அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு சுஷ்மா சுவராஜின் ’கடல் தாமரை’ பதில்!

அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு சுஷ்மா சுவராஜின் ’கடல் தாமரை’ பதில்!
Published on

தமிழக மீனவர் பிரச்னையைத் தீர்க்கமுடியாமல் திமுக இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைதன் நடைபயணத்தின்போது குறைகூறியிருந்தார். அதற்கு பதில் அளிக்கும்படியாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பாம்பனில் பேசினார்.

இராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் மீனவர் மாநாட்டில் இன்று பங்கேற்ற ஸ்டாலின், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். மீனவர்களுக்கான பத்து திட்டங்களையும் அவர் அறிவித்தார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதையும், கைது செய்யப்படுவதையும் இந்த மாநாடு வன்மையாக கண்டிக்கிறது எனக் கூறி, கரகோசம் எழுப்பவும் கேட்டுக்கொண்டார்.

மேலும் பேசுகையில்,

” 2014-ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்ததற்குப் பின்னால்தான் அடக்குமுறைகள் இன்னும் அதிகம் ஆகியிருக்கு. கைது, தாக்குதல், சிறைச்சாலைகள் என்பதைத் தாண்டி, மீனவர்களுடைய பல லட்சம் ரூபாய் மதிப்பிலான படகுகள் அந்த படகுகளை இலங்கை அரசாங்கம் பறித்துச் செல்வது அதிகமாக இருக்கிறது.

'படகுகள் இலங்கை அரசாங்கத்தின் உடமையாகும்'- என்று அந்த நாட்டின் அதிபரே சொல்லும் அளவுக்கு நிலைமை இப்போது மோசமாகயிருக்கிறது.

2014 தேர்தலுக்கு முன்பாக, பாம்பனில் பாஜக சார்பில் ‘கடல் தாமரை’என்ற போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, மறைந்த சுஷ்மா சுவராஜ் இங்கே வந்திருந்தார்கள். ஒன்றியத்தில், பாஜக ஆட்சிக்கு வந்தால் கச்சத்தீவு மீட்கப்படும். மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று அவர் சொன்னார். அது நடந்திருக்கிறதா?

இதே ராமநாதபுரத்தில்தான் 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், பிரதமர் நரேந்திரமோடி என்ன பேசினார்... “தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் துன்புறுத்தப்படுவதும் – கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதும் தினசரி நடந்து வருகிறது. இதற்கு காங்கிரஸ் அரசின் பலவீனம்தான் காரணம்”- என்று சொன்னார். இந்த ஒன்பது ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படவே இல்லையா?

மீனவர்கள் பாதுகாப்பாக வாழவேண்டும் என்றால், இந்தியாவில் வலுவான அரசு அமையவேண்டும். மீனவர்கள் வாழ்வு சிறக்க நான் ஒரு சபதம் எடுக்கின்றேன் என்று குமரிக்கு சென்று, 2014 ஆம் ஆண்டு ஏப்ரலில் பேசினார் மோடி அவர்கள். சபதத்தை போட்டார். அந்த சபதத்தை நிறைவேற்றி விட்டாரா?

'' நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவர் கூட உயிரிழக்க மாட்டார். தமிழ்நாட்டு மீனவர்களுக்கு இலங்கையால் பிரச்சினை. குஜராத் மீனவர்களுக்கு பாகிஸ்தானால் பிரச்சினை. இரண்டு மாநில மீனவர்களையும் இணைத்துப் பேசி கூட்டு நடவடிக்கை எடுப்போம்''- என்று சொன்னவர் மோடி.

2015-ஆம் ஆண்டும் தாக்குதல் நடந்தது. 2016-ஆம் ஆண்டும் தாக்குதல் தொடர்ந்தது. 2017-தங்கச்சிமடம் மீனவர் பிரிட்டோ கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து, நம் மீனவர்கள் மீது தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்றும் – இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க இந்திய அரசு பல்வேறு உதவிகளை செய்கின்ற நிலையிலும் நம் மீனவர்கள் மீதான தாக்குதல் தொடருகிறது. ஒவ்வொரு முறையும் ஒன்றிய அரசுக்கு நான் கடிதம் எழுதிய பிறகுதான் அவர்கள் ஏதோ நடவடிக்கை எடுக்கிறார்கள்.

2020-ஆம் ஆண்டு முதல் இன்று வரை பார்க்கிறோம், தமிழ்நாட்டு மீனவர்கள் மேல் இலங்கைக் கடற்படையினர் 48 தாக்குதல் சம்பவங்கள நடத்தியிருக்கிறார்கள். இதில் தமிழ்நாட்டு மீனவர்கள் 619 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 83 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு, 604 மீனவர்களையும், 16 படகுகளையும் இலங்கை அரசு விடுவித்திருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் 74 மீனவர்கள் இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது. அதில் 59 பேரை விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், 67 மீன்பிடி படகுகள் இலங்கையிடம்தான் இன்னமும் இருக்கின்றன.

இந்திய - இலங்கை அமைச்சர்கள் மீனவர்கள் பிரச்னை பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர் சுஸ்மா சுவராஜ் அவர்கள். இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் துறை அமைச்சர் மங்கள சமர வீரவும் சந்தித்து பேசினார்கள். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மீன்பிடி மீதான கூட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. எந்த வகையிலும் உயிரிழப்பு ஏற்படக் கூடாது என்று அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதை இரண்டு நாடுகளும் ஏற்றுக் கொண்டது. மறுநாள் இருநாட்டு மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதை ஏற்று இலங்கை செயல்படவில்லை.

மோடி அரசு வந்ததும் தமிழ்நாட்டு மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 122 படகுகளையும் நாட்டுடைமை ஆக்கியது இலங்கை அரசு. இப்போதும் கைது தொடருகிறது. படகுகளை தர மறுக்கிறார்கள். இதற்கு பொறுப்பேற்க வேண்டியது யார்? பாஜக அரசுதான்.” என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com