எப்போதும் திருச்சி தமிழக அரசியல் கட்சிகளால் ஆர்வமுடன் கவனிக்கப்படும் தொகுதி. கடந்தமுறை காங்கிரஸ் கட்சியில் மூத்த அரசியல்வாதி சு.திருநாவுக்கரசர் வசம் இருந்தது. கடந்தமுறை அவர் நாலரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று இருந்தார். இந்தமுறையும் அவர் போட்டியிட விரும்பியபோதும் தொகுதி மதிமுகவுக்கு அளிக்கப்பட்டு வைகோவின் மகன் துரை வைகோ களத்தில் இறங்கி, வழக்கமான பம்பரம் சின்னம் இல்லாமல் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிடும் நிலை. உதயசூரியனில் போட்டியிட மதிமுகவின் ‘சுயமரியாதை’ இடம் கொடுக்கவில்லை. எனவே கடும்போட்டியைச் சந்திக்கவேண்டிய நிலைக்கு துரை தள்ளப்பட்டிருப்பதாக தொகுதிவாசிகள் சொல்கிறார்கள்.
புதிய சின்னம் என்பது ஒருபுறம் இருந்தாலும் திமுகவின் இரு அமைச்சர்கள் இருக்கும் தொகுதி என்பதால் கூட்டணிக்கட்சியான மதிமுகவை எப்படியாவத் வெற்றி பெறச்செய்யவேண்டிய கட்டாயம் உள்ளது. நேருவும் அன்பில் மகேஷுக்கு இது கௌரவப் பிரச்னை. எனவே அவர்கள் தீவிரமாகப் பணிபுரிந்துகொண்டிருக்கிறார்கள்.
இந்த தொகுதியில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவெறும்பூர், திருவரங்கம், புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. திருச்சி புதுக்கோட்டை நகர்ப்பகுதிகளை விட்டால் மற்றவை அனைத்தும் கிராமப்பகுதிகள். கள்ளர், முத்துராஜா போன்ற சாதியினர் இருந்தாலும் அரசியல் சார்ந்தே பெரும்பாலும் வாக்களிக்கக்கூடிய தொகுதி இது என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்து.
அதிமுக சார்பில் பலமான வேட்பாளராக கருப்பையா நிறுத்தப்பட்டுள்ளார். இவர் கறம்பக்குடி அருகே உள்ள குழந்திராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர். பணபலம் படைத்த அரசு ஒப்பந்ததாரர். ஆகவே அவர் சார்ந்த தொகுதிகளான புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை தொகுதிகளில் அதிமுக அதிகமான வாக்குகளைப் பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மணல் ஒப்பந்ததாரர் கரிகாலனின் சகோதர இவர். தொகுதிக்குள் அடித்து ஆடுவார் என்பதால் எடப்பாடி இவரை இறக்கி விட்டிருக்கிறார் என்கிறார்கள். அத்துடன் வாக்குப்பதிவு இயந்திரத்தில் இருக்கக்கூடிய மக்களுக்கு அறிமுகமான ஒரே சின்னமாக இரட்டை இலை இருப்பதும் இவருக்கு பலத்தைக் கொடுத்துள்ளது.
பாஜக கூட்டணியில் இது அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டு செந்தில்நாதன் நிற்கிறார். இவர் திருச்சி மாநகராட்சியில் இருக்கும் திமுக கூட்டணி அல்லாத மூன்றே மாமன்ற உறுப்பினர்களில் ஒருவர். பாஜகவுக்கு இருக்கும் நகர்ப்புற வாக்குகளும் அமமுகவின் வாக்குகளும் சேர்ந்து கணிசமான எண்ணிக்கையில் வாக்குகள் பெறக்கூடும். மூன்றாவது இடத்தைப் பிடிப்பார். கடந்த தேர்தலில் அமமுக சார்பாக நின்ற சாருபாலா தொண்டைமான் ஒரு லட்சம் வாக்குகளைப் பெற்றார்.
நாம் தமிழர் கட்சி சார்பாக நிற்கும் ராஜேஷ், ஜல்லிக்கட்டு இயக்கம் தொடர்புடையவர். இத்தொகுதில் உள்ள ஜல்லிக்கட்டில் ஆர்வம் காட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் ஓரளவு வாக்குகளை இவர் பெறக்கூடும். கடந்தமுறை நாதக இங்கே 65000 வாக்குகள் பெற்றிருந்தது.
தங்களை நம்பி இறக்கப்பட்டிருக்கும் வேட்பாளர் துரை வைகோ என்பதால் அவரை கரைசேர்க்க வேண்டிய கட்டாயத்தில் திமுக அமைச்சர்கள் இருவரும் இருக்கிறார்கள். எனவே தீப்பெட்டி என்ற புதிய சின்னத்தில் நின்றாலும் திருச்சியில் எப்படியாவது மதிமுக வென்றுவிடும் என்று ஆரூடம் கூறுகிறார்கள் அத்தொகுதி அரசியல் நோக்கர்கள்!