மக்களவை எம்.பி. பறிக்கப்பட்டு மீண்டும் கிடைத்துள்ள நிலையில், முதல் முறையாக தன் மக்களவைத் தொகுதியான வயநாட்டுக்கு இராகுல் காந்தி சென்றுள்ளார். கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதி எம்பியான இராகுல், முன்னதாக நேற்று தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்துக்கு வந்திருந்தார்.
மாவட்டத்தின் பழங்குடி மக்கள் குடியிருப்புக்குச் சென்று அவர்களுடன் நடனமாடி உணவருந்தி உரையாடினார். பின்னர் வயநாடு தொகுதிக்கு இராகுல் காந்தி சென்றார். அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையில், மணிப்பூர் விவகாரத்தை விரிவாக விளக்கினார்.
தான் அரசியலுக்கு வந்து 19 ஆண்டுகள் ஆகிவிட்டன என்றும் ஆனால் இப்படியொரு மோசமான அனுபவத்தை தான் எதிர்கொண்டதில்லை என்றும் இராகுல் குறிப்பிட்டார்.
மணிப்பூரில் தான் சந்தித்த பெண்களின் துயரக் கதைகளையும் அவர் பேசியது, மனதை உருக்குவதாக இருந்தது.
கொடூரமாகக் கொல்லப்பட்ட தன் மகனின் படத்தை மட்டுமே வைத்தபடி தன்னிடம் துயரத்தை வெளிப்படுத்திய ஒரு தாய், தனக்கு ஏற்பட்ட வலிமிகுந்த மோசமான அனுபவத்தை விவரிக்கத் தொடங்கி முடியாமல் மயக்கம்போட்டு விழுந்துவிட்ட இன்னொரு தாயார் என இராகுல் பலரின் கதைகளையும் விவரித்தார்.
“ அங்கே எங்கு பார்த்தாலும் ஒரே ரத்தமயம். எல்லா இடங்களிலும் கொலைகள். பாலியல் பலாத்காரங்கள். இதுதான் மணிப்பூரின் நிலைமை. ஆனால் நாடாளுமன்றத்தில் 2 மணி 13 நிமிடங்கள் பேசிய பிரதமர் மோடி, இரண்டே நிமிடங்கள் மட்டுமே மணிப்பூரைப் பற்றிப் பேசினார். அவரும் அவருடைய அமைச்சர்களும் பேசினார்கள், சிரித்தார்கள்...” என்றவர்,
மணிப்பூரில் ஆயிரக்கணக்கான மக்கள் கடுமையான துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர் என்று குறிப்பிட்டார்.