மக்களின் தீர்ப்பில் மலர்ந்த சூரியன்

மக்களின் தீர்ப்பில் மலர்ந்த சூரியன்
Published on

தனது மாநிலத்திற்கு வெளியே படித்து, பிடித்தமான விஷயங்களைச் செய்து கொண்டிருந்தார் , அந்த இளைஞர்.  அரசியலுக்கும் அவருக்கு பெரிதாக சம்பந்தம் கிடையாது. அவரது அப்பா அரசியல்வாதி, முதல்வராக  இருந்திருக்கிறார். இரண்டு முறை மத்திய அமைச்சராக இருந்திருக்கிறார். 1997 இல் அப்பா மறைந்தவுடன், அவரது மக்களவைத் தொகுதி  காலியாகிறது. அன்று வரை அரசியலில் இல்லாத மகன்,  அப்பாவின் தொகுதியில் நடக்கும் இடைத் தேர்தலில் வென்று எம்.பி.ஆகிறார். அடுத்து மத்திய மந்திரி. பிறகு, தான் சார்ந்த கட்சியிலிருந்து பிரிந்து, அப்பா பெயரில் கட்சி ஆரம்பித்து தேர்தலைச் சந்திக்கிறார், முதல்வராகிறார். ஆண்டு 2000. முதல்வரின் பெயர் நவீன் பட்நாயக்.

 இதே போல் இந்தியாவில் எத்தனையோ பேர் தங்கள் குடும்பத்தினரைப் பின்பற்றி திடீரென அரசியலில் குதித்து அதிகாரங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

ஆனால், முதல்வர் பதவிக்கான மு.க.ஸ்டாலினின் பயணம், 54 வருடங்கள் நீண்டது.

 “எனக்குப் பன்னிரண்டு வயசு இருக்கும். சென்னை மாநகராட்சிக்கு அப்போ தேர்தல் நடந்துச்சு. எங்க பகுதியிலேர்ந்து கவுன்சிலர் பதவிக்கு ஜேசுதாஸ்ங்கிறவர்  திமுக சார்புல நின்னார். நானும் நண்பர்களும் சேர்ந்துக்கிட்டு சைக்கிள்ல முன்னாடி மைக்கைக் கட்டிக்கிட்டு உதயசூரியனுக்கு ஓட்டுக் கேட்டு கோபாலபுரம் தெருக்கள்ல போனோம். அப்படித்தான் என் பேச்சு மைக்ல ஆரம்பிச்சுச்சு. கோபாலபுரத்துல சண்முகம் அண்ணன்னு நாங்க சொல்வோம், அவரோட சலூன்தான் எங்க கூடுகைக்கான இடம். அங்கேதான் ‘இளைஞர் திமுக‘ன்னு மன்றம் ஆரம்பிச்சோம். அடுத்து, 1967 சட்டமன்றத் தேர்தல்லேயும் கொடி புடிச்சோம். 1971 தேர்தல்ல நாடகம் போட்டோம். பெரிய ஆளாகி தமிழ்நாடு முழுக்கச் சுற்றுப்பயணம் செஞ்சது அப்படிங்கிறது, 1984- இல் நடந்துச்சு. இளைஞரணியைப் பெரிசாக் கட்டுற வேலையையும் சேர்த்து அப்ப பார்த்தோம். பரிதி இளம்வழுதி, திருச்சி சிவா இவங்களையெல்லாம் உள்ளடக்கி ஒரு குழு. கார்லேயே தமிழ்நாடு முழுக்கப் போனோம். இரவுல பயணம்; பகல்ல கூட்டங்கள். நான்தான் காரை ஓட்டுவேன்,'' இது ஸ்டாலின் நினைவுகூர்ந்த, அவரது ஆரம்ப காலப் பயணம்.

 “பொறுமை,  தொடர்ந்து ஒரு விஷயத்தைச் செய்தல்,  உழைப்பு இவை வெற்றிக்கான மிகச் சரியான கூட்டுக் கலவை'' என்று நெப்போலியன் ஹில் சொல்வார். இந்த வாசகத்திற்குள் ஸ்டாலின் கச்சிதமாகப்  பொருந்துகிறார்.

 வெல்வதும் தோற்பதும் அரசியலில் சகஜம் தான். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் ஸ்டாலின் மீது சரமாரியாக சேறு வாரி வீசப்பட்டது. சமூக ஊடகங்களில் எண்ணற்ற ஃபேக் ஐடிகளில் இருந்து நக்கலாக, தரக்குறைவாக திட்டமிடப்பட்டு நடந்த தாக்குதல்கள் பலரையும் திசை திருப்பக்க்கூடியவை.

‘ ஜெயிக்கவே முடியாது. முதல்வர் கனவு நிறைவேறாது' என்ற ரீதியில் எடப்பாடியார் முதல் கவனிக்கத்தக்க பலர் வரை ஸ்டாலின் மீது குற்றஞ்சாட்டினர்.

திமுகவினரும் ஆக்ரோஷமாக பதிலளித்துக் கொண்டிருந்த நேரத்தில் திமுகவின் எம்.எம். அப்துல்லாவின் முகநூலில் ஒரு பதிவு தென்பட்டது. பதிவில் ‘கமல் மன்மதலீலை படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, எடப்பாடி - ஸ்ரீவாசவி கல்லூரிக்கு மட்டம் போட்டுத் திரிந்த காலத்தில் ஓ.பி.எஸ் பெரிய வீரனுக்கு பெட்டி தூக்கிக் கொண்டிருந்த காலத்தில், அன்புமணி ஏற்காடு ஸ்கூலில் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலத்தில், அண்ணன் சீமான் அரணையூரில் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, ஸ்டாலின் எமர்ஜென்சியை எதிர்த்து மிசா சிறையில்

அடைக்கப் பட்டிருந்தார். எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று கேட்பதற்கு, ஸ்டாலினுடைய 47 ஆண்டுகால அரசியல் வாழ்விற்கு இவர்கள் அனைவரையும் விட அதிகமான தகுதி இருக்கிறது!‘ எனக் கூறியிருந்தார்.

 தனது நிறை குறைகளை ஒப்புக் கொள்ளும் பக்குவம் ஸ்டாலினிடம் காணலாம். ‘ தலைவரைப் (மு.க.) போல் பேச வராது. அவரது அனுபவம் வேற லெவல்' என்பது போன்ற அவரின் வார்த்தைகளின் தொடர்ச்சியாக கூடுதல் உழைப்பையும் முயற்சியை யும் போடும் பழக்கத்தை ஸ்டாலின் தொடர்கிறார்.

சுமார் 50 ஆண்டுகாலம் தீவிர அரசியலில் இயங்கும் ஸ்டாலினை வைத்துக் கொண்டு வெற்றிடம் என்ற மாயை உருவாக்கப்பட்டது. இத்துடன்  பல தாக்குதல்களை எதிர்கொண்டு மூன்றாண்டுகளுக்கு மேல் கூட்டணியை சிந்தாமல் சிதறாமல்  பக்குவமாக ஒருங்கிணைத்தார்.  அத்துடன் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு, மாறுபட்ட சூழலில், திமுக கூட்டணி முகவர்கள் வரை என்ன செய்யவேண்டும் என பயிற்சி அளித்தது வரை எண்ணற்ற விஷயங்களில் கவனம் செலுத்தியுள்ளார் ஸ்டாலின்.

 ‘‘எதிரியின் வலிமையையும் நம் வலிமைமையும் நன்கு அறிந்திருந்தால், நூறு போர்க்களங்களாக இருந்தாலும் அவற்றை வெல்ல முடியும். ஆனால் நமது வலிமை மட்டுமே தெரிந்து, எதிரியைப் பற்றித்  தெரியாத நிலையில், வெற்றி பெற்றாலும் தோல்விகளும் ஏற்படும். எதிரியையும் தெரிந்திராமல் நம்மைப் பற்றியும் தெரிந்திராமல் போருக்குப் போனால், எல்லா போரிலும் தோற்றுத்தான் போவோம்,''  இது சன் சூ கூறும் கருத்து. இந்தக் கூற்று இந்த சட்டமன்றத் தேர்தலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த  கட்சிகளைப் பற்றிக் கூறுவது போல் தோன்றினால் நான் பொறுப்பல்ல.

எதிர்காலத்தை எதிர்கொள்ளத் தக்க வலுவான கட்டமைப்புள்ள கட்சி திமுக என்பதை பேரறிஞர் அண்ணாவை இழந்த பின் பெற்ற 1971 வெற்றியும், கலைஞரை இழந்த பின் பெற்ற 2021 வெற்றியும் நிரூபித்துள்ளன.

1989 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளின் தோல்விகள் அதிமுகவிற்குச் சொல்லும் செய்தி என்ன என்பதை அவர்கள் யோசிக்கவேண்டும்.

மு.க.ஸ்டாலின் 2021 ஆம் ஆண்டில் பெற்ற இந்த வெற்றி, கலைஞரின் 1971  தேர்தல் வெற்றிக்கு இணையானது!

மே 2021

logo
Andhimazhai
www.andhimazhai.com