“அணுகுவதற்கு எளிமையான பிரதிநிதியாக இருப்பேன்”

தேர்தல் : சந்திப்பு - தமிழச்சி தங்கப்பாண்டியன்,தென்சென்னை.
“அணுகுவதற்கு எளிமையான பிரதிநிதியாக இருப்பேன்”
Published on

நிறைய காலமாக தேர்தல்களில் பிரசாரம் மட்டுமே செய்துவந்த நிலையில் முதல்முதலாக நீங்களே வேட்பாளராக நிற்கிறீர்கள். எப்படி இருக்கிறது?  

 பிறருக்காக பிரசாரம் செய்கையில் தெருமுனைகளில் பேசுவோம்; கூட்டங்களில் பேசுவோம். ஆனால் நாமே வேட்பாளராக இருக்கையில் நேரடியாக மக்களை அணுகிப் பேசுகிறோம். அம்மக்கள் காண்பிக்கும் வரவேற்பும் இன்முகமும் உண்மையிலேயே ரொம்ப 'திரில்லிங்' ஆக இருக்கிறது. அவர்களின் எழுச்சியும், மாற்றத்தை விரும்பும் உணர்வும் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. சென்னையின் எல்லா முகங்களையும் பார்த்து அவர்களுடன் மேலும் சக மனுஷியாக ஒன்றுவதற்கான கூடுதல்காரணமாகவும் இந்தத் தேர்தல் அமைந்திருக்கிறது.

உங்கள் பிரசாரத்தில் நீங்கள் முன்வைக்கக்கூடிய பொதுவான அம்சம் என்ன?

திமுகவின் தேர்தல் அறிக்கையைத்தான் முன்வைக்கிறேன். பொள்ளாச்சி கொடூரம் போன்ற  பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றங்களைத் தடுக்க சட்டம் கொண்டுவரப்படும், பத்தாவது படித்த 50லடசம் பெண்களுக்கு மக்கள் நலப்பணியாளர் வேலை ஆகியவற்றை ஒரு பெண்ணாக நான் முக்கியமான அம்சங்களாகப் பார்க்கிறேன். கல்விக்கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து, கல்வி மாநிலப்பட்டியலில் கொண்டுவரப்படுவது போன்றவை மாநில உரிமை தொடர்பானவை. நெசவாளர்களுக்கு வரி விலக்கு, காவிரி டெல்டாவை சிறப்பு வேளாண்மண்டலமாக அறிவிப்பது போன்றவையும் முக்கியமானவை. ஏற்கெனவே  சமூகம் சார்ந்த வெளியில்  நாடகம், எழுத்து என புழங்கிக்கொண்டிருக்கும் பெண்ணான நான் மிக எளிதாக அணுகக்கூடிய நிலையில் இருக்கிறேன். எனவே தொகுதி மக்கள் எந்த பிரச்னைக்கும் என்னை எளிதில் சந்தித்து விட முடியும். ஆகவே அவர்களுக்கான சிறந்த மக்கள் பிரதிநிதியாக இருப்பேன் என்பதையும் முன்னிறுத்தி பிரசாரம் செய்கிறேன்.

தென்சென்னை தொகுதிக்கு முக்கியமான பிரச்னைகளாக எதையெதை அடையாளம் கண்டுள்ளீர்கள்?

நீண்டகாலமாக தீர்க்கமுடியாத பிரச்னைகளாக பல இருக்கின்றன. உதாரணத்துக்கு பெருங்குடி குப்பை கிடங்கு. முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் அதைச்சுற்றி சுற்றுச்சுவர் அமைத்து, திடக்கழிவு மேலாண்மை  மூலம் மறுசுழற்சி செய்ய தொழில்முனைவோர் கூட்டமைப்புடன் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் பிறகு வந்த அதிமுக ஆட்சி குளறுபடிகளால் இப்போது அது பசுமைத்தீர்ப்பாயம் முன்பு உள்ளது. இதைச் சரிசெய்யமுடியும்,  குடிநீர் தட்டுப்பாடு இன்னொரு பிரச்னை. வேளச்சேரியிலிருந்து மகாபலிபுரம் வரைக்குமான மெட்ரோ கோரிக்கை உள்ளது, போக்குவரத்து நெரிசலைக் குறைத்தல் போன்ற விஷயங்கள் உள்ளன. வெகுகாலமாக சோளிங்கநல்லூர் மக்கள் ஒரு பன்னோக்கு மருத்துவமனை கோரிக்கை வைத்துவருகிறார்கள். அதற்காகவும் நான் உழைப்பேன். இதெல்லாம் ஒரு சில விஷயங்கள்தான். இதுபோல் பல கோரிக்கைகள், பிரச்னைகள் சரிசெய்யப்படாமலுள்ளன. அவற்றை தீர்க்க முயல்வதே என் பணி.

அவற்றை தீர்க்க முயல்வதே என் பணி. திமுக கூட்டணியின் பலம் என்ன? அது சந்திக்கும் சவால் என்ன?

பலம் என்பது எங்கள் தலைவர் மட்டும்தான். அவசரப்படாமல் நிதானமாக அணுகுகிறார். கொள்கை சார்ந்த கூட்டணியை கட்டிக் காட்டியிருக்கிறார். அகில இந்திய அளவிலும் பிரதமராக ராகுல்காந்தியை முன்மொழியும் தீர்க்கதரிசனமும் காட்டியிருக்கிறார். அவர்தான் எங்கள் பலம். சவால் என நாங்கள் எதிர்கொள்வது ஆளும் கட்சியின் பணபலம்; அதிகார துஷ்பிரயோகம்.

ஏப்ரல், 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com