வார்த்தைப் போர்
வார்த்தைப் போர்

‘அரசியலை விட்டு விலகணும் செல்வப்பெருந்தகை!’ - பிரச்னை முடியாது போலிருக்கே?

Published on

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் இடையிலான வார்த்தைப் போர் தொடர்ந்துகொண்டே செல்கிறது. ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்குப் பின் பா.ஜ.க.வில் ரவுடிகள் அதிகமாக இருப்பதாக செல்வப்பெருந்தகை சொல்ல, அவரையே குண்டர் சட்டத்துக்கு ஆளானவர் என அண்ணாமலை சொல்ல இவர்கள் மோதல் ஓய்வதாக இல்லை.

இந்நிலையில் தமிழக பா.ஜ.க. துணைத்தலைவர் நாராயணன் திருப்பதியும் களத்தில் குதித்து செல்வப்பெருந்தகையை நோக்கி சில கேள்விகளைக் கேட்டுள்ளார். அவை:

”பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்லவில்லை செல்வப்பெருந்தகை.

1. குண்டர் சட்டம் செல்வப்பெருந்தகை மீது பாய்ந்ததா இல்லையா?

2. ஆடிட்டர் பாண்டியன் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டது உண்மையா இல்லையா?

3. ரிசர்வ் வங்கியில் நாணய பரிசோதகர் பணியில் இருந்த செல்வப்பெருந்தகை லண்டனில் கல்லூரி நடத்துமளவிற்கு பெருந்தனக்காரரானது எப்படி?

4. செல்வப்பெருந்தகையின் மீது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துசேர்த்த வழக்கு உள்ளதா இல்லையா?

5. வேறு ஒரு கட்சியில் இருந்தபோது காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜிவ்காந்தியின் கொலையை நியாயப்படுத்திப் பேசியதோடு, அக்கொலைக்குக் காரணமான விடுதலைப்புலிகளை ஆதரித்து சட்டப்பேரவையில் பேசியது உண்மையா இல்லையா?

நாராயணன் திருப்பதி, பா.ஜ.க.
நாராயணன் திருப்பதி, பா.ஜ.க.

இவற்றுக்குப் பதில் சொல்லாமல், ஏதோ காந்தியின் பேரன், உத்தமபுத்திரன் என்றெல்லாம் வசனம் பேசி, ஒடுக்கப்பட்டவர்கள், விளிம்புநிலை மக்கள் என்று சொல்லி, அப்பாவி மக்களின் முகமூடி அணிந்துகொண்டு, நேர்மையான தலைவர் அண்ணாமலையை மிரட்டுகிற வேலையெல்லாம் தேவையில்லை செல்வப்பெருந்தகை. காங்கிரஸ் கட்சியினர் ஏமாளிகளாக இருக்கலாம், ஆனால் நீங்கள் தமிழக மக்களை இனியும் ஏமாற்றமுடியாது.

செல்வப்பெருந்தகையே, உண்மையை ஒப்புக்கொண்டு அரசியலை விட்டு விலகவும்’’. என்று நாராயணன் எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com