மதுரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் ஜூலை 15-ஆம் தேதி திறக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், ‘திமுகவின் திராவிட மாடல் ஆட்சி, கலைஞர் கருணாநிதி நூற்றாண்டை அவரைப் போலவே மக்களுக்குப் பயனுள்ள திட்டங்கள் மூலம் கொண்டாடிவருகிறது. ஜூன் 15-ஆம் நாள் சென்னை கிண்டியில் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனையை திறந்துவைத்தேன். ஜூன் 20-ஆம் தேதி கலைஞரை நமக்கு வழங்கிய திருவாரூரில் அவருடைய அன்னை அஞ்சுகம் அம்மையார் நினைவிடம் அருகே கட்டப்பட்ட எழில்மிகு கலைஞர் கோட்டம் திறந்துவைக்கப்பட்டது.
மாபெரும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை ஜூலை 15 அன்று பெருந்தலைவர் காமராசரின் பிறந்தநாளில் திறந்து வைக்கிறேன். சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் சங்கத் தமிழ்க் கவிதைகளுக்குத் தன் தங்கத் தமிழ் வரிகளால் அணி சேர்த்த கலைஞரின் பெயரில் அமைந்துள்ள மாபெரும் நூலகத்தை திறந்து வைப்பதில் பெருமை கொள்கிறேன்.
எதிர்காலத் தலைமுறையின் அறிவாற்றலைப் பெருக்குகின்ற வகையில் தென் தமிழ்நாட்டின் அறிவுத் திருக்கோயிலாக மதுரை மாநகரில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் தலை நிமிர்ந்து நிற்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.