நாடாளுமன்ற மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி சுமார் இரண்டரை மணி நேரம் பதிலுரை ஆற்றினார். ஆனால் அதில் மணிப்பூரைப் பற்றி அவர் குறிப்பிடாமல் இருக்க... எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மணிப்பூர் மணிப்பூர் என்று குரல் கொடுத்தனர். அதை அவர் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் பேசினார். மணிப்பூரைப் பற்றிய விவாதத்தில் அதைக் குறிப்பிடாமல் மோடி பேசியதைக் கண்டித்து, இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அவர்கள் அவையிலிருந்து வெளியே சென்றபிறகு, பிரதமர் மணிப்பூர் எனக் குறிப்பிட்டு பேசத் தொடங்கினார்.
மத்திய, மாநில அரசுகள் இரண்டும் குற்றவாளிகளுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க இயன்ற அளவுக்கு முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் பெண்கள், மகள்கள் உள்பட்ட மொத்த மணிப்பூர் மக்களுடன் இந்த நாடு உடன் இருக்கிறது என்றும் பிரதமர் மோடி தன் பேச்சின்போது குறிப்பிட்டார்.
மணிப்பூரில் நிகழ்ந்த எதுவும் வலியைத் தரக்கூடியதுதான்; இதில் யாரும் அரசியல் செய்யக்கூடாது என்றும் மோடி பேசினார்.
மணிப்பூரில் இதற்கு முன்னர் இருந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இனங்களுக்கு இடையிலான வன்முறையால் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது ஆயுதக் கிளர்ச்சியாளர் வசம்தான் எல்லாமும் இருந்தது; அப்போது அங்கு ஆட்சி செய்தது யார்? என்றும் கேட்டார், மோடி.
வடகிழக்கு மாநிலங்களின் பிரச்னைகளில் முன்னாள் பிரதமர் நேரு, இந்திரா ஆகியோரின் நடவடிக்கைகளைப் பட்டியலிட்டு, அவர்கள்தான் பிரச்னைக்கு வித்திட்டதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.
ஆனால், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்து பேசிய அசாம் காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகாய், மணிப்பூரில் உள்ள இரட்டை எஞ்சின் அரசாங்கத்தின் தோல்விக்கு பிரதமர் தன் பேச்சில் பொறுப்பேற்றுக்கொள்ளவே இல்லை; இதனால்தான் எதிர்க்கட்சிகள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தன என்று கூறினார்.