தேர்தலில் போட்டியிடும் ஆளுநர்? தேசிங்குராஜாவும் குதிரையும்!

அரசியல் கிசுகிசு பகுதி
தேர்தலில் போட்டியிடும் ஆளுநர்? தேசிங்குராஜாவும் குதிரையும்!
Published on

“ஏய்ப்பவர்க்கே காலம் என்று எண்ணிவிடாதே.. பொய் எத்தனை நாள் கைகொடுக்கும் மறந்துவிடாதே.. ஒரு நாள் இந்த நிலைமைக்கெல்லாம் மாறுதல் உண்டு… அந்த மாறுதலைச் செய்வதற்குத் தேர்தல் உண்டு”

சத்தமாகப் பாடிக்கொண்டு வந்தான் தேசிங்கு.

‘என்ன ராசா? பயங்கர குஷியா இருக்கீங்க போல..’ என்றது குதிரை.

“ ஒண்ணும் இல்லை. நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி. தன் உரையின் கடைசியில் குறிப்பிட்ட இந்த எம்.ஜி.ஆர். பாட்டைக் கேட்டவுடன் அது பிடித்துக்கொண்டது’ என்ற அவன் குதிரைக்கு சேணத்தை மாட்டினான்.

“அவருக்கு வேலூர் தொகுதியில் இந்த தடவை தி.மு.க. சீட் தருகிறார்களா?’

“நேராக மேட்டருக்கு வந்துவிட்டாயா? தி.மு.க. கூட்டணியில் இஸ்லாமிய கட்சிகள் தரப்பில் இருந்து வேலூர் தொகுதி கேட்கப்படுவதால் சற்று குழப்பமாக இருப்பதாகச் சொல்கிறார்கள்’

‘தி.மு.க. கூட்டணியில் என்ன குழப்பங்கள் இருக்கின்றன?’

“ ம.நே.மக்கள் கட்சி ஒரு தொகுதி கேட்கிறது. 2014-இல் கொடுத்ததுபோல் மயிலாடுதுறையாக இருந்தாலும் பரவாயில்லை என்கிறார்கள். முஸ்லிம் லீக் ஏற்கெனவே ராமநாதபுரம் கேட்டுள்ளது... வி.சி.க. இரு தொகுதியிலும் பானை சின்னத்திலேயே போட்டியிட விரும்புகிறார்கள். கமல் கூட தன்னுடைய டார்ச் லைட் சின்னத்திலேயே நிற்க விரும்புகிறார்..’

‘ஏன் சூரியன் சின்னத்தில் நின்றால்தானே வெற்றி எளிதாக இருக்கும்?’

‘அப்படிச் சொல்லித்தான் கடைசியில் தி.மு.க.வினர் இக்கட்சிகளை சரிக்கட்டுவார்கள்… ஒன்று மட்டும் நிச்சயம். திமுக கூட்டணியில் மேலும் ஒருசில புதிய வாரிசுகள் தேர்தலில் போட்டியிடுவதை நாம்  பார்க்கலாம்’ என்ற தேசிங்கு, குதிரை மீது ஏறிக்கொண்டான். மென்னடையில் தலையை உலுக்கியவாறு அது நடக்கத்தொடங்கிற்று.

“ராசா,… அ.தி.மு.க. தரப்பில் ஒன்றும் சுறுசுறுப்பு தெரியவில்லையே….?’

“எல்லாம் டெல்லிக்காரர்கள் கொடுக்கும் குடைச்சல்தான். கூட்டணியில் பா.ம.க., த.மா.கா., தே.மு.தி.க. எல்லாம் இடம்பெறுமா என்கிற பேச்சுவார்த்தை இழுத்துக்கொண்டே போகிறது. இந்த கட்சிகள் எல்லாம் பா.ஜ.க.வுடனும் பேசிக்கொண்டிருக்கின்றன அல்லவா? அதனால் காட்சிகள் குழப்பமாகத்தான் இருக்கும்’

‘அ.தி.மு.க.வுக்காக கூட்டணிக் கதவுகள் திறந்தே இருக்கும் என்று அமித் ஷா சொன்னது?’

‘எந்த அ.தி.மு.க.? ஓ.பி.எஸ். ஏற்கெனவே உள்ளே இருக்கிறார்… எடப்பாடி தலைமையிலான இரட்டை இலை  வைத்திருக்கும் அ.தி.மு.க.வை அவர் குறிப்பிட்டால் அது சற்று அழுத்தமும் கனமும் கூடிய ஸ்டேட்மெண்ட்தான்!’

குதிரை சற்றுக் கனைத்தது.

’பா.ஜ.க.வில் இன்னொரு மூத்த தமிழகத் தலைவர் ஒரு மாநிலத்துக்கு ஆளுநர் ஆகப்போகிறாராம்! அதே சமயம் இப்போது ஆளுநராக இருக்கும் ஒருவர் அவர் இடத்தில் தேர்தலில் போட்டியிடப்போகிறாராம்! இந்த மாறுதலைப் பற்றித்தான் பலமாக அந்த கட்சி வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்!’

‘தெற்கே உள்ள தொகுதி என்றால் எல்லாம் புரிந்துவிடும்…. சரிதானே?’

“சரிதான்’

”இன்னொரு அதிர்ச்சி தரும் செய்தி சொல்கிறேன் கேள். வட இந்திய இளவரசர் ஒருவர் தமிழகத்தின் தென் பகுதி தொகுதி ஒன்றில் களமிறங்கப்போகிறாராம். ஏற்கெனவே பக்கத்து மாநிலத்தில் ஜெயித்து எம்.பி. ஆனவர்தான் அவர். ஆனால் இம்முறை தமிழகத்தில் நிற்கப்போவதாக பட்சி சொல்கிறது!’

“பார்த்து சொல்லுங்க ராஜா… அந்த பட்சியைப் பிடித்து பிரியாணி போட்டுவிடப்போகிறார்கள்!’ சிரித்தது குதிரை.

குதிரையின் கழுத்தில் செல்லமாகத் தட்டிய தேசிங்கு, ‘ எனக்கு காதில் விழுந்ததை உனக்குச் சொன்னேன்..அதற்குத்தானே இந்த பகுதி குதிரையே’ என்றான்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

‘ பா.ஜ.க. கூட்டணியில் டிடிவி தினகரன் சிவகங்கையில் நிற்பது உறுதியா?’

‘சிவகங்கையில் நிற்குமாறு பாஜக தரப்பில் கூறப்படுகிறதாம். அவர் ஒருவேளை தேனியில் நிற்பார்.. இல்லையெனில் போட்டியிடாமல் பிரச்சாரம் மட்டும் செய்யலாம் என்கிறார்கள்’

‘ஓகே..’ என்ற குதிரை ‘சற்று வேகமாக ஓடப்போகிறேன்’ கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள்’ என்றவாறு நாலு கால் பாய்ச்சலில் ஓடத் தொடங்கிற்று!

logo
Andhimazhai
www.andhimazhai.com