புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடந்த முதல் கூட்டத் தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி கெத்து காட்டியிருக்கிறது பாஜக. பெரும்பாலும் அனைத்துக் கட்சிகளாலும் ஆதரிக்கப்பட்ட இந்த மசோதா இப்போதைக்கு அமலுக்கு வரப் போவதில்லை. இன்னும் சில வேலைகள் மீதம் இருக்கின்றன என்பது ஒரு பெரும் குறை. ஆகவே தேர்தலை மனதில் வைத்து செய்யப்பட்ட நடவடிக்கை இது என எதிர்க்கட்சிகள் குறைகூறுகின்றன.
பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு என்பதை நான் வரவேற்கிறேன். எங்கள் தலைவர் முதலமைச்சர் அவர்களும் கூட அது எப்போது நிறைவேற்றினாலும் வரவேற்கத் தகுந்ததே என்று கூறி உள்ளார். ஆனால் கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் நிறைவேற்றாமல் இதை ஏன் இப்போது பாஜகவினர் நிறைவேற்ற வேண்டும்? இவ்வளவு நாள் என்ன செய்துகொண்டிருந்தனர்? இதை அமல்படுத்தும் முன்பாக தொகுதி மறுவரையறை செய்யவேண்டும், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு செய்யவேண்டும் என்கிறார்கள். இவற்றுக்கும் மகளிர் இட ஒதுக்கீட்டுக்கும் பத்து பைசாகூட தொடர்பு இல்லை. 2014 - இல் மகளிர் மசோதா கொண்டுவருவதாகக் கூறித்தான் ஆட்சிக்கு வந்தனர். இந்த ஒன்பதரை ஆண்டுகளில் இப்போது சொல்லும் நிபந்தனைகளை எல்லாம் நிறைவேற்றி இந்நேரம் கொண்டுவந்திருக்கலாமே? என்பதுதான் என் கேள்வி. உண்மையில் இதை நிறைவேற்ற வேண்டும் என்ற தார்மீக நோக்கம் இருப்பதாகத்தெரியவில்லை. இந்த இட ஒதுக்கீட்டை 27 ஆண்டுகளாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். யாரும் அளிக்கவில்லை. இந்த இரண்டு நிபந்தனைகளால் 2032 - இல் கூட இந்த இட ஒதுக் கீட்டை அளிக்க முடியாது. இந்த மசோதாவை 15 ஆண்டுகளுக்குள் செயல்பாட்டுக்குக் கொண்டுவராவிட்டால் அது காலாவதி ஆகிவிடும் என்ற விதியும் அதில் உள்ளது. என் காலத்தில் நிறைவேறாவிட்டாலும்கூட என் குழந்தைகள் காலத்திலாவாது நிறைவேறுமா என்றுதான் பார்க்கவேண்டும்.
மகளிர் இட ஒதுக்கீட்டுக்கு நாம் பல காலமாக ஏங்கிக் கொண்டிருந்தோம். இப்போதுதான் அது மசோதாவாக நிறைவேறியிருக்கிறது.
அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களுடைய ஆட்சியில் நான்கு முறை மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை சட்டமாக்க முயன்றார். அதாவது 1998, 1999, 2002, 2003 ஆகிய ஆண்டுகளில் இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்பட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்காமல் தடுத்தனர்.
தற்போது, மகளிருக்கான இட ஒதுக்கீட்டு மசோதா இரு அவைகளிலும் நிறைவேறியிருக்கிறது. இதன் மூலம், மகளிருக்கு கொடுத்த வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம். இதுவரை யாராலும் செய்ய முடியாததை, செய்து சாதித்திருக்கிறோம். மகளிருக்கு சம உரிமை உண்டு என்பதை பிரதமர் நரேந்திர மோடி உறுதிப்படுத்தியிருக்கிறார்.
மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை இப்போதே செயல்பாட்டுக்கு கொண்டு வந்தால், தொகுதி மறுவரையறை செய்யும்போது பிரச்னை வரும். அதனால், தொகுதி மறுவரையறை செய்த பிறகு இதை செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தால்தான் பெண்களுக்கு அதிக இடம் கிடைக்க வழிவகை செய்யும்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவின் நோக்கம் நிறைவேறும் வரை இந்த சட்டம் தொடரும். இதில் யாருக்கும் சந்தேகம் தேவையில்லை.