மக்களை நம்பி நிற்கிறேன்!

தேர்தல் : சந்திப்பு - ஏகே மூர்த்தி, அரக்கோணம்.
மக்களை நம்பி நிற்கிறேன்!
Published on

பல தேர்தல்களில் போட்டியிட்ட அனுபவம் கொண்டவர் நீங்கள். இப்போது எப்படி இருக்கிறது அரக்கோணம் தொகுதி மக்கள் முன்னால் உங்கள் பயணம்?

செங்கல்பட்டு நாடாளுமன்றத் தொகுதி இருந்தபோது இரண்டு முறை எம்பியாக ஏற்கெனவே போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். மூன்றாவதுமுறை ஸ்ரீபெரும்புதூரில் டி ஆர் பாலுவால் பத்தாயிரம் வாக்குகள் வித்தியாசத் தில் தோற்கடிக்கப்பட்டேன். அடுத்து ஆரணி தொகுதியில் போட்டியிட்டபோது 2,50,000 வாக்குகள் வாங்கிக் காட்டியிருக்கிறேன். இப்போது நாங்கள் இடம்பெற்றிருக்கும் கூட்டணி மிக வலுவான கூட்டணி. மத்தியில் நிலையான வலிமையான ஆட்சி வேண்டும்; அதே போல் தமிழக மக்களுக்கும் நன்மை செய்வதாக அமையவேண்டும் என்பதற்காகத்தான் மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்கள் இந்த கூட்டணியை அமைத்தார்கள். செல்லும் இடமெல்லாம் அனைவரின் ஆதரவையும் காணமுடிகிறது.

அரக்கோணம் தொகுதிக்கு என்ன வாக்குறுதிகளை முன் வைக்கிறீர்கள்?

வாக்குறுதிகள் என்று எதையும் அள்ளி வீசுவதை மருத்துவர் அய்யாவோ நானோ விரும்புவது இல்லை. மத்தியிலும் மாநிலத்திலும் நிலையான ஆட்சி வந்தால், மக்கள் கேட்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும். நான் பாமக சார்பில் ரயில்வே இணை அமைச்சராகப் பணிபுரிந்தபோது தமிழ்நாட்டுக்கென்று ஏராளமான திட்டங்களைச் செய்யமுடிந்தது. இதை எல்லோரும் அறிவார்கள். மீட்டர் பாதைகளை அகலப்பாதைகளாக மாற்றியது, ரயில்வே முன்பதிவு மையங்கள் அமைத்தது என்று பலவற்றைச் சொல்லலாம். அரக்கோணத்துக்கு நான் எம்பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஒவ்வொரு கிராமத்துக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் சேவையை முதல் ஆண்டிலேயே செய்து முடிக்கமுடியும். சாமான்யர்கள் விரும்பும் வேலைவாய்ப்புகள்  உள்ளிட்ட விஷயங்களைச் செய்துதருவேன். ரயில்வே துறையில் திண்டிவனம் & நகரி ரயில்பாதைத் திட்டம் நாங்கள் ரயில்வே அமைச்சராக இருந்தபோது நிதி ஒதுக்கி அறிவித்தது. அந்த திட்டம் பாதியிலேயே நிற்கிறது. ஓராண்டு காலத்தில் அப்பாதையை முடித்து ரயிலை ஓட வைக்க எங்களால் முடியும். ராணிப்பேட்டையிலிருந்து ஜோலார்ப்பேட்டைக்கு ரயில்பாதைபோடப்பட்டு ஒரு ஆண்டாக ரயிலே விடாமல் கிடக்கிறது. வெற்றிபெற்றால் ஒரே மாதத்தில் அந்த பாதையில் ரயில் பயணம் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்வேன். சென்னை சென்ட்ரல்& தாம்பரம் செங்கல்பட்டு& காஞ்சிபுரம்& அரக்கோணம்& திருவள்ளூர் & சென்னை சென்ட்ரல்& எனச் செல்லும் சர்க்குலர் ரயில் திட்டத்தையும் நிறைவேற்ற உழைப்பேன். இதுபோன்ற பல திட்டங்களை வைத்துள்ளோம்.

திமுக கூட்டணியில் நிற்கும் ஜெகத்ரட்சகன் பலம் மிகுந்த வேட்பாளர். அவரை எதிர்கொள்ள நேர்ந்திருப்பது பற்றி?

 நான் மக்களை நம்பி நிற்கிறேன். கூட்டணிக் கட்சியினரை நம்பி நிற்கிறேன். பணம் இருப்பவர்கள் எல்லாம் வெற்றி பெற முடியும் என்றால் அம்பானிதான் இந்நாட்டில் பிரதமராக ஆகி இருக்கவேண்டும். சாதாரண கிராமத்தில் விவசாயக்குடும்பத்தில் பிறந்து, ஐந்து வயதில்தான் மின் விளக்கையே பார்த்த பின் தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவன் நான். என்னுடைய உழைப்பைக் கண்டு மக்கள் வாக்களிப்பார்கள் என நான் நம்புகிறேன். சாதி மதம் மொழி வேறுபாடு இல்லாமல் நிற்கக்கூடியவனாக இருப்பேன்.

ஏப்ரல், 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com