தமிழ்நாட்டின் வட மாவட்டங்களையும் தென் மாவட்டங்களையும் இணைக்கும் முக்கிய பகுதி விழுப்புரம். கடந்த 2008ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது, திண்டிவனம் மக்களவைத் தொகுதி விழுப்புரம் மக்களவைத் தொகுதியாக மாறியது. இதில், திண்டிவனம் (தனி), வானூர் (தனி), விழுப்புரம், விக்ரவாண்டி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் அடக்கம்.
விழுப்புரம் தனித் தொகுதியாக உருவான பின், 2009இல் நடந்த முதல் தேர்தலில், அ.தி.மு.க.வை எதிர்த்து தி.மு.க. கூட்டணியில் வி.சி.க. போட்டியிட்டது. இதில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஆனந்தன் வி.சி.க. வேட்பாளர் சுவாமிதுரையை விட 2,797 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தொடர்ந்து 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. - அ.தி.மு.க. இடையே கடுமையான போட்டி நிலவினாலும், அ.தி.மு.க.வைச் சேர்ந்த ராஜேந்திரன் தி.மு.க. வேட்பாளர் முத்தையாவைவிட 193,367 வாக்குகள் பெற்று வென்றார்.
கடந்த 2019இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்ற பா.ம.க. சார்பில் வடிவேல் ராவணனும், தி.மு.க. கூட்டணியில் வி.சி.க. சார்பில் ரவிக்குமாரும் நேருக்கு நேர் மோதினர். இதில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ரவிக்குமார் 128,068 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தற்போது நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் வி.சி.க. - அ.தி.மு.க. – பா.ம.க. இடையே போட்டி நிலவினாலும், அவர்களுடன் 30 வேட்பாளர்கள் களத்திலுள்ளனர். தி.மு.க. கூட்டணியில் வி.சி.க.வைச் சேர்ந்த தற்போதைய எம்.பி ரவிக்குமார் மீண்டும் போட்டியிடுகிறார். தொகுதி முழுக்க அவருக்கு நல்ல அறிமுகமும் தொடர்பும் உள்ளது. நாடாளுமன்ற செயல்பாடும் அவர் சிறப்பாகவே மேற்கொண்டார். மேலும், திண்டிவனம், விழுப்புரம் போன்ற நகரப்பகுதிகளில் அவருக்கான ஆதரவு அனைத்து தரப்பினரிடமும் இருந்தாலும், கிராம புறங்களில் ஒருசில சமூகத்தினர் அவரை வி.சி.க. வேட்பாளராகவே பார்க்கின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன்னர், பெரிய செவலை கிராமத்தில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிக்க சென்றபோது, வி.சி.க. கொடியை அகற்றிவிட்டுத்தான் வாக்கு சேகரிக்க வரவேண்டும் என்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், தலித்துகளின் வாக்குகள் முழுமையாக ரவிக்குமாருக்கு விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய நாடாளுமன்றத் தேர்தலை விடவும் இந்த முறை தி.மு.க. – வி.சி.க. இணக்கமாக வேலை பார்ப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், பொன்முடி, செஞ்சி மஸ்தான், ஆகியோரின் செல்வாக்கும் ரவிக்குமாருக்குப் பலமாக கருதப்படுகிறது. வன்னியர் சமூகத்தின் வாக்கும், சிட்டிங் எம்.பி.யாக இருந்து தொகுதிக்கு என்ன செய்தார் என்ற வழக்கமான ஆதங்கமும் அவரின் வெற்றி வாக்கு சதவீதத்தைக் குறைக்கும் என்கின்றனர் தொகுதி மக்கள்.
அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் பாக்கியராஜ் இதற்கு முன்னர் வி.சி.க. வில் இருந்தவர். தற்போது கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவரணிச் செயலாளர் உள்ள இவர், உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் மட்டுமே நன்கு அறியப்பட்டவர். சி.வி. சண்முகத்தின் செல்வாக்கும், இரட்டை இலை என்ற சின்னமும், தே.மு.தி.க.வின் வாக்குமே பாக்கியராஜூக்கு கூடுதல் பலமாகக் கருதப்படுகிறது. பா.ம.க. சார்பில் களமிறக்கப்பட்டுள்ள 34 வயதான முரளி சங்கர் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். பா.ம.க.வின் மாணவர் அணி செயலாளராக உள்ள அவர் கால்பந்தாட்ட வீரரும் கூட. கடந்த 2016, 2012 சட்டப்பேரவை தேர்தலில் அரூர், வந்தவாசி தொகுதிகளில் போட்டியிட்டவர். தற்போது ராமதாஸின் சொந்த தொகுதியில் போட்டியிடும் முரளி சங்கருக்கு வன்னியர் சமூகத்து வாக்குகள் பலமாக பார்க்கப்பட்டாலும், பா.ம.க. – பா.ஜ.க.வின் மாவட்ட பொறுப்பாளர்கள் வாக்கு சேகரிக்க வருவதில் ஆர்வம் காட்டவில்லை என்கிறார்கள்.
நாம் தமிழர் கட்சி சார்பில் களமிறக்கப்பட்டுள்ளார் இயக்குநர் மு.களஞ்சியம். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவருக்கு இளைஞர்களின் வாக்குகள் ஓரளவு கிடைக்கும் என சொல்லப்படுகிறது. அவரின் தேர்தல் பிரச்சாரம் போதாது என்கிறார்கள்.
போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் முன்முடிவோடு சில கிராமங்களுக்கு செல்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. சாதி அரசியல் பெரிய அளவுக்குச் செல்வாக்கு செலுத்துவதாகவும் கூறப்படுகிறது.
கரும்பு, நெல், உளுந்து போன்ற உணவுப் பொருள்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் விழுப்புரம் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே நம்பி உள்ள மாவட்டம். தமிழ்நாட்டின் சர்க்கரை கிண்ணம் என்று அழைக்கப்படும் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ஒவ்வொரு சட்டமன்றத்தின் மக்கள் கோரிக்கை என்னவென்று பார்ப்போம்.
திண்டிவனம்
திண்டிவனத்தில், ஏரியில் கட்டப்படும் புதிய பேருந்து நிலைய பணிகளை விரைந்து முடிப்பது, விழுப்புரம் - செங்கல்பட்டு இடையே 3 மணி நேரத்துக்கு ஒருமுறை ரயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தருதல், திண்டிவனம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் காய்கறி, பூ விற்பனைக்கென்று தனி மார்க்கெட் உருவாக்குவது, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் அளவை விரிவுபடுத்துவது, தொழில் வளர்ச்சிக்கு வழிவகுப்பது, மாவட்ட அளவில் பழங்குடி மாணவர்களுக்கென்று பாலிடெக்னிக் கல்லூரி அமைப்பது போன்றவை திண்டிவன பகுதி வாக்காளர்களின் கோரிக்கையாக உள்ளது.
வானூர்
வானூரில் அரசு நெல் கொள்முதல் நிலையம் கொண்டு வரவேண்டும். வானூர் தொகுதி புதுச்சேரியை ஒட்டிய தொகுதியாக உள்ளது. வானூரில் சரிவர வேலைவாய்ப்பு இல்லாததால் அந்த பகுதியில் உள்ள பெரும்பாலானோர் புதுச்சேரிக்கு வேலைக்கு செல்கின்றனர். அதனால் வானூர் தொகுதியில் புதிய தொழிற்சாலைகளைக் கொண்டுவந்து வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விக்ரவாண்டி
விக்ரவாண்டியில் அரசு சர்க்கரை ஆலை அமைப்பது, காகித தொழிற்சாலை, சிறுதானியங்களுக்கான தொழிற்சாலை அமைப்பது, அன்னியூர் பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைப்பது, விக்ரவாண்டி சேத்தியாதோப்பு சாலையைச் சீரமைப்பது போன்றவை முக்கிய கோரிக்கையாக உள்ளது.
விழுப்புரம்
விழுப்புரம் மருத்துவக் கல்லூரியை நவீன வசதிகளுடன் மேம்படுத்துவது, பதாள சாக்கடையை விரைந்து முடிப்பது, புதிய பேருந்து நிலையத்தில் கழிவறை வசதி, மழைநீர் வடிகால் அமைப்பது, நகர் முழுவதும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்துவது, நரிக்குறவர்கள் வசிக்கும் பகுதி, வழுதாரெட்டி பகுதியில் கழிப்பறை கட்டித்தருவது போன்றவை விழுப்புரம் வாக்காளர்களின் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது.
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியை பொறுத்தமட்டில் சிப்காட் கொண்டுவருவது, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்குவது மக்களின் பொதுவான கோரிக்கையாக உள்ளது. மேலும், வேளாண் விளைபொருள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை விரிவுபடுத்தி, விவசாயிகளுக்கான வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் தொகையை தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
மேலும், திருக்கோவிலூர் பகுதியில் அடிக்கடி நடக்கும் சாதி சண்டைக்கு மாவட்ட நிர்வாகமும் அரசியல் கட்சியினரும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிறனர் அப்பகுதி இளைஞர்கள்.
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டையில் தென்மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்கள் நின்று செல்வது, அரசு கலை அறிவியல் கல்லூரி அமைப்பது, அரசு மருத்துவமனை தரம் உயர்த்துவது, கால்நடை மருத்துவமனையை மேம்படுத்துவது, பொதுக்கழிப்பிடங்கள் அதிக அளவில் கட்டுவது, உளுந்தூர்பேட்டை வெளிவட்ட சாலையில் ஏற்படும் விபத்துகளைத் தடுப்பது போன்றவை அந்த தொகுதி வாக்காளர்களின் கோரிக்கையாக உள்ளது.