மக்கள் ஆய்வகத்தின் சார்பாக இன்னொரு தேர்தல் கணிப்புக்குத் தயாராகிக்கொண்டிருந்த லயோலா கல்லூரி முன்னாள் பேராசிரியர் ராஜநாயகத்தை சந்தித்தோம். கருத்துக்கணிப்புகளின் மூலம் தேர்தல் முடிவு ரகசியங்கள் அவிழ்ப்பது பற்றிப் பேசினார்.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் திமுககூட்டணியைவிட 60 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றது அதிமுக. இதே கட்சி 2011 சட்டமன்றத் தேர்தலில் 45.5 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றது. இவ்வளவு அதிகமாக வாக்குகளைப் பெற்ற கட்சியை இந்தத் தேர்தலில் திமுகவோ, மூன்றாவது அணியோ வெல்வது சிரமம்தானே?
2014 நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் ஜெயலலிதா பிரதமர் ஆவார் அல்லது மத்திய ஆட்சியில் முக்கிய பங்குவகிப்பார் என்ற எண்ணத்தில் வாக்களித்தது அவருக்குப் பெருவெற்றியை ஈட்டித்தந்தது. இதை சட்டமன்றத் தேர்தலில் விழ இருக்கும் வாக்குகளுடன் ஒப்பிட முடியாது. 2011 ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் நடந்த வாக்களிப்பை இந்த தேர்தலுடன் ஒப்பிடலாம். அந்த தேர்தலில் திமுக ஆட்சியின் குடும்ப ஆதிக்கத்துக்கு எதிரான மனநிலை வெளிப்பட்டது.அதனால் பெரிய வாக்குவித்தியாசம் உருவானது. ஆனால் எவ்வளவு எண்ணிக்கையில் வாக்குகளை அதிமுகவோ திமுகவோ வாங்குகிறார்கள் என்பதற்கும் எத்தனை இடங்களில் வெல்கிறார்கள் என்பதற்கும் தொடர்பு இருக்கும் என்று உறுதியாகச் சொல்லமுடியாது.
உங்கள் கருத்துக்கணிப்புகள் என்ன சொல்கின்றன?
இதுவரை மூன்று கருத்துக்கணிப்புகளை இத்தேர்தலை ஒட்டி நடத்தியிருக்கிறோம். 2014 நவம்பர், 2015 ஆகஸ்ட், ஜனவரி 2016 என மூன்றுமுறை மக்களின் கருத்துகளை அறிந்துள்ளோம். மதுவிலக்கு என்பது ஊடகங்கள் சொல்கிற அளவுக்கு பெரிய தேர்தல் பிரச்னையாக இல்லை. எல்லா கட்சிகளுமே அதை வலியுறுத்திவிட்டதால் அது ஒரு முக்கியமானதாக இருக்க வாய்ப்பில்லை.ஆனால் அதுவொரு சமூகபிரச்னையாக பூதாகரமாக உருவாகிவிட்டது. நாங்கள் சென்ற எல்லா இடங்களிலும் பொதுவெளியில் குடித்துவிட்டு பிதற்றிய ஆட்களைக்கண்டோம். பசிக்கொடுமையே இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருப்பினும்கூட ஏதோவொரு உளவியல் சிக்கலில் மக்கள் தவிப்பதுபோன்றே தோன்றியது. இந்த ஜனவரியில் நாங்கள் எடுத்த கணிப்பில் திமுக அதிமுக இடையே சிறிய வித்தியாசமே இருந்தது. அடுத்த ஆட்சி அமைய யாருக்கு வாய்ப்பு என்று கேட்டபோது திமுகவுக்கே வாய்ப்பு என்று கூறியவர்கள் 2 சதவீதம் அதிகம் இருந்தனர். ஏனெனில் அப்போது தேமுதிக, காங்கிரஸ் கட்சிகள் திமுக அணியில் சேரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. எனவே திமுக ஆட்சி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதுவே நடந்திருந்தால் மெல்ல திமுகவுக்கு ஆதரவான மனநிலையும் வாக்காளர்களிடம் உருவாகி இருக்கலாம். ஆனால் அந்த கூட்டணி உருவாகவில்லை. எனவே இன்று எந்த கட்சியும் நம்பிக்கையுடன் இருப்பதாகச் சொல்ல இயலாது.
இந்த தேர்தலில் வேறு என்ன விஷயங்கள் முக்கிய பங்காற்றும் என்று நினைக்கிறீர்கள்?
அரசியல் கட்சிகளிடையே கூட்டணி உருவாக்கங்கள் நிகழ்ந்த விதங்களும் யாரும் ரசிக்கும் விதத்தில் இல்லை. கட்சிகள் அம்பலப்பட்டு நிற்கின்றன. இது நடுநிலை வாக்காளர்களிடம் கொஞ்சம் முகச்சுளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படி அரசியல்கட்சிகள் அம்பலமானது, மக்களுக்கு சிறந்த அரசியல் கல்வியாக அமைந்துள்ளது. அந்த விதத்தில் இது நல்லதே. இந்த தேர்தலில் இன்னொரு புனைவாக முன்வைக்கப்படுவது சமூக ஊடங்கள்ஆதிக்கம் செலுத்தும் என்பது. ஓர் ஊடகவியலாளன் என்கிற முறையில் இந்த சமூக ஊடகங்களின் தாக்கம் மிகவும் குறைவு என்றே என்னால் சொல்லமுடியும். சமூக ஊடகங்கள் பத்துசதவிதம் தாக்கம் ஏற்படுத்தினால் தொலைக்காட்சிகளின் தாக்கம் அதைவிட ஆறுமடங்கு அதிகம். அச்சு ஊடகங்கள் நான்கு மடங்கு அதிகமாக தாக்கம் ஏற்படுத்துகின்றன. ஆனால் இந்த ஒட்டுமொத்த ஊடகங்களுமே என்ன அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இன்னொரு விசயம்.
தேர்தல்களில் முக்கிய ஆதிக்கம் செலுத்தும் விஷயங்கள் என்ன?
தமிழ்நாட்டு தேர்தலில் சாதிதான் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடம் கட்சி. அதன் உறுப்பினர்கள், அதற்குத்தான் வாக்கு போடுவார்கள். அடுத்த இடம் மதத்துக்கு. நான்காவது இடத்தில்தான் ஊடகங்கள் இருக்கின்றன. ஐந்தாவது இடத்தில்தான் உள்ளூர் வேட்பாளர் இடம்பெறுகின்றார். பதினைந்து ஆண்டுகளாக நான் கணிப்புகள் களஆய்வுகள் செய்துவருகின்றேன். ஒவ்வொரு இடத்திலும் தொகுதி பிரச்னைகளைக் கேட்கும்போது எல்லோரும் பலவற்றை வரிசைப்படுத்துவார்கள். இதைத் தீர்க்கக்கூடிய கட்சி எது என்றால் பெரும்பான்மையான பதில் யாராலும் இதைத் தீர்க்கமுடியாது என்பதுதான், திரும்பத் திரும்ப இதையே நான் கேட்டுவருகிறேன். மக்கள் தங்கள் பிரச்னைகளை யாரும் தீர்க்கமாட்டார்கள் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். எனவே மிகவும் சீரியசாக ஆகாதவரை உள்ளூர் பிரச்னைகள் தேர்தலில் பிரதிபலிப்பது இல்லை.
முதல்வர் ஜெயலலிதா, கலைஞர், விஜயகாந்த் என மூன்று தலைவர்களும் முன்புபோல் சுறுசுறுப்பாக இல்லாத சூழல். இவர்கள் மூவரும் முதல்வர் வேட்பாளர்கள். இவர்களால் விரிவான பரப்புரை நிகழ்த்த முடியாத சூழல் முடிவுகளைப் பாதிக்குமா?
இந்த தேர்தலில் நல்லவிஷயம் நிறைய இருக்கிறது என்றேன் அல்லவா. அதில் இதுவும் ஒன்று. இது மக்களுக்கான ஓர் அரசியல்பாடம்தான். அரசியல் கட்சிகள் நிர்வாக ரீதியாக வலுவிழந்துபோய் உள்ளன. அத்துடன் இரண்டாம் கட்டத் தலைவர்களை முன்னிலைப்படுத்த கட்சிகள் தயாராக இல்லை. இவர்களே ஏன் அவ்வளவு பாரத்தையும் சுமக்கவேண்டும்? இவர்களுக்கு பின்னால் கட்சி என்ன ஆகும்? இந்த கேள்விகள் மக்களிடம் எழுகின்றன. இந்த உணர்வு பரவலாக உள்ளது. இதற்கு மாற்று என்ன? மாற்று என்று சொல்லிக்கொண்டுவந்த கூட்டணியும் இதுபோலவே உள்ளது. அவர்கள் சொந்தக் கொள்கைகளை அடகுவைத்ததுதான் அவர்கள் கொண்டுவந்திருக்கும் மாற்று. இவர்களுக்கு அவர்கள் வாக்குவங்கியைத் தாண்டிச் செல்வதற்கான வாய்ப்பு இந்த தேர்தலில் இல்லை.
ஆளுங்கட்சிக்கு எதிராக விழ இருக்கும் வாக்குகளை மூன்றாவது அணி பெறும் என்று சொல்கிறார்களே?
அதிமுகவுக்கு எதிரான கட்சியாக திமுகவை மக்கள் நம்பினால் ம.நகூட்டணியைத் தாண்டி மக்கள் வாக்களித்துவிடுவார்கள். அதற்கான நம்பிக்கையை அக்கட்சி ஊட்டியிருந்தால் அவர்கள் மூன்றாவது அணிபற்றிக் கவலைப்பட வேண்டியது இல்லை. இப்போதைக்கு வாக்காளர்கள் முடிவுக்கு வந்ததுபோல் தெரியவில்லை. இந்த எண்ணங்கள் மே 5க்குப் பின்னர்தான் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பிக்கும். அதிமுக, திமுகவுக்கு மாற்று என்பது ஒரு கோஷமாக உள்ளது.. இதற்கெல்லாம் இந்த தேர்தலில் வாய்ப்புகள் உண்டா?
மாற்றம் உருவாவது என்பது 2021ல் தான் நடக்கும் என்பது என்னுடைய கணிப்பு. அடுத்து அமையவிருக்கும் ஆட்சி இதுவரை இருந்த அதிமுக திமுக கட்சிகளின் ஆட்சிகளைப் போன்றே செயல்பாட்டில் இருந்துவிட்டால் 2021ல் நிச்சயம் மாற்றம் ஏற்படும். மக்களின் அதிருப்தி எண்ணங்கள் ஓர் அலையாக மாறும் வாய்ப்பு ஏற்படும். ஆனால் இந்த தேர்தலில் அந்த எண்ணங்கள் மாறுதலை ஏற்படுத்தாமல் வடிந்துவிடும் என்றே கருதுகிறேன்.
மே, 2016.