2019 தேர்தலில் தி.மு.க வேட்பாளர் கு.சண்முக சுந்தரம் தன்னை எதிர்த்த அ.தி.மு.க வேட்பாளர் மகேந்திரனை 1 லட்சத்து 75 ஆயிரத்து 883 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்த தொகுதி பொள்ளாச்சி. அப்போது மக்கள் நீதி மய்யம் மூகாம்பிகை 59 ஆயிரத்து 693 வாக்குகளும், அ.ம.மு.க முத்துக்குமார் 26 ஆயிரத்து 663 வாக்குகளும், நாம் தமிழர் சனுஷா 31 ஆயிரத்து 483 வாக்குகளும் பெற்றனர். நோட்டா பெற்றது 15 ஆயிரத்து 110.
அ.தி.மு.க ஆறு தடவை, தி.மு.க ஐந்து முறை, மூன்று முறை காங்கிரஸ், இரண்டு முறை ம.தி.மு.க, ஒரு முறை த.மா.கா வென்றுள்ளது,. சிட்டிங் எம்.பி தி.மு.க சண்முகசுந்தரத்திற்கு சீட் கொடுத்தால் நிச்சயம் தோற்பார் என்று உளவுத்துறை கொடுத்த சர்வே. கட்சிக்குள் நடந்த குமுறல். பத்திரிகை செய்திகளில் வெளிப்பட்ட மக்கள் அதிருப்தி, ஆகியவற்றின் எதிரொலியாக ஈசுவரசாமி என்கிற வேட்பாளர் களம் இறக்கப்பட்டுள்ளார். இவர் 2006 இல்தான் தி.மு.க பாசறைக்குள்ளே வந்தவர். அமைச்சர் சக்ரபாணியின் தீவிர விசுவாசி.
தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலை, மடத்துக்குளம் என வரும் ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் கடைகோடித் தொகுதியான மடத்துக்குளத்தில் வரும் மைலாடி கிராமத்தைச் சேர்ந்தவர். படித்தது பத்தாம் வகுப்பு. நூல் மில்லில் ஆரம்பகாலத்தில் பணிபுரிந்தவர், டூவீலர்கள் வாங்கி விற்கும் தொழில்கள் செய்து வந்தார்.
அதுவே பின்னர் இப்பகுதி டிவிஎஸ் கம்பெனி டீலராக்கியது. இவரின் செயலாக்க வேகம், பக்கத்து நகரங்களில் எல்லாம் இதே டீலர்ஷீப்பை அக்கம்பெனி கொடுக்கும் அளவு முன்னேறியது. சின்னதாக பைனான்ஸ் கம்பெனி வைத்தார். அதுவும் சரசரவென பணம் புழங்கும் தொழிலாக மாறியது. இவரின் அபரிமித உழைப்பைக் கண்டு நொந்து போன ஒரு பள்ளியின் தாளாளர் தன் பள்ளியை நடத்தும்படி இவருக்குத் தந்தார். அதிலும் அபார வெற்றி. அப்பள்ளிக்கூடத்தில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவியர் படித்துபயன் பெறும் அளவு அதுவும் வளர்ந்துள்ளது.
இப்படி தொட்டதெல்லாம் துலங்க வளர்ந்த ஈசுவரசாமி அரசியலிலும் ஒரு கலக்கு கலக்கிப் பார்க்கலாமே என இறங்கினார். 2006 இல் கட்சிக்குள் நுழைந்த இவர் உட்கட்சிக்குள் மட்டுமல்ல, மாற்றுக்கட்சிக்கும் இணக்கமானவர் என்ற பெயர் எடுத்தார். 2019-இல் இப்பகுதி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினராகத் தேர்வு பெற்றார். இவர் மனைவி லதாப்ரியா மாவட்டக்குழு உறுப்பினராக உள்ளார். தற்போது இவர் திமுகவின் மடத்துக்குளம் ஒன்றியச் செயலாளர்.
சக்ரபாணி இவர் வெற்றிக்குப் பொறுப்பு அமைச்சராக இருந்து சுழன்றாடும் வேகம், இவரின் நற்குணங்கள், அமைதியான சுபாவம், மக்களிடையே உள்ள பரிச்சயம் இவர் நிச்சயம் ஜெயிப்பார் என்று மாற்றுக்கட்சியினர் கூட சர்டிபிகேட் கொடுக்கிறார்கள்.
ஆனால் அ.தி.மு.க வேட்பாளரும் சளைத்தவரல்ல. அ.கார்த்திகேயன். இளைஞர். அப்பாவு என்ற பழைய கட்சி நிர்வாகியின் மகன். தொண்டாமுத்தூரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கிணத்துக்கடவில் முன்னாள் அமைச்சர் தாமோதரன், பொள்ளாச்சியில் முன்னாள் அமைச்சரும், முன்னாள் சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலையில் முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன், மடத்துக்குளத்தில் முன்னாள் எம்.பி. மகேந்திரன் இவ்வளவு பலவான்கள் (வால்பாறை எம்.எல்.ஏ அமுல் கந்தசாமியும் அதிமுகதான்) அதிமுக சிட்டிங் எம்.எல்.ஏக்களாக இருக்கும் சூழலில் இவரை வெற்றி வாகை சூட வைக்காமல் விடுவார்களா என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் உருள்கிறது.
பா.ஜ.கவில் போட்டியிடுபவர் வசந்தராஜன். பக்கத்து தொகுதி கோவையில் அண்ணாமலை போட்டியிடுவதால் அதன் பக்கவாட்டு பிரபல்ய எதிரொலிப்பு தனக்கும் அடிக்கும் என எதிர்பார்த்துக் களமாடுகிறார். பிரச்சாரத்தில் மற்ற முக்கிய வேட்பாளருக்கும் டஃப் கொடுக்கிறார். அடுத்த நிலையில் இருப்பது நாம் தமிழர் வேட்பாளர் சுரேஷ்குமார். களத்தில் சுறுசுறுப்பாக உள்ளார். இப்படியான பொள்ளாச்சி வேட்பாளர் சந்தையில் வேட்பாளர் சுபாவம், கட்சி பலம், கூட்டணி பலம் ஆகியவற்றின் மூலம் தி.மு.க வேட்பாளர் ஈசுவரசாமியே வெற்றிக்குப் பக்கத்தில் வருகிறார்.