புதுச்சேரி: முந்துவது யார்?

புதுச்சேரி வேட்பாளர்கள்
புதுச்சேரி வேட்பாளர்கள்
Published on

இதுவரை பதினைந்து தேர்தல்களைச் சந்தித்துள்ள நிலையில் பதினோரு முறை காங்கிரஸ் வென்ற தொகுதி புதுச்சேரி. இது ஒரு யூனியன் பிரதேசம். இங்கே 30 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் காரைக்காலில் 5, மாகி(கேரளம்), ஏணம்( ஆந்திரா) ஆகிய தொகுதிகளும் அடக்கம்.

 காங்கிரஸின் கோட்டையாக இருந்த புதுச்சேரியில்  புதிய மாநிலக்கட்சியான என் ஆர் காங்கிரஸ் 2014-இல் வென்றது ஒரு திருப்புமுனை. 2019 தேர்தலில் காங்கிரஸ்-திமுக  கூட்டணியில் வைத்தியலிங்கம் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இம்முறையும் அவர் இதே கூட்டணியில் களம் காண்கிறார். 2019 தேர்தலில் வைத்தியலிங்கம் 4,44, 983 வாக்குகளும் நாராயணசாமி கேசவன்( என்.ஆர். காங்) 2, 47, 956 வாக்குகளும் பெற்றனர். வெற்றி வாக்கு வித்தியாசம் புதுவை வரலாற்றிலேயே மிக அதிகமாகும். நாம் தமிழர் கட்சிசார்பில் போட்டியிட்ட ஷர்மிளா பேகம் 22,857 வாக்குகள் பெற்றிருந்தார்.

வைத்தியலிங்கமே இந்தியா கூட்டணியில் மீண்டும் களம் காணும் நிலையில் ஆளும்  பாஜக- என் ஆர் காங்கிரஸ் கூட்டணியில் உள்துறை அமைச்சரான பாஜக கட்சியின் நமசிவாயம் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் தமிழ் வேந்தன், நாம்தமிழர் கட்சி சார்பில் சித்தமருத்துவர் மேனகா ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இவர்கள் இருவருமே புதுமுகங்கள்.

புதுச்சேரியைப் பொருத்தவரை போட்டி என்பது வைத்தியலிங்கம்- நமசிவாயம் இடையில்தான் என்று கூறப்படுகிறது, இருவருமே பலம் பொருந்தியவர்கள். அனுபவசாலிகள். காங்கிரஸுக்கு தலித் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகள் பலம். நமச்சிவாயத்துக்கு அவர் சார்ந்த வன்னியர் சமுதாய ஆதரவு இருக்கிறது. அத்துடன் அவர் முதலமைச்சர் ரங்கசாமியின் அண்ணன் மருமகன். ஆனால் ரங்கசாமிதான் பல கணக்குகள் போட்டுப்பார்த்து நமச்சிவாயத்தை டெல்லிக்கு அனுப்ப முயற்சி செய்வதாகக் கூறுகிறார்கள். தயக்கத்துடன் தான் நமசிவாயம் களமிறங்கி இருக்கிறார் என்பது தட்சிக்காரர்கள் கூற்று. அவரை ஆதரித்து பாஜக தலைவர் ஜேபி நட்டா ரோடு ஷோவும் நடத்திவிட்டுப் போயிருக்கிறார். ஆளும் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் ரேஷன்கடைகள் பலவற்றை மூடிவிட்டதாக குற்றச்சாட்டு இருக்கிறது. மதுக்கடைகளை மூடிவிட்டு ரேஷன் கடைகளைத் திறவுங்கள் என்ற கோரிக்கை உள்ளது. ஆர்த்தி என்ற 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்த சம்பவமும் ஆளுங்கட்சிக்கு எதிராக உள்ளது.

இந்தியா கூட்டணியில் போட்டியிடும் வைத்திய லிங்கத்தை ஆதரித்து முகஸ்டாலின் பிரச்சாரம் செய்திருக்கிறார். நமசிவாயத்தை பல கட்சி மாறியவர் என அவர் விமர்சனமும் செய்தார்.

அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவர். அச்சமூக வாக்குகளையும் சிறுபான்மை இன வாக்குகளையும் அவர் பிரிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் களநிலவரம் அப்படி இருப்பதாகத் தெரியவில்லை. மாநில அதிமுக செயலாளர் அன்பழகன்,, துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் இடையிலான மோதல் இந்த தேர்தல் சமயத்திலும் தொடர்வதாகச் சொல்கிறார்கள்.

இப்போதைக்கு நிலவும் கடும்போட்டியில் வைத்தியலிங்கமே முந்துவதாகத் தெரிகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com