரான மார்கஸ் டுலியஸ் சிசிரோ  புத்திசாலி, நல்ல பேச்சாளரும் கூட. ரோமில் உயர்ந்த பதவிக்கு தான் வர வேண்டுமென்று விரும்பினார்.

இவர் ரோமாபுரி மக்கள் ஆட்சிக்குழுவுக்கு கிமு 64 இல் நடந்த தேர்தலில் போட்டியிட்டார்.  இவருக்கு குயிண்டஸ் டுலியஸ் சிசிரோ என்ற ஒரு சகோதரன் உண்டு. ‘என் இனிய மார்கஸ், உனக்கு அருமையான தகுதிகள் பல உண்டு. ஆனால் இல்லாத தகுதிகளை நீ பெற்றாக வேண்டும். அவை நீ பிறக்கும்போதே உன்னிடம் உருவாகிவிட்டவை என தோற்றம்தர வேண்டும்' என்று இவர் மார்கஸுக்கு ஒரு கடிதம் எழுதினார். இக்கடிதத்தில் தேர்தலில் வெற்றிபெறக் கூறப்பட்ட வழிகளை சுருக்கமாக தருகிறோம்.

1) எல்லோருக்கும் எல்லாம் கிடைக்குமென உறுதி அளிக்கவேண்டும்.

2) சாதகமான சக்திகள் அனைத்தையும் திரட்டுக.

3) எதிரியின் பலவீனம் அறிந்து பயன்படுத்துக.

4) வாக்காளர்களை வெட்கமின்றி புகழ்ந்து தள்ளுக.

5) மக்களுக்கு நம்பிக்கையை அளித்திடுக.

நடிப்பில் வாழும் சிவாஜி என்று நம்பப்படுகிற

நீங்கள் அரசியலில் எம்.ஜி.ஆர் போல் வெற்றி பெற வாழ்த்துகள்.

ஜனவரி, 2021

logo
Andhimazhai
www.andhimazhai.com