கோவை மக்களவை சுமார் 22 லட்சம் வாக்காளர்கள் கொண்ட பெரிய தொகுதியாகும். பல்லடம், சூலூர், சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், கோவை தெற்கு, கோவை வடக்கு என ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் 5 இல் அதிமுக எம்.எல்.ஏக்களே உள்ளனர்.
கோவை தெற்கில் மட்டும் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்ற வானதி சீனிவாசன் உள்ளார். இவர் வென்றது நடிகர் கமல்ஹாசனை. களத்தில் சுயேட்சைகள் உள்பட 37 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். அவர்களில் அ.தி.மு.க. சிங்கை ராமச்சந்திரன், தி.மு.க. கணபதி ராஜ்குமார், பா.ஜ.க அண்ணாமலைக்கும்தான் கடுமையான போட்டி நிலவுகிறது.
இவர்களுக்கு அடுத்ததாக நாம் தமிழர் வேட்பாளர் 7- 8 சதவீதம் வாக்குகளை இதில் பிரிக்கலாம். அந்த அளவு இளைஞர் மத்தியில் கலாமணி குறித்த விவாதம் இருக்கிறது. அடுத்தது இளைஞர்கள் மத்தியில் பெயர் வாங்கியிருப்பது அண்ணாமலை. சமூக வலைத்தளங்களில் இவரின் பிரச்சாரம் எல்லை கடக்கிறது. இதற்கெனவே ஐடி படித்த/ படித்துக் கொண்டிருக்கும் கல்லூரி மாணவர்களை தற்காலிகமாக பணியமர்த்தி பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
அண்ணாமலை பாஜக நிர்வாகிகளை சந்திக்கும் போதெல்லாம் கேட்கும் கேள்வி என்ன வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை இரண்டாம்பட்சமாகவே வைத்துக் கொள்கிறார். முதலாவது இன்னைக்கு எத்தனை வாக்காளர்கள் போன் நெம்பர் லிஸ்ட்கொண்டு வந்தீங்க?’ என்பதுதானாம். அந்த வகையில் மட்டும் இதுவரை கோவை வாக்காளர்களில் 12 லட்சம் பேருடைய செல்போன் எண்கள் கோவை பாஜக தேர்தல் பொறுப்பு ஐ.டி விங்க்கிடம் உள்ளதாகச் சொல்லுகிறார்கள்.
அதன் மூலம் தினசரி அண்ணாமலையின் அன்றாட நிகழ்வுகளை நான்கைந்து வீடியோக்களாவது வாட்ஸ் அப், இன்ஸ்ட்டா, முக நூல் வழியே பரப்பிக் கொண்டேயிருக்கிறார்கள்.
அண்ணாமலைக்கு நெகட்டிவ் செய்தி போடுபவர்களை கமெண்ட் பகுதிக்குப் போய் கடுமையாக சாடுவதும், அவருக்குப் பாசிட்டிவ் செய்தி போடுபவர்களைப் பாராட்டி அண்ணாமலைக்கே வெற்றி என்று கமெண்ட் போடுவதும் இவர்களின் அன்றாட பணியாகி உள்ளதாகச் சொல்லுகிறார்கள். தற்போதைய கணக்குப்படி அண்ணாமலையின் ஃபாலோயர்ஸ் ஃபேஸ் புக்கில் 4 லட்சத்து 60 ஆயிரம் பேரும், இண்ஸ்டாவில் சுமார் 9 லட்சம் பேரும் உள்ளனர்.
இவர்கள் உலகம் பூராவும் இருப்பவர்கள். உள்ளூர், குறிப்பாக கோவை வாக்காளர்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள், அவர்கள் இவருக்கு எத்தனை பேர் ஓட்டுப் போடுவார்கள் என்பதுதான் இப்போது இருக்கும் கேள்வி. பாஜக கோவை மக்களவையில் திமுக, அதிமுக கூட்டணியில் இரண்டு முறை வென்றுள்ளது. கூட்டணியில்லாத சமயங்களில் தொடர்ந்து தோற்றுள்ளது. தனித்து நிற்கும்போது படுதோல்வி அடைந்துள்ளதே வரலாறு.
அப்படி தனித்து நிற்கும்போது 1989 இல் 25ஆயிரத்து 156 வாக்குகளும், 1991-இல் 47ஆயிரத்து 267 வாக்குகளும் மிசா நாராயணன் என்பவர் பெற்றுள்ளார். 1996 இல் நடராஜ் என்பவர் போட்டியிட்டு 43 ஆயிரத்து 289 வாக்குகள் பெற்றார். 2009 தேர்தலில் ஜி.கே.செல்வகுமார் 37 ஆயிரத்து 909 வாக்குகள் மட்டும் வாங்கியிருக்கிறார்.
ஆக, பாஜக இப்படி தனித்துப் போட்டியிட்ட காலங்களில் 50 ஆயிரம் வாக்குகளை கிராஸ் செய்ததில்லை. ஏறத்தாழ இப்போது பாமக ஐஜேகே போன்ற கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக் கொண்டு பாஜக கோவையில் போட்டியிடுவது தனித்துப் போட்டியிடுவதற்கு சமம்தான். ஏனென்றால் இதன் கூட்டணிக்கட்சிகளுக்கு விழும் ஓட்டுக்களை இங்கே விரல் விட்டு எண்ணி விடலாம். ஆக, கட்சிக்கும் பெரிதாக ஓட்டு வங்கி இல்லை. கூட்டணி பலமும் இல்லை. ஆனால் அண்ணாமலை இப்போது பேசுபொருளாக மாறியிருக்கிறார்.
அதற்குக் காரணம் அவருக்காகவே விழும் இளைஞர்களின் ஓட்டுகள். குறிப்பாக கவுண்டர் சமூக இளைஞர்கள் கிராமங்களில் இவர் பக்கமே அணிதிரள்கிறார்கள். அவர்கள் எல்லாம் அதிமுக பக்கம் இருந்து புறப்பட்டவர்கள். அதே சமயம் பட்டியல் சமூக மக்கள் இவர்களுக்கு எதிராக அரசியல் நிலை எடுக்கிறார்கள். கோவையைப் பொறுத்தவரை கவுண்டர்கள் 35 சதவீதமும், அருந்ததியர்கள் 25 சதவீதமும் உள்ளனர். சிறுபான்மை மக்கள் சுமார் 2 லட்சம் பேர் இருக்கிறார்கள்.
தவிர சமீப காலங்களில் வட இந்தியர்களின் வருகை மிகுதியாக உள்ளது. கோவையில் உள்ள அத்தனை சிறு, குறு தொழில்கள், பெரிய நிறுவனங்கள், கேம்ப் கூலிகளில் ஈடுபடுத்தப்படுபவர்கள், பண்ணைக் கூலிகள், கட்டிடத் தொழிலாளர்கள் இப்படி எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து விட்டார்கள். உதாரணமாக தேவ் நாராயணன் மசாலா டீக்கடை என்பது மார்வாடிகள் தெருவுக்குத் தெரு திறந்து வைத்திருக்கும் கடை. இப்படி மட்டும் இரண்டரை லட்சம் வாக்குகளை அண்ணாமலை சுலபமாகக் கடப்பார் என்கிறார்கள்.
அது தவிர வலைத்தளப் பிரச்சாரம். தெருவுக்குத் தெரு பிரச்சாரம். அவர் கையை ஓங்க வைக்கும் என்பதே இப்போதைய அரசியல் கணக்கு. கோவை தொகுதி சுமார் 22 லட்சம் வாக்காளர்கள் கொண்டிருப்பதால் அதில் 60 சதவீதம் வாக்குகள் பதிவானால் சுமார் 15 லட்சம் வாக்குகள் ஈட்டப்படும். அதில் மூவர் சரிசமமாக பங்கிட்டால் கூட வெற்றிக்கான இலக்கு 5 லட்சம் வாக்குகள் ஆகும்.
திமுகவைப் பொறுத்தவரை சிறுபான்மை ஓட்டுகள் 2 லட்சம், கவுண்டர் சமூக வாக்குகள் ஒரு லட்சம் (வேட்பாளர் ராஜ்குமார் கவுண்டர்), பட்டியல் சமூக மற்றும் இதர சாதியினர் வாக்குகள் ஒன்றரை லட்சம் என்று பார்த்தால் மூன்றரை லட்சம் வாக்குகளை கடந்து விடுகிறார்.
தவிர மோடி ஆட்சிக்கு எதிரான தொழில் நிலைமை கோவையில் கடுமையாக இருக்கிறது. டிமானிடைசேஷன், ஜி.எஸ்.டி போன்ற கெடுபிடிகளால் சுமார் 50 ஆயிரம் தொழில்கள் நசிந்துள்ளன. அதன் பாதிப்பு மிகுதியாக 2 லட்சம் வாக்குகள் திமுகவிற்கு மடை மாறுகின்றன. கூட்டணி பலம், மோடி வரவே கூடாது; அண்ணாமலை வேண்டாம் என்கிற கணக்கில் இந்த ஓட்டுகள் சேரும் போது ராஜ்குமார் சுலபமாக ஐந்து லட்சம் வாக்குகளை கடந்து விடுகிறார்.
அதே கணக்குப்படி பார்த்தால் அதிமுக கோவையில் கட்சி ரீதியாக அசைக்க முடியாத கோட்டை. இரட்டை இலைக்கே வாக்களித்துப் பழகியவர்கள் இதில் மாறாமல் இருக்கிறார்கள். அவர்களின் வாக்குகள் மட்டும் 3 லட்சத்தைத் தாண்டும். தற்போது போட்டிக்களத்தில் இருக்கும் ராமச்சந்திரன் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்.
பொதுவாக நாயுடு சமூகத்தவர்கள் தொழில் அதிபர்களாக உள்ளவர்களே. அவர்கள் இந்த முறை அண்ணாமலை, மோடி என்ற நோக்கில் வாக்களிக்கத் திட்டமிட்டிருந்தனர். இப்போது தன் ஜாதிக்காரரையே வேட்பாளராக அதிமுகவில் ஆக்கியிருப்பதால் இந்த வாக்கு வங்கி சரிபாதியாக உடைகிறது. அந்த வகையில் ஒன்றரை லட்சம் நாயுடு வாக்குகளில் ஒரு லட்சம் வாக்குகளை இயல்பாகவே ராமச்சந்திரன் தனக்கு சேர்த்துக் கொள்கிறார்.
இது தவிர இளைஞர், இளம்பெண்கள் பாசறை மூலம் வரும் வாக்குகள் எனப் பார்த்தால் 5 லட்சம் வாக்குகள் எட்டி விடுகிறது. இப்படி எல்லாம் கணக்கிட்டுப் பார்த்தால் திமுக ராஜ்குமார் வெற்றிக்குப் பக்கத்தில் பளிச்சிடுகிறார். அடுத்ததாகவே அதிமுக ராமச்சந்திரன் நெருங்கி வருகிறார். இவர்களுக்கு சற்று தூரத்திலேயே நிற்கிறார் அண்ணாமலை. வெற்றி எப்படி இருக்கும் ஜூன் 4 ஆம் தேதி தெரிந்து விடத்தானே போகிறது?