பெரும்பாலும் வெற்று சவடால் விடமாட்டார் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர். கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ‘குறித்து வைத்துக் கொள்ளுங்கள், பாஜக இரட்டை இலக்கத்தை மேற்குவங்கத்தில் தாண்டாது' என ட்வீட் செய்தார். அத்துடன், ‘‘பாஜக இதைத் தாண்டி விட்டால் இந்த வேலையைச் செய்வதை நான் நிறுத்திவிடுகிறேன்'' என்றும் கூறி இருந்தார். அம்மாநிலத்தில் ஆளும் திருணாமூல் காங்கிரஸுக்கு தேர்தல் வியூகங்களைச் செய்து வந்தார் பிரஷாந்த் கிஷோர். ஆனால் எப்படியும் பாஜகதான் வெல்லும் அங்கே என அக்கட்சியினரும் சார்பு ஊடகத்தினரும் மக்களை நம்ப வைக்க முயன்ற நிலையில் இப்படி ஒரு ட்வீட் அவரிடம் இருந்து வந்தது. சும்மா சீன் போடுகிறார் என அவர் விட்ட சவால் விமர்சிக்கப்பட்டது.
ஆனால் பிரஷாந்த் கிஷோர் சொன்னதே நடந்தது. எல்லா அழுத்தங்களையும் மீறி பாஜக மேற்குவங்கத்தில் இரட்டை இலக்கத்தைத் தாண்டவில்லை. திருணாமூல் காங்கிரஸ் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. ஆனாலும் பிகே தான் இந்த அரசியல் வியூக வகுப்பாளர் வேலையை இனிச் செய்யப்போவதில்லை என்று கூறி இருப்பதுதான் ஆச்சரியம்.
என்டிடிவியின் சீனிவாசன் ஜெயினிடம் நேரலையில் பேசும்போது, ‘‘ ஒன்பது ஆண்டுகளாக இதையே செய்துகொண்டு இருக்கிறேன். இப்போது நான் ஒதுங்கிக்கொண்டு வாழ்க்கையில் வேறு சில விஷயங்களை செய்ய இருக்கிறேன்,'' என்று சொல்லி அதிர்ச்சி கொடுத்தார் பிகே.
தமிழ்நாட்டில் திமுகவுக்காக பணி செய்து இங்கும் வெற்றி, மேற்குவங்கத்திலும் இந்த சமயத்தில் ஏன் பிகே ஒதுங்குவதாக அறிவிக்கிறார் என்ற குழப்பம் யாருக்கும் விலகவில்லை.
2014-இல் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்து பிரதமர் தேர்தலில் களமிறங்கியபோது அவரது தேர்தல் வியூகத்தை வெற்றிகரமாக கையாண்டதன் மூலம் கவனத்துக்கு வந்தார். பின்னர் 2015 இல் நிதிஷ்குமாருக்கு பீகாரில் வெற்றி, பின்னர் அமரிந்தர் சிங்குக்கு பஞ்சாப்பில் வெற்றி, பிறகு ஆந்திரத்தில் ஜெகன் மோகன் ரெட்டி என பலவற்றை சாதித்துக் காட்டி தேர்தல் வியூகத்தில் தான் ஒரு நிபுணர் என நிரூபித்தார். 2020இல் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தேர்தல் வியூக ஆலோசகராக இருந்தார்.
தமிழ்நாட்டில் திமுகவுக்கு தேர்தல் ஆலோசனைக்கு அவரது ஐபேக் நிறுவனம் வந்தபோது பிகே என்ன செய்வார் என்று கேள்வி எழுந்தது. அவரது அணியினர் வேட்பாளர் தெரிவிலும் கொரோனா சமயத்தில் நலத்திட்டங்களை கட்சி மேற்கொள்வதிலும் வழி நடத்தி இருந்தனர். கொரோனா காரணமாக பிரச்சாரம் செய்வதில் சுணக்கம் ஏற்பட்ட நிலையில் டிஜிட்டல் பிரச்சாரம், சமூக ஊடகச் செயல்பாடுகள்,
தொகுதிகளின் மைக்ரோ நிர்வாகம் போன்றவற்றில் ஆலோசனைகள் ஆகியவற்றில் உதவி இருக்கிறார்கள். மேற்கு வங்கத்தில் தீதியிடம் (மம்தாவிடம்) சொல்லுங்கள் என்ற திட்டத்தை செயல்படுத்தி மக்களுக்கும் மம்தாவுக்கு இடையே நேரடியாக தொடர்பை ஏற்படுத்தினார். அதன் இன்னொருவடிவம்தான் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் ஒவ்வொரு தொகுதியிலும் குறைகளை மனுவாகப் பெற்ற திட்டம்.
சிலபேர் தொட்டதெல்லாம் பொன்னாகும். ஆம் பிகே தொட்டவர்கள் எல்லாம் முதல்வர் பதவிக்கு வந்தனர். பிகேவுக்கும் அரசியல் ஆசை உண்டு. மோடியிடம் ஆட்சியில் பதவி கேட்டார் என ஒரு வதந்தி உலவியது. நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தில் துணைத்தலைவராகவும் கொஞ்ச நாள் பதவி வகித்துப் பார்த்திருக்கிறார். இவரது அடுத்த மூவ் என்னவாக இருக்கலாம்? சஸ்பென்ஸ் நீடிக்கிறது!
மே 2021