செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதால் என்ன பாதிப்பு? சுருக்கென கேட்ட நீதிமன்றம்!

செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதால் என்ன பாதிப்பு? சுருக்கென கேட்ட நீதிமன்றம்!
Published on

அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி உத்தரவிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, 4 மணி நேரத்தில் உத்தரவை நிறுத்தி வைத்தார். இதையடுத்து, அரசியலமைப்பின்படி ஆளுநர் எடுத்த முடிவை மறுபரிசீனை செய்ய முடியாது என, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஆளுநருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியுமா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு முன் உதாரணமாக ஏதேனும் தீர்ப்பு இருந்தால் தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கு உத்தரவிட்டனர். செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதால் மனுதாரர் எப்படி பாதிக்கப்படுகிறார் என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பிய போது, மக்கள் வரிப்பணத்தில் அவருக்கு ஊதியம் வழங்கப்படுவதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பதிலளித்தார்.

இதையடுத்து, செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க எதிர்ப்பு தெரிவித்த அனைத்து வழக்குகளின் விசாரணையையும் ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை வரும் 11 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து, உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் நிஷாபானு மற்றும் பரத சக்ரவர்த்தி அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு, மாறுபட்ட தீர்ப்பளித்தது. வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டதை அடுத்து, மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணை தொடங்கியது.

செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜென்ரல் துஷார் மேத்தா ஆஜராகினர். அப்போது, ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததா? கஸ்டடி எடுக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளதா இல்லையா? என்பது பற்றி மட்டுமே தாம் விசாரிக்க உள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.

மேலும், ரிமாண்ட் செய்தபிறகு ஆட்கொணர்வு மனு உகந்ததா? சிகிச்சை நாட்களை நீதிமன்ற காவலாக கருதக் கூடாது என்றவாதம் குறித்தும் விசாரிக்க உள்ளதாக தெரிவித்தார். வழக்கு விசாரணையை வரும் 11 தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என செந்தில் பாலாஜி மனைவி தரப்பும், நாளைக்கு ஒத்திவைக்க வேண்டும் என அமலகாத்துறையும் கோரிக்கை விடுத்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி விசாரணையை வரும் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com