மோடியின் பாராட்டு!

தேர்தல்களம் : வைகைச் செல்வன், அதிமுக
வைகைச் செல்வன், அதிமுக
வைகைச் செல்வன், அதிமுக
Published on

தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரத்துக்கு தொடக்கமாக அமைந்த கூட்டணிக் கட்சித்தலைவர்கள் பொதுக்கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி வந்திருந்தார். மேடையில் தொகுப்புரை வழங்கும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டிருந்தது.

மோடியைப் பற்றி நான் பேசுவதை அவர் உற்று கவனித்துக்கொண்டிருந்தார். இப்போது மோடி ஜி பேசுவார் என்று நான் சொன்னவுடனே இருக்கையில் இருந்து யாரும் சுட்டிக்காட்டாமல் எழுந்துவிட்டார். உரை முடித்து கிளம்பிச்செல்கையில் என்னைக் கடந்து இரண்டு அடிகள் சென்றவர் திரும்பி என்னிடம் கைகுலுக்கி சிறப்பாக இருந்தது என்று
சொல்லிவிட்டுச் சென்றார். தமிழ் தெரியாவிட்டால்கூட என் உச்சரிப்பு அவருக்குப் பிடித்திருக்கவேண்டும். மருத்துவர் ராமதாஸும் அந்தத் தொகுப்புரைக்காகப் பாராட்டினார்.

அதன் பின்னர் மதுரையில் தொடங்கி என் பிரசார பயணத்தை தஞ்சையில் முடித்தேன். எல்லா ஊர்களிலும் சென்று அரசின் சாதனைகளைச் சொல்லி வாக்குகளைக் கேட்டேன். எழுச்சியுடன் மக்கள் வந்து உரைகளைக் கேட்டதைக் கண்டேன். இதுமட்டும் அல்லாமல் முதல்வர், துணை முதல்வர் ஆகியோருடைய பயணங்களிலும் இணைந்து பரப்புரைகளை மேற்கொண்டேன். புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பிரசாரப் பயணத்தில் கண்டதுபோன்ற மக்களின் நெகிழ்வான முகங்களை இப்போதும் காணமுடிந்ததில் மகிழ்ச்சி!

என்னுடைய தனிப்பட்ட பரப்புரைப் பயணங்களின்போது கூட்டணிக் கட்சிகளான தேமுதிக, பாமக, பாஜக, தமாக மற்றும் புதிய தமிழகம் ஆகியவற்றின் தொண்டர்களின் ஆரவாரத்தை எதிர்கொண்டேன். கடுமையான வெயிலாக இருப்பினும் சமாளித்து, திறந்த வாகனத்தில்,  இந்தப் பரப்புரைப் பயணம் நடந்தது. நிறையப் பேசமுடியவில்லை. அதிகமாக தண்ணீர் குடிக்கவேண்டி இருந்தது. ஆனாலும் சில நாட்களிலேயே வெயிலும் பழகிப்போய்விட்டது. "அம்மா அவர்கள் அமைத்த இந்த ஆட்சி தொடரவேண்டும் என்பதற்காக எங்களுக்கு வாக்களியுங்கள், இந்த ஆட்சியைக் கலைக்கவிரும்புவர்கள், தமிழர்களின் நலன்களைக் கைவிட்டவர்கள் ஆகியோரை புறந்தள்ளுங்கள்' என்கிற ரீதியில் என்னுடைய பரப்புரையின் மையக்கருத்தை அமைத்துக்கொண்டேன். நீலகிரியில் கூடலூருக்கு மேலே பந்தலூரில் துணைமுதல்வர் பிரசாரம். நான் காரில் அமர்ந்திருந்தேன். அப்போது ஒரு தம்பி நெருங்கி வந்து என்  உரைகளை ரசித்துக் கேட்பவர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பேசினார். இதுபோல் பல சிற்றூர்களிலும் என்னை அடையாளம் கண்டுகொண்டார்கள். தொலைக்காட்சி ஊடகங்கள் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கின்றன.

பல இடங்களில் திரண்டிருந்த மக்கள்
சக்தியைக்கண்டபோது அந்த சமுத்திரத்தின் முன்னால் ஒரு சிறுதுளியென என்னை உணர்ந்தேன்.

மே, 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com