சேலம்: டெல்லிக்கு செல்வது யார்?

(வலமிருந்து) செல்வகணபதி, விக்னேஷ், அண்ணாதுரை
(வலமிருந்து) செல்வகணபதி, விக்னேஷ், அண்ணாதுரை
Published on

எப்போது செல்வகணபதி தி.மு.க வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டாரோ, அப்போதே சேலத்திற்கு அவர்தான் எம்.பி. என்பது முடிவாகி விட்டது. மற்றவர்கள் எல்லாம் அடுத்தடுத்த இடங்களுக்குத்தான் போட்டியிடுகிறார்கள்!’ என்பதே தி.மு.கவில் ஓயாமல் ஒலிக்கும் பேச்சாக உள்ளது. ஆனால் இதே பேச்சை தேர்தல் முடிந்தபின்னும் கேட்கமுடியுமா? ஏற்கெனவே இதில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் நான்கு அதிமுக வசம் இருக்கையில் இது சாத்தியமா?

16 லட்சத்து 48 ஆயிரத்து 911 வாக்காளர்களைக் கொண்ட தொகுதி. ஓமலூர், எடப்பாடி, சேலம் தெற்கு வீரபாண்டி ஆகிய நான்கு சட்டசபைத் தொகுதிகள் அதிமுக வசம், சேலம் மேற்கு பாமக வசம், சேலம் வடக்கு தி.மு.க வசம் என ஆறு எம்.எல்.ஏக்கள் பலம் கொண்ட மக்களவை. கடந்த தேர்தலில் திமுகவின் பார்த்திபன் 6 லட்சத்து 6 ஆயிரத்து 302 வாக்குகளும், அதிமுகவின் சரவணன், 4 லட்சத்து 59 ஆயிரம் வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் பிரபு மணிகண்டன் 58 ஆயிரத்து 662 வாக்குகளும், அமமுக செல்வம் 52 ஆயிரத்து 332 வாக்குகளும் பெற்றிருந்தனர். திமுகவின் வெற்றி வித்தியாசம் 1 லட்சத்து 47 ஆயிரம் வாக்குகள்.

தொகுதியில் 1999 இல் அதிமுகவில் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் டி.செல்வகணபதி. இப்போது திமுகவில் போட்டியிடுகிறார். 1991 இல் அதிமுகவில் இவர் அமைச்சர். 2008 இல் திமுகவில். சேலம் மேற்கு மாவட்ட செயலாளராக உள்ளார்.

தற்போது அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பி.விக்னேஷ் ஜெயலலிதா பேரவை மாநிலத் துணைச் செயலாளர். திண்டமங்கலம், ஓமலூரைச் சேர்ந்தவர். எடப்பாடி பழனிசாமிக்கு தொகுதிக்குள் செல்வாக்கு இருந்தாலும், மக்கள் பிரச்சனை (சாலை, சாக்கடை உள்ளிட்ட அடி்பபடை வசதிகள்) எல்லாம் அவர் ஆட்சி காலத்திலேயே பெரும்பாலும் தீர்க்கப்பட்டு விட்டாலும் அதிமுக வேட்பாளருக்கு சென்ற முறை அளவு ஓட்டுகள் விழுமா என்பது சந்தேகமே.

மனோஜ்குமார்
மனோஜ்குமார்

பாஜக கூட்டணியில் களம் காணும் அண்ணாதுரை பாமகவின் மாநில செயற்குழு உறுப்பினர். வன்னியர் சமூகம். அதிமுகவும் வன்னியர். திமுகவிலும் வன்னியர். சாதி ஓட்டுகள், மாற்றுக்கட்சி ஓட்டுகளும் கூட செல்வகணபதிக்கே விழும் தன்மை தெரிகிறது. வீரபாண்டி ஆறுமுகம் நலம் விரும்பிகள், அவருக்குப்பின்னே வந்த அவர் மகன் வீரபாண்டி ராஜா ஆதரவாளர்கள் - இவர்கள் இறப்புக்குப் பின் பெரும்பான்மையாக செல்வகணபதி பின்னே அணிவகுத்து விட்டார்கள். அவர்களிடம் மட்டுமல்ல, மாற்றுக்கட்சியினரிடமும் சுமுகமாக பழகும் தன்மை செல்வகணபதிக்கு ப்ளஸ்.

நாம் தமிழர் கட்சி சார்பாக கடந்த தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் சுமார் 32,000 வாக்குகள் பெற்றிருந்தார். இம்முறை மனோஜ்குமார் என்கிற மருத்துவர் களம் காண்கிறார்.

முதல்வர் ஸ்டாலின் வருகை, பிரச்சாரம், இன்ன பிற கூட்டணி கட்சிகளின் பிரச்சார பலம் எல்லாமே செல்வகணபதிக்கு தொகுதியில் ஏறுமுகமாகவே உள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com