வட இலங்கை முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இனப்படுகொலையை நிகழ்த்திய புத்த மத மேலாதிக்க இலங்கையில், அமைதிவழிப் போராட்டத்தின் மூலம் அரசின் அதிபர் பதவியிலிருந்து இராஜபக்சே குடும்பத்தின் கோத்தா பயவைத் துரத்தியடித்திருக்கிறது, இளைஞர்- மாணவர் படை.
வடக்கு இலங்கை மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினருமான
சி. வி. விக்னேஸ்வரனிடம் நடப்பு நிலவரம் பற்றி உரையாடினோம்.
* அதிபர் தேர்தலில் முதலில் நடுநிலைமை வகிக்கப்-போவதாக நிலைப்பாட்டை எடுத்தீர்கள்..
அதிபர் தேர்தலின்போது முதல் கட்டத்தில் யார் போட்டியிடப் போகின்றார்கள், அவர்களின் திட்டம், எண்ணங்கள் என்ன எனத் தெரியாத ஒரு நிலைமை காணப்பட்டது. தேர்தலில் பங்குபற்றக்கூடியவர்களின் எண்ணமே எதுவும் அப்போது தெளிவாக இல்லை; பிறகுதான் போட்டியாளர்கள் யார் என்று தெரியவந்தது. அவர்களின் எண்ணங்கள், கருத்து நிலைப்பாடுகளை அறிய முற்பட்டேன்... சரியாக கணிக்கவேண்டும் என்பதற்காக நடுநிலைமை வகிப்போம் எனக் கூறியிருந்தேன்.
* இரணில் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவாக வாக்களித்தது ஏன்... ஈழத்தமிழர் நலனா, நாட்டு நலனா எது முதன்மையான காரணி?
இரண்டுமேதான். நாடானது அரசியல் பிரச்னைகளைக் கொண்டிருந்தாலும், பொருளாதார ரீதியாக முற்றாக முடங்கிக் கிடக்கின்றது. இதைக் கையாளக்கூடிய- பொருளாதாரரீதியான பிரச்னைகளில் அனுபவம் வாய்ந்தவராக ரணில் இருக்கிறார். ஆறு கட்சிகளின் கூட்டணியின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினராக நான் இருக்கிறேன். எங்களுடைய கருத்துநிலையை ரணிலிடம் நேரடியாக அளித்து, உரையாடினேன். அப்போது அவருடைய எண்ணங்கள், தூரநோக்கான பார்வையை அறிந்துகொள்ள முடிந்தது.
* இரணிலுக்கு எதிராக நின்ற டலஸ் அழகப்பெரும தமிழர்க்கு அளித்த 10 அம்ச வாக்குறுதியின்படி, இன்னொரு அமைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவருக்கு வாக்களித்திருக்கிறதே?
எங்கள் கூட்டணிக்கு நான் ஒருவன் மட்டுமே நாடாளுமன்றத்தில் முகவர். யாழ்ப்பாணத்தில் நான் இருந்தவேளையில் அதிபர் போட்டியிலிருந்த ரணில், சஜித் பிரேமதாசா இருவருமே பேசினார்கள். அதன்படி, இருவரின் கருத்தையும் அறிய முற்பட்டேன். ஆனால், கொழும்புவுக்கு வரும் முன்னரே சஜித், போட்டியிலிருந்து விலகிவிட்டார். மீதமிருந்த ஒரே போட்டியாளர் ரணில், நாடாளுமன்றத்தில் என்னுடைய இருக்கையின் அருகில் வந்து பேசவிரும்புவதாகத் தெரிவித்தார். பிரதமர் அறையில் அவரைச் சந்தித்தேன். அப்போது எங்கள் கூட்டணியின் கேள்வித்தொகுப்பை அவரிடம் அளித்தேன். சில பதில்களைத் தெரிவித்தார்.
‘சமஷ்டி முறை‘ கூட்டாட்சி பற்றிய எங்களின் கோரிக்கைக்கு, இந்தியாவில், புதுச்சேரி போன்ற பகுதிகளில் வழங்கப்பட்டுள்ள அளவுக்கான தன்னாட்சி பற்றி பரிசீலித்து வருவதாக ரணில் கூறினார். மற்றவற்றைப் பற்றி படிப்படியாகப் பேசலாம் என்றும் அவர் சொன்னார். அதன்படி, அப்போதைக்கு எங்களின் கோரிக்கைகளை வைத்துப் பேசிய- எங்களின் முன்னால் இருந்த ஒரே வாய்ப்பான அவருக்கு ஆதரவை வழங்கினோம். சஜித்தால் ஆதரிக்கப்பட்ட டலஸ் என்பவரோ அவருக்கு ஆதரவாக சஜித்தோ ஜேவிபியின் அனுரகுமாரவோ எங்களிடம் ஆதரவு கேட்டுப் பேசவே இல்லை.
*இராஜபக்சேக்களுடன் சேர்ந்து விரட்டப்பட்டிருக்க வேண்டியவர் இரணில் என சம்பந்தன் கூறியிருக்கிறாரே?
பக்சேக்களைப் பொறுத்தவரை இப்போது பதவியிலிருந்ததுவரை ஊழல் குற்றச்சாட்டுகள் நிமித்தம் வெளியேற்றப்பட்ட நிலை... ரணிலை அப்படிக் கூறமுடியாது. ராஜபக்சேக்கள் கட்சி ஆதரவால்தான் அவர் பதவிக்கு வந்தார் என்பது உண்மைதான். அவர்களுக்காக இவர் வக்காலத்து வாங்க வாய்ப்பு உண்டு எனக் கூறப்படுகிறது. ஆனால் சம்பந்தன் ஐயாவோ அவருடைய கட்சியோ கூறுவதை நான் ஏற்கமாட்டேன். ஏனென்றால், இவர்கள்தான் இதே ரணிலுக்கு 2015 முதல் 2020வரை முட்டுக்கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
* அமைதிவழி ‘கோட்டா கோ கம‘ போராட்டக்காரர்களின் மீது இராணுவத் தாக்குதலை ஏவியதன் மூலம் இராஜபக்சேக்களைவிட இரணில் மோசம் என தென்னிலங்கையிலும் கண்டனம் எழுந்திருக்கிறதே?
அந்தத் தாக்குதலை அன்றே நான் கண்டித்தேன். ரணில் தன்னுடைய வீட்டை எரித்துவிட்டார்கள் என்பதற்குப் பதிலடியாக இப்படிச் செய்திருக்கலாம் என்றும் பேசப்படுகிறது. எப்படியாகினும், பிழையான சில நடவடிக்கைகளை ரணில் செய்தார் என்றால் அதை நாம் ஆதரிக்கமுடியாது.
* பொதுவாக இரணில் விக்கிரமசிங்கே தமிழ் மக்களுக்கு உருப்படியான எதையும் செய்வதில் ஆர்வம் இல்லாதவர். அதனால்தான் புலிப்போராளிகள் அவரைத் தோற்கடிக்கத் தீர்மானித்தனர் என விமர்சிக்கப்படுகிறதே?
அந்தக் கருத்து உண்மைதான். அதேவேளை, ஒருவரின் வாழ்க்கையின் கடைசிக் காலத்தில் தாம்செய்த பிழையானவற்றை சரிசெய்ய வேண்டும் என்கிற எண்ணமும் வருகின்றது. தமிழ் மக்களின் பிரச்னையைத் தீர்க்கவேண்டும் என அவர் தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தினார். அவரிடம் அந்த மனநிலை இருப்பதை என்னால் நன்கு உணரக்கூடியதாக இருந்தது. தமிழ் மக்களின் பிரச்னையை ஆராய்ந்து, பிழைகளைத் திருத்தி செயல்படவேண்டும் என்பதில் அழுத்தமாக இருக்கிறார். காலம்கடந்தேனும் ஒருவரிடத்தில் வரும் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள நினைக்கிறேன்.
* 1983 இனக்கொலைகளுக்கு வித்திட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் ஜெயவர்த்தனவைப் போலவே, இரணிலும் இனப்பிரச்னையைத் தீர்க்காமல் சிங்கள பௌத்த நோக்கிலேயே அணுகுவார்கள் எனும் விமர்சனம் குறித்து?
அவர் சம்பந்தமாக நிலவும் கருத்து உண்மைதான். 2015 ஜனவரி 9ஆம் தேதி சம்பந்தன் ஐயா, சுமந்திரன், நான் மூவரும் அவரை சந்தித்துப் பேசியிருந்தோம். தென்னிந்தியாவுக்குச் சென்றபோது இதைப் பற்றி நான் கூறியிருந்தேன். அதற்காக ரணில் என்னை பொய்யர் என்றும் கூறியிருந்தார். காரணம், சிங்கள மக்களிடையே அது தெரியப்படுத்தப்படக் கூடாது என அவர் நினைத்துள்ளார். ஆனால் இப்போது பிரதமர் அறையில் என்னிடம் பேசியபோது, இனப்பிரச்னையைத் தீர்ப்பதற்கான பலவித சிந்தனைகளை அவர் ஆவலோடு வெளிப்படுத்தினார்.
* நீண்ட காலமாக கொழும்புவில் வசித்த நீங்கள், ஈழத்தமிழருடன் இணக்கமான அண்மைய போராட்டத்தை நல்ல மாற்றம் என்று பார்க்கிறீர்களா?
பொதுவாகவே சிங்கள மக்களிடையே சிங்கள அரசியல்வாதிகள் தமிழ் மக்களுக்கு எதிரான கருத்துகளைச் சொல்லிவந்துள்ளனர். காரணம், தாங்கள் ஊழல்வாதிகள் என சிங்கள மக்களிடம் எண்ணம் வந்துவிடக்கூடாது என்பதுதான். ஆனால் இப்போது சிங்கள மக்கள் உண்மையை உணரத் தலைப்பட்டுள்ளார்கள்.
* இந்த போராட்டம், மக்கள் எழுச்சியால் ஈழத்தமிழர்க்கு சாதகம் உண்டாகுமா?
அப்படி முழுமையாகக் கூறிவிடமுடியாது. தலைநகர் கொழும்புவில் உள்ள சிங்கள மக்கள் வேறுவிதமாகச் சிந்திப்பார்கள். அவர்களைப் போலவே கிராமப்புற சிங்கள மக்கள் இருப்பார்கள் எனச் சொல்லமுடியாது. தமிழர்கள் என்றால் பொல்லாதவர்கள் எனும் எண்ணத்தை அவர்களிடம் உருவாக்கிவிட்டார்கள். இப்போது நகரத்தில் படிக்கும் இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ள மனமாற்றம், ஒருவேளை கிராமப்புற மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துமானால், அதனால் தமிழ் மக்களுக்கு நன்மைபயக்கக் கூடும்.
ஆகஸ்ட், 2022