நீலகிரி தொகுதி நிலவரம்: ராசாவுக்கு மீண்டும் கிரீடம் சூட்டும் நீலகிரி

(வலமிருந்து) ஆ.ராசா, லோகேஷ் தமிழ்செல்வன், எல்.முருகன்
(வலமிருந்து) ஆ.ராசா, லோகேஷ் தமிழ்செல்வன், எல்.முருகன்
Published on

‘‘அவரைத்தான் திரும்ப ராஜ்யசபா எம்.பி. ஆக்கீட்டாங்களே. அப்புறமும் எதற்கு நீலகிரியில் போட்டியிடச் சொன்னாங்க?’’ மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நீலகிரியில் போட்டியிடுவது குறித்து இப்படிக் கேட்காத அரசியல் நோக்கர்களே இல்லை எனலாம்.

‘உண்மைதான். அப்படித்தான் அவரும் நம்பினார். தான் முதலில் ராஜ்யசபா எம்.பியாகி மந்திரியும் ஆன பின்பு, ‘‘அடுத்த தேர்தலில் நாம் இங்கேதான் போட்டியிட வேண்டும். அதற்கு ஆயத்தமாகி விட வேண்டும்!’’ என்று முடிவு செய்து நீலகிரிக்கு அடிக்கடி வந்தார். முன்னாள் எம்.பி மாஸ்டர் மாதன் காலத்திற்குப் பிறகு தொய்ந்து போய்க்கிடந்த பா.ஜ.கவினரை புத்தெழுச்சியுடன் எழுப்பி உட்கார வைத்து பழைய நிலைக்கு மீட்டெழ வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.

ரிசர்வ் தொகுதி என்பதால் தொகுதிக்குள் உள்ள எஸ்.டி, எஸ்.சி மக்களை எல்லாம் ஒருங்கிணைத்து அவர்களுக்கான குறை நிறைகளை அக்கறையுடன் கேட்டு, அவர்களிலும் சிலரை கட்சிக்குப் பொறுப்பாளர்களாக்கி, என்னென்னவோ செய்தார். என்ன ஆச்சர்யம். ராஜ்யசபா பதவிக்காலம் முடிந்த பிறகும் மீண்டும் அதில் எம்.பியாகும் வாய்ப்புக் கிடைத்து விட்டது.

அதனால் தொகுதியில் போட்டியிட வேண்டி வராது என்று கருதப்பட்டபோது மீண்டும் நிறுத்தப்பட்டு இப்போது தேர்தல் பிரச்சாரத்தில் பம்பரமாய் இயங்கிக் கொண்டிருக்கிறார் எல்.முருகன்.

நீலகிரி மக்களவையை சுதந்திரா கட்சி ஒரு முறையும், காங்கிரஸ் 8 முறையும், திமுக 3 முறையும், பாஜக 2 முறையும், அதிமுக 2 முறையும் கைப்பற்றியுள்ளன. சிட்டிங் எம்.பியாக தி.மு.க ஆ.ராசா உள்ளார். அவருக்கே திரும்ப இங்கே சீட். அவருக்குப் போட்டியாகத்தான் எல். முருகன் இப்போது ஓடோடி வந்து களத்தில் நிற்கிறார்.

ஆ.ராசா மூன்று முறை போட்டியிட்டு, இரண்டு முறை எம்.பியாகி, ஒரு முறை (2009-இல்) மந்திரியாகி, ஒரு முறை தோல்வியைத் தழுவி, இந்தக் காலகட்டத்தில் உலகம் பேசும் 2 ஜி வழக்கில் அகப்பட்டு சிறைக்குப் போய், விடுதலையாகி, அது அப்பீலுக்குப் போய்...

இப்போது நான்காவது முறையாக நீலகிரித் தொகுதியில் போட்டியிடுகிறார். இப்படி மலைகளுடன் மோதும் சிறுகுன்றாக அதிமுகவில் லோகேஷ் தமிழ்செல்வன்.

இவர் அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன். அப்பா இதே தொகுதிக்குள் வரும் அவிநாசியின் எம்.எல்.ஏ. இரண்டு முறை இங்கே எம்.எல்.ஏவாக இருந்தாலும் பெரிய செல்வாக்கு அவருக்கு இல்லை. சென்ற தேர்தலில் கூட எஸ்.பி.வேலுமணியின் ‘கை’ங்கர்யத்தால் வென்றார். ஆகவே லோகேஷிற்கு இரட்டை இலை மட்டுமே பலம். இவரும், எல். முருகனும் அருந்ததியர் சமூகம். ஆ.ராசா ஆதிதிராவிடர். நாம் தமிழர் சார்பில் ஜெயக்குமார் போட்டியிடுகிறார்.

கூடலூர், ஊட்டி. குன்னூர் மலைகளாலும், மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானிசாகர் சமதளப்பகுதியாகவும் உள்ள தொகுதி நீலகிரி. இதில் மலைமீது படுகர் இனத்தவர் பெரும்பான்மை. பழங்குடியினர் 38 ஆயிரம் வாக்காளர்கள் தேறுவர். கூடலூரில் ஸ்ரீமாவோ பண்டார நாயகா ஒப்பந்தத்தில் வந்த தாயகம் திரும்பிய தமிழர்கள் மிகுதி.

இப்பகுதியில் செக்சன் 17 நிலங்கள் பிரச்சனையால் மக்கள் வெகு துன்பப்படுகிறார்கள். அதற்கு நிவர்த்தி செய்யாத அரசியல்வாதிகள் மீது கோபம் உள்ளது. தவிர இது பந்தலூர், சேரம்பாடி என கேரள எல்லையோரப் பகுதிகள் என்பதால் அதன் தாக்கம் இண்டியா கூட்டணிக்கு ஓட்டுகள் பலமாக விழுகிறது. அதில் ஓட்டுக்களை பெரிய அறுவடை செய்து விடுகிறார் ராசா.

படுகர்களில் பெரும்பாலும் காங்கிரஸ், அதிமுக சார்பாளர்கள். எனவே இருகட்சிக்கும் சரிவிகித ஓட்டுக்களை நிறைத்து விடுகிறார்கள். கீழ்பகுதியில் கவுண்டர்கள், ஒக்கலிகர், அருந்ததியர் மிகுதி. இதில் அருந்ததியர் ஓட்டுகள் எல்.முருகனுக்கா, லோகேஷிற்கா என்றால் கண்டிப்பாக லோகேஷிற்குத்தான்.

ஏனென்றால் அதுதான் இரட்டை இலை சின்னம். கவுண்டர்கள் ஓட்டு தாமரைக்கும், இரட்டை இலைக்கும் பிரிவது போலவே ராசாவிற்கும் பிரிகிறது. இதர ஜாதி ஓட்டுகள், சிறுபான்மை ஓட்டுகளும் இவருக்கே பெரும்பான்மையாய் வருகிறது.

தவிர மூன்று முறை தேர்தலை சந்தித்து 15 வருடம் நீலகிரியில் வாக்காளர் பல்ஸ் பார்த்து வைத்திருக்கும் ராசாவிற்கு வாக்காளர்களை - கட்சி நிர்வாகிகளை - மாற்றுக்கட்சி அன்பர்களை எப்படி அணுகினால் காரியம் நடக்கும் என்று அறிந்து வைத்திருக்கிறார். அதற்காக முன்னேற்பாடாக தனது சொந்த ஊரான பெரம்பலூரிலிருந்து ஆட்களை வரவைப்பது அவரது தேர்தல் கால வழக்கம்.

இப்போதும் அவர்கள் வந்து தெருவுக்கு தெரு குவிந்து வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். கூட்டணி பலம். திமுகவிற்கு இருக்கும் கட்சி பலம். ராசாவுக்குள் இருக்கும் சூட்சுமம். இவற்றின் முன்னால் எல்.முருகனே நிற்க முடியாது. லோகேஷ் எந்த மூலை என்கிறார்கள் நீலகிரியின் அரசியல் நோக்கர்கள்.

நாம் தமிழர் வேட்பாளர் ஜெயக்குமார்
நாம் தமிழர் வேட்பாளர் ஜெயக்குமார்

விவசாயம் பிரதான தொழில். காங்கிரஸ் காலத்தில் செழித்து வளர்ந்து இருந்த பெரிய ஆலை எச்.பி.எப். அது மூடிக்கிடக்கிறது. நீலகிரியை செல்வம் கொழிக்க வைத்த தேயிலைக்கு உரிய விலை இல்லை. அருவங்காடு வெடிமருந்து பேக்டரியால் உள்ளூரகாரர்களுக்குப் பயனில்லை. சுற்றுலாத்துறை மேம்பட பெரியதாக இந்த அரசு பெரிதாக ஏதும் செய்யவில்லை.

முருகன் ஜெயித்தாலும், தோற்றாலும் அவர் நாடாளுமன்றம் செல்வது உறுதியாகிவிட்டது. அவர் ஏற்கனவே மத்திய மந்திரியாய் இருந்ததன் மூலம் பெரிதாக நீலகிரிக்கு எதுவும் நடந்த மாதிரி தெரியவில்லை.

ஏனென்றால் ஏற்கனவே நீலகிரி ரிசர்வ் தொகுதியாக இல்லாத காலத்தில் 5 முறை எம்.பியாக இருந்த கோல்டு ஸ்பூன் தொழிலதிபர் காங்கிரஸ் ஆர். பிரபு தொகுதியை வளம் மிக்கதாக வைத்திருந்தார். அதற்குப் பிறகு ராசா ஒருமுறை மந்திரியாக இருந்தகாலத்திலும் மக்களிடம் ஏகபோகமாய் பணப்புழக்கம் இருந்தது. ஒப்பீட்டளவில் பார்த்தால் தொழிலும், செல்வ வளமும் ஆர்.பிரபு, ஆ.ராசா ஜொலித்தது. முருகன் காலத்தில் ஏதும் இல்லை. எனவே ராசாவே பெஸ்ட் என டிக் செய்கிறார்கள் வாக்காளர்கள்.

logo
Andhimazhai
www.andhimazhai.com