முன்னாள் முதலமைச்சர் கலைஞர் வாரிசுகளான முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் மு. க. அழகிரிக்கும் உரசல் போக்கு இருந்துவந்ததாகஇருந்துவந்தது அனைவரும் அறிந்ததே. ஒரு கட்டத்தில் மு.க. அழகிரி வெளிப்படையாக திமுக தலைவரான மு. க. ஸ்டாலினுக்கு எதிராக பேசத் தொடங்கினார். இந்த மோதல் பெரிய அளவில் திமுக-வை பாதிக்கும் என திமுகவின் அரசியல் எதிரிகள் கணக்கு போட்ட நிலையில், எதிர்பாராத விதமாக மு. க. அழகிரி அமைதியானார். திமுக ஆட்சியைப் பிடித்தபின், இரு குடும்பங்களுக்குள் நல்லுறவு தொடங்கியதாக கூறப்படுகிறது. கடந்த ஜனவரியில் அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், தனது பெரியப்பா மு. க. அழகிரியை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவியும், முதலமைச்சர் ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாளின் 90வது பிறந்த நாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை கோபாலபுரம் இல்லத்தில், தயாளு அம்மாளை நேரில் சந்தித்து வாழ்த்து கூறி, ஆசி பெறுவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் வந்தார்.
அதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் முதலமைச்சரின் சகோதரர் மு.க.அழகிரியும் தனது மனைவி காந்திமதி உடன் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற இல்லத்திற்கு வருகை தந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு முதலமைச்சர் ஸ்டாலினும், மு.க.அழகிரியும் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பதால், இருவரும் சந்தித்து பேசியிருக்கலாம் என்று எதிர்பார்ப்பு எழுந்தது. அதன்படியே கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து ஒரு மணி நேரம் பேசியுள்ளனர்.
இதுகுறித்து, கோபாலபுரம் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "அப்பாவும் பெரியப்பாவும் சந்தித்து பேசிக்கொண்டனர்" என்று தெரிவித்தார். இருவரும் சமாதானம் ஆகிவிட்டார்களா என்ற கேள்விக்கு, “எப்பொழுது சண்டை போட்டுக் கொண்டனர் சமாதானம் ஆவதற்கு” என்று பதில் கேள்வி எழுப்பினார். மீண்டும் மு.க.அழகிரி திமுகவில் இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு அது பற்றி தெரியாது என்று பதில் அளித்தார்.
எப்படியோ கண்கள் பனித்து, இதயங்கள் இணைந்தால் சரிதான்!