திண்ணைப் பிரச்சாரம்

தேர்தல்களம்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன், திமுக
கே.எஸ்.ராதாகிருஷ்ணன், திமுக
கே.எஸ்.ராதாகிருஷ்ணன், திமுக
Published on

காமராஜர் நாகர்கோயில் இடைத்தேர்தலில் போட்டியிட்ட காலத்தில் இருந்து ஒவ்வொரு தேர்தலிலும் பணி செய்து வந்திருக்கிறேன். அந்தக் காலகட்டத்தில் தொண்டர்கள் தேநீர்குடித்துவிட்டு முறுக்கு சாப்பிட்டுவிட்டு எளிமையான முறையில் பணிபுரிவார்கள்.

1967-ல் திமுக வென்றபோது நடந்த தேர்தலில் மிகப்பெரிய போஸ்டர்கள் மக்களைக் கவரும் வாசகங்களுடன் ஒட்டப்பட்டன. சுவர் விளம்பரங்கள் எங்கும் காணப்படும். ஆனால் இப்போதெல்லாம் இவற்றின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகத் தோன்றுகிறது. ஆனால் பக்கத்து மாநிலமான கேரளத்தில் போஸ்டர்கள், பேனர்கள், பெரிய பெரிய ஹோர்டிங்குகள் எல்லாம் வைத்து தேர்தல் நடக்கிறது. தமிழ்நாட்டில் இந்நிலை மாறிவிட்டது.

இப்போதைய தேர்தல்களில் பணமும் சாதியும் முக்கியமான பங்குவகிப்பதாக மாறிவிட்டன. அன்றைக்கு டிடிகிருஷ்ணமாச்சாரி என்கிற அய்யங்கார், திருச்செந்தூரில் போய் நின்றார். ஜிஆர் தாமோதரன் நாயுடு இனத்தவர். அவர் பொள்ளாச்சியில் கவுண்டர் இனத்தவர்கள் மத்தியில் போட்டியிட்டார். ராம்நாத் கோயங்கா திண்டிவனத்தில் நின்றார். இன்று யாரும் இதுபோல் போட்டியிட முடியுமா? சிரிப்பார்கள் என்கிற அளவுக்கு நிலைமை மாறிவிட்டிருக்கிறது.

நான் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் கோவில்பட்டி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் போன்ற சட்டமன்றத் தொகுதி கிராமங்களில் வேட்பாளர் கனிமொழி அவர்களுக்காக தேர்தல் பணி செய்தேன். அப்பகுதிகளில் போட்டியிட்டவன் என்பதால் அங்கே நெருக்கமானவர்கள் உண்டு. சுமார் 300 கிராமங்களுக்கு இந்த சமயத்தில் சென்றேன். மைக் பிடித்து பிரசாரம் செய்யவில்லை. ஊருக்குள் போவோம். அங்கே யார் வீட்டுத் திண்ணையிலாவது அமர்ந்து நலம் விசாரிப்போம். பழைய நண்பர்கள் வருவார்கள். உறவினர்கள் வருவார்கள். முன்பே தொலைபேசியில் சொல்லியிருப்பதால் அவர்கள் கூடி இருப்பார்கள். கிராமப்புறங்களில் முதியோர் ஓய்வூதியம் சரியாக இல்லை. தண்ணீர்ப்பஞ்சம் நிலவுகிறது. கோமலின் தண்ணீர் தண்ணீர் படம் எடுக்கப்பட்ட ஏழுபெட்டி கிராமம் எங்கள் பகுதிதான். இன்னும் விவசாயம் பொய்க்கும் நிலைதான் நிலவுகிறது. வாங்கிய கடனுக்கு வட்டி கட்டமுடியவில்லை என்று வெங்காயம், மக்காச்சோளம் போன்ற காய்ந்த பயிர்களைக் காட்டி கண்ணீர் வடிக்கிறவர்களைக் கண்டேன். இலவச மின்சாரம், உழவர் சந்தை, விவசாயக் கடன் தள்ளுபடி போன்ற திமுகவின் திட்டங்களை எடுத்துச் சொன்னேன். தனிப்பட்ட கிராமவாசிகளின் நலன்களைக் கேட்பதுடன் இதுபோன்ற பொதுப்பிரச்சனைகளையும் கேட்டேன். எங்கள் பகுதியில் கயத்தாறு, கோவில்பட்டியில் விமான ஓடுபாதைகள் இருக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம், விவசாயப் பொருட்களுக்கு குளிர்சாதனக் கிடங்குகள் உருவாக்கலாம், கழுகுமலையைச் சுற்றுலாத்தளம் ஆக்குதல் போன்ற விஷயங்களைப் பேசினோம். தலைவரின் மகள் என்கிற அளவுக்கு நல்ல
செல்வாக்கும் புகழும் இருப்பது எங்கள் வேட்பாளர் கனிமொழி அவர்களுக்கு சிறந்த விதத்தில் கை கொடுத்தது. அவருக்கு மேலும் வலுச் சேர்ப்பதற்காக இந்த பகுதியில் பிரச்சாரங்களும் நுண் வியூகங்களும் மேற்கொண்டோம்.

மே, 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com