எம்.பி. தேர்தலில் விஜய் கட்சி? -தேசிங்குராசாவும் குதிரையும்!

அரசியல் கிசுகிசு பகுதி
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on

‘எங்கே போய்விட்டாய்….? போனவாரம் ஆளைக் காணவில்லையே’ என்ற தேசிங்குவின் கேள்வியை குதிரை வாய்நிறைய தீவனத்தை தின்றவாறே எதிர்கொண்டது.

‘ராசாவே.. வயிற்றுப் பிரச்னை. மருத்துவமனைக்குப் போய்விட்டேன்’

“இப்படி தின்றால் வயிறு எப்படி கெடாமல் இருக்கும்’ என தேசிங்கு சிரித்தவாறே குதிரையை கொட்டகையை விட்டு வெளியே கூட்டி வந்தான். எதிரே இருந்த புல்வெளியில் நடக்க ஆரம்பித்தார்கள்.

“மன்னவா… ஒருவழியாக காங்கிரஸ் வட இந்தியாவில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை தீர்த்துகொண்டுவிட்டது போலிருக்கிறது. உபியில் அகிலேஷின் சமதா கட்சியிடம் 17 இடங்கள் பெற்று, மத்திய பிரதேசத்தில் 1 இடம் தருவது என தீர்த்துவிட்டதில் அக்கட்சியினருக்கு ஏக குஷி. ஆம் ஆத்மியுடனும் டெல்லி, ஹரியானா, குஜராத், பஞ்சாப் என இணக்கம் தெரிகிறது. மேற்குவங்கத்தில் முரண்டு பிடிக்கும் மமதா தீதியுடன் கூட இணக்கம் ஏற்படுவதாக பேச்சு இருக்கிறது’

“ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை, இந்தியா கூட்டணி ஒழுங்காக விட்டுக்கொடுத்து அமைக்கப்படுவது இரண்டும்தான் பாஜகவுக்கு எதிரில் ஓரளவுக்கு முகம் கொடுத்து நிற்கவாவது உதவும் என்பதால் காங்கிரஸ் காரர்கள் இறங்கி வந்து பேசுகிறார்கள் போலிருக்கிறதே..?”

“ஆம். தமிழ்நாட்டில் அழகிரியைத் தடாலடியாகத் தூக்கிவிட்டு செல்வப்பெருந்தகையை போட்டிருக்கிறார்கள் பார்த்தீர்களா?’

‘ஆம் குதிரையே… ஆன்லைன் சந்திப்பில் அவர் ஜோதிமணி எம்பியிடம் மோதியபோதே சிலர் இந்த மாறுதல் வரும் என எதிர்பார்த்தார்கள்… ஒரு சில விஷயங்களை கருத்தில் கொண்டு செல்வப்பெருந்தகையை ஆக்கி இருக்கிறார்கள். எங்களுக்கு எதிராக ஆட்களைத் தூண்டிவிடுகிறார் என பல தலைவர்களிடமிருந்து பறந்த குற்றச்சாட்டும் ஒரு காரணமாம். இன்னொரு செய்தி சிவகங்கையில் எப்போதும்போல கார்த்திக் சிதம்பரம் காங்கிரஸ் சார்பாக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அங்கே அடடே என ஆச்சரியப்படும் வகையில் வேறு ஒரு வேட்பாளர் நிறுத்தப்படக்கூடும் என்ற தகவல் சில நாட்களாக காற்றில் பறக்கிறது! ’

அண்ணாமலை
அண்ணாமலை

‘தமிழக பாஜக தரப்பில் ஏதேனும் செய்தி உண்டா ராசா?’

“ மோடியைப் போல அண்ணாமலையும் தாடியோடு திரிவதுதான் செய்தி. அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை முடிவை ஒட்டி 27, 28 ஆம் தேதிகளில் பிரதமர் மோடி வருகிறார் அல்லவா? அச்சமயம் தமிழ்நாட்டு கூட்டணி பற்றி இறுதி முடிவுகள் எடுத்துவிடுவது என்றும் போட்டியிடப் போகும் பாஜக வேட்பாளர்களை மோடி சந்திப்பார் என்றும் சொல்கிறார்கள்’

“யார் யார் வேட்பாளர்களாம்?’

‘ஏகப்பட்ட ஊகங்கள். ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று முதல் ஐந்து பேர் இருக்கிறார்கள் என்று அவர்கள் சொல்லிக்கொண்டு உள்ளனர். இறுதித் தேர்வு அமித் ஷா செய்வார். சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளில் ஏதாவது இரண்டில் குஷ்பூ, வினோஜ் பி செல்வம் ஆகிய இருவரும் போட்டியிடக்கூடும். விருதுநகரில் பேராசிரியர் சீனிவாசன் பெயர் அடிபடுகிறது. அப்புறம் பாஜகவின் இரண்டு எம்.எல்.ஏக்கள், இப்போது மாநிலங்களவைக்குத் தேர்வான எல். முருகன் ஆகியோரும் களமிறக்கப்படுவார்களாம்! அண்ணாமலை போட்டியிட விருப்பம் இல்லை என சொன்னாலும் அவர் கன்னியாகுமரியில் களமிறக்கப்படும் வாய்ப்பும் இல்லாமல் இல்லை என்பது அக்கட்சி வட்டாரத்தில் சில நாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறது’

‘ஓ’

‘காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி பாஜக தலைவர் நட்டாவைச் சந்தித்திருப்பதாகவும் விரைவில் பாஜகவில் இணையக்கூடும் என்று காங்கிரஸ் வட்டாரங்களில் குரல் தொடர்ந்து கேட்கிறது!’

‘அவருக்கு என்ன அதிருப்தியோ…. விஜய்யின் புதுக்கட்சி எப்படி இருக்கிறதாம்?’

‘நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் இந்த தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று சொல்லிவிட்டாலும்கூட தேர்தல் அனுபவத்துக்காக இந்த தேர்தலில் ஏதேனும் ஒரு தொகுதியில் யாரையாவது போட்டியிட வைத்துப் பார்க்கலாம் என ஆலோசனை சொல்லப்பட்டுள்ளதாம்’ பொத்தாம் பொதுவாக சொன்னான் தேசிங்கு.

”அதிமுக- பாஜக கூட்டணி இல்லை என்பதை விட எந்த தேசியக் கட்சியுடனும் எங்களுக்கு இனி கூட்டணி இல்லை என்று அதிமுக பேச ஆரம்பித்திருக்கிறதே பார்த்தீர்களா?’

‘ நல்ல விஷயம்தான். இதிலேயே அவர்கள் உறுதியாக இருக்கவேண்டும். கட்சிக்குள் சிலருக்கு இன்னும் வடக்கை நினைத்தால் வயிற்றில் புளி கரைத்தால் போல்தான் இருக்கிறது. அதனால்தான் யாரும் மோடியை பெயரைச் சொல்லி விமர்சிக்காமல் இருக்கிறார்கள்’’

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

“எடப்பாடியார்?’

’அவர் தேர்ந்த அரசியல்வாதி என்பதை இச்சமயம் நிரூபிப்பார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். இரவு நேரத்தில் சென்னையில் இருந்தால் சிலருடன் மெரினா கடற்கரையில் காற்று வாங்கியவாறே நாற்காலி போட்டு உட்கார்ந்திருப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளாராம்! நம் ஒற்றர் படைத் தலைவர் கூறினார்!’ என்று சொன்னான் தேசிங்கு.

குதிரை சிரித்தது. ”ராசாவே… நான் தான் உங்களுக்கு செய்தி சொல்ல ஒரே ஆள் என நினைத்தேன். நீர் ஒற்றர் படை என்றெல்லாம் சொல்கிறீர்களே? புருடா பலமாக இருக்கிறதே?’

தேசிங்கு சிரித்தவாறே குதிரை மீது ஏறினான்.

logo
Andhimazhai
www.andhimazhai.com