சிதம்பரம் தொகுதி நிலவரம்: சீறிப்பாய்வது யார்?
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தொல்.திருமாவளவன் பானை சின்னத்தில் அரும்பாடுபட்டு 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெல்ல முடிந்த தொகுதி சிதம்பரம். குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம்,புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய தனித் தொகுதி இது.
கடலூர், பெரம்பலூர், அரியலூர் என மூன்று மாவட்டங்களிலும் பரந்திருக்கும் தொகுதி இதுவாகும். மீண்டும் இத்தொகுதியின் பானை சின்னத்திலேயே திருமாவளவன் நிற்கிறார். இவர் ஆறாவது முறையாகப் போட்டியிடுகிறார். இரண்டுமுறை வெற்றி பெற்றுள்ளார். திருமா போட்டியிடுவதாலேயே தமிழ்நாட்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தொகுதிகளில் ஒன்றாக இது மாறி உள்ளது.
பெரும்பாலும் விவசாயத்தை நம்பியிருக்கும் தொகுதி இது. நெல், கரும்பு, முந்திரி, சோளம் போன்ற பயிர்கள் விளைகின்றன. வீராணம் ஏரி, நடராஜர் கோவில், பிச்சாவரம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் போன்றவை இத்தொகுதியின் தனிச்சிறப்பு.
கடந்தமுறை அதிமுக கூட்டணியில் பாமகவும் இணைந்திருந்த நிலையில் விசிகவுக்கு வெற்றி பெறுவது சிரமாக இருந்தது. ஆனால் இந்த முறை பாமக வாக்குகள் பிரிந்து பாஜக தரப்புக்குச் செல்வதால் விசிக மிக எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்பதுதான் பொதுவான கணிப்பு.
கடந்த முறை வெற்றி பெற்றாலும் சிதம்பரம் தொகுதிப்பக்கம் அடிக்கடி திருமாவளவன் வரவில்லை என்ற அதிருப்தி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் பெரும்பாலான தலித் வாக்காளர்கள் வாக்குகள் எங்கும் சிதறாமல் விசிகவுக்கே கிடைக்கும். பிற சமூகத்தினருடனான உறவையும் திருமா பேணியிருப்பதாக அவர் தரப்பில் சொல்லப்படுகிறது. திமுகவின் வலிமையான மாவட்டசெயலாளரும் அமைச்சருமான எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தன் தேர்தல்பணிகள் மூலம் அவரது வெற்றியை எளிதாக்குவார் என்கிறார்கள்.
அதிமுக வேட்பாளராக களமிறங்கி இருப்பவர் சந்திரஹாசன். 71 வயதாகும் இவர் பெரம்பலூர் மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர். கடந்த நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் சீட்டுக்கேட்டார். ஆனால் கிடைக்கவில்லை. வேளாண் துறையில் பணியாற்றியவர். இந்த தடவை வாய்ப்புப் பெற்றுள்ளார். ஆளுங்கட்சியான திமுகவுக்கு எதிரான மனநிலையை அறுவடை செய்யலாம் என்ற அதிமுக எண்ணத்தைக் கொண்டு நிற்கிறார். அதிமுக வாக்கு வங்கி இவருக்குப் பலமாக இருக்கும்.
பாமகவுக்கு இத்தொகுதி ஒதுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாஜக தன் வசமே இதை வைத்துக்கொண்டு வேலூர் முன்னாள் மேயராக இருந்த கார்த்தியாயினியை வேட்பாளராகக் களமிறக்கி உள்ளது. இவர் முன்னாள் அதிமுக காரர். ஜெயலலிதாவுக்கு பெங்களூரு கோர்ட் தண்டனை வழங்கியபோது வேலூர் மாநாகராட்சியில் அந்த நீதிபதியை விமர்சித்து தீர்மானம் நிறைவேற்றி அதிர வைத்தவர். ஜெயலலிதா மறைவுக்குப் பின் 2017இல் பாஜகவில் இணைந்தவர். பாமக வாக்குகளையே பொதுவாக இவர் நம்பி இருக்கிறார். இவருக்கு வாய்ப்பு தந்ததால் தடா பெரியசாமி, அதிமுகவில் இணைந்துவிட்டார். இதுவும் பின்னடைவுதான்.
நாம் தமிழர் கட்சி சார்பாக ஜான்சி ராணி என்பவர் களமிறக்கப்பட்டுள்ளார். கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் 37,471. இந்த முறை இந்த எண்ணிக்கை கூடலாம்.
சமீபத்தில் திருமாவளவன் தங்கி இருந்த வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை தனக்கு மனரீதியாக அழுத்தம் தருவதற்காக செய்யப்படுகிறது. பாஜக கூட்டணி வேட்பாளர்கள் யாரையாவது இப்படி சோதனை செய்திருக்கிறார்களா? எனக் கேள்வி எழுப்புகிறார் திருமா.
திமுக கூட்டணிக்கும் அதிமுக கூட்டணிக்கும் இடையேதான் கடும்போட்டி இத்தொகுதியில் என்கிறவர்கள், தொகுதிக்குள் வைட்டமின்’ப’பட்டுவாடாவும் ஏறக்குறைய முடிந்துவிட்டதாகக் காதைக் கடிக்கிறார்கள். களநிலவரப்படி சிறுத்தைதான் சீறிப்பாய்கிறது.