கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக வெளியான அந்த கொடூரமான காணொளி நாட்டையே கொந்தளிக்க வைத்துள்ளது. இதுவரை மணிப்பூர் எங்கே இருக்கிறது என்று அறியாத பலரும் இந்திய வரைபடத்தில் அதன் அமைவிடத்தைத் தேடிப்பார்க்க வைத்தது என்று சொன்னால் தவறேதும் இல்லை. நாட்டின் பிற பகுதிகளில் வடகிழக்குப் பிரதேச மாநிலங்களைப்பற்றிய எந்த அக்கறையும் இருந்தது இல்லை.
இரண்டு பெண்கள் கும்பலால் நிர்வாணப்படுத்தப்பட்டு அழைத்துச் செல்லப்படுகிற காணொளி இந்த தேசத்தின் மனச்சாட்சியை சற்று அசைத்துப் பார்த்திருக்கிறது. மணிப்பூர் கலவரம் பற்றி கருத்தேதும் கூறாத பிரதமர் நரேந்திர மோடி கூட இப்பெண்டிர் மானபங்க பிரச்னையைக் கண்டிக்க வேண்டியதாயிற்று. ஏனெனில் பெண்களின் கண்ணீருக்கு இந்த தேசத்தில் எப்போதும் மரியாதை இருந்து வந்திருக்கிறது.
மணிப்பூர் மாநிலமானது வங்கதேசம் மற்றும் மியான்மர் ஆகிய இரு நாடுகளையும் எல்லைகளாகக் கொண்டிருக்கிறது. சுமார் 53 சதவீதம் மெய்தி இன மக்களும் மீதி குக்கி, நாகா பழங்குடி இனமக்களும் வாழ்கிறார்கள். மெய்தி பெரும்பான்மையினருக்கு வெகுநாட்களாக குகி மக்கள் வாழும் மலைப்பகுதிகளில் நிலம் வாங்க முடியவில்லையே என்ற குறை. மெய்தி இனத்தினர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் இருப்பவர்கள். இந்துக்கள். பழங்குடிகளான குக்கிகள் பெரும்பாலும் கிறிஸ்துவர்கள். அவர்கள் பகுதியில் மெய்தி மக்களால் நிலம் வாங்கிக் குடியேற முடியாது. அப்படியானால் எங்களையும் பழங்குடிகளாக அறிவித்துவிடுங்கள் என்று அவர்கள் கேட்க, மணிப்பூர் உயர்நீதிமன்றம் ‘செஞ்சுச்சுட்டா போச்சு‘ என மாநில அரசுக்கு உத்தரவு போட்டது. இந்த தீர்ப்பு உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டாலும், மே மாத ஆரம்பத்தில் இதை எதிர்த்து பழங்குடி மக்கள் ஊர்வலம் நடத்தவும் கலவரத்தில் இறங்கவும் உடனடிக் காரணமாக அமைந்தது.
மணிப்பூரில் மெய்தி, நாகா, குக்கி இன போராளி அமைப்புகள் பல காலமாக ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வது, நாட்டின் பாதுகாப்புப் படையோடு மோதுவது என்ற வரலாறு உடையவை. ஆனால் இப்போது நடந்திருப்பது இனரீதியான மோதல். பழங்குடியினர் பேரணியில் கலவரம் வெடித்த நிலையில் மெய்தி இனப் பெண்ணை குக்கி போராளிகள் சிதைத்ததாக ஒரு பொய்ச்செய்தி பரவ, மெய்தி- குக்கி இடையே மாநிலம் முழுக்க கலவரம் மூண்டுவிட்டது.
குக்கிகளுக்கு மெய்திகள் பெரும்பான்மையாக உள்ள மணிப்பூர் மாநில பாஜக அரசு தங்களை குறிவைத்து ஒடுக்குகிறது என்ற எண்ணம் பரவலாகத் தோன்றி இருந்தது. ஏனெனில் அவர்கள் வசிக்கும் மலைப்பகுதிகளில் அவர்கள் உருவாக்கி இருந்த புதிய கிராமங்களை, ‘அவை பாதுகாக்கப்பட்ட காட்டுப்பகுதிகளில் வருகின்றன. எனவே அது ஆக்கிரமிப்பு' என்று சொல்லி அரசு காலி செய்ய முற்பட்டிருந்தது. மலைகளில் பயிரிடப்பட்ட போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையாக மாநில அரசு இந்த காடுகளை ஒழுங்குபடுத்துவதை முன்னெடுத்ததை குக்கிகள் விரும்பவில்லை. சுமார் 38 கிராமங்களை, அவை பாதுகாக்கப்பட்ட காட்டுக்குள் ஆக்கிரமிப்பாக உள்ளன என அரசு அங்கீகாரத்தை ரத்து செய்த சம்பவமும் நிகழ்ந்தது.
இது எங்கள் பாரம்பரிய நிலம் என்று குக்கிகள் சொல்ல, இல்லை என அரசு மறுக்க ஒரு இழுபறி நிலையில்தான், இந்த மெய்தி இனமக்களுக்கு பழங்குடி அந்தஸ்து தருவதற்கு சாதகமான தீர்ப்பு வந்து சேர்ந்தது. மெய்திகளிலியே ஒரு பிரிவினருக்கு தங்களைபழங்குடியினர் என்று சொல்வதற்கு விருப்பம் இல்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவர்கள் வேளாண்மை செய்துவருகிற குடிகள் என்பதே காரணம்.
இன்னொரு பக்கம் மியன்மரில் இருந்து அகதிகளாக உள்ளே வரும் பழங்குடியினர் குக்கி இனத்தவர்களுடன் தொடர்பு உடையவர்கள். இவர்களை மாநில அரசு ஆதரிக்கவில்லை. இதுவும் ஒரு கோபம்.
பொதுவாக இந்த போராட்டங்களை ‘போதைக் கடத்தல்காரர்கள், நில ஆக்கிரமிப்பாளர்கள், சட்டவிரோதமாக பக்கத்து நாட்டிலிருந்து ஊடுருவியவர்கள்‘ என்று இடதுகரத்தால் ஒதுக்கித் தள்ளினார் ஆளும் பாஜக முதல்வர் பிரேன் சிங்.
இக்கலவர நிகழ்வுக்குப் பின்னால் மணிப்பூர் நாட்டொம் எல்லையில் உள்ள மாநிலம் என்பதால் மத்திய அரசு அங்கே மேலும் தன் கட்டுப்பாட்டை அதிகப்படுத்த விரும்புகிறது என்கிற காரணமும் அம்மாநிலத்தில் நிலங்களையும் மலைகளையும் கனிம வளத்துக் காகக் கைப்பற்ற விரும்பும் பெருநிறுவனங்களின் கை இருக்கிறது என்கிற காரணமும் நிழலாகப் படர்ந்துள்ளன.
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வர இருப்பதால் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணியை ஒரு கை பார்க்க விரும்பும் எதிர்க்கட்சிகளுக்கு இப்பிரச்னை அல்வா போல் வந்து சிக்கி இருக்கிறது. ஆனால் மையநீரோட்டத்தில் இருந்து விலகி இருக்கும் மணிப்பூரை மக்களின் நேரடிப் பார்வைக்குக் கொண்டுவந்து கேள்விக்குள்ளாக்க வேண்டிய ஊடக சக்திகள் அமைதியாக இருக்கின்றன.
2012-இல் டெல்லியில் நிர்பயா கற்பழிப்பு நிகழ்வுடன் இதை ஒப்பிட்டுப் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாஜகவினர் அந்நிகழ்வுக்கு எதிராக ஆக்ரோஷமாகக் களமாடினர். தொலைக்காட்சிகள் மிகக்கடுமையான எதிர்வினை ஆற்றின. டெல்லியின் சட்டம் ஒழுங்குடன் தொடர்பு இல்லாத, காவல்துறை அதிகாரம் இல்லாத முதலமைச்சரான ஷீலா தீட்சித் இதற்கு முழுப் பொறுப்பாளி ஆக்கப்பட்டு, அத்தோடு காங்கிரஸ் டெல்லியில் ஆட்சிக்கே வரமுடியாமல் போனது. அன்று கொதித்தவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்? ஏன் ஊடகங்கள் இதுபற்றி பெருமளவுக்குப் பேசவில்லை? என கேள்விகளை அரசியல் நோக்கர்கள் எழுப்புகின்றனர்.
அன்று நிர்பயா விவகாரம் தேர்தல் அரசியலில் எதிரொலித்து மாற்றத்தைக் கொண்டு வந்தது. மணிப்பூர் விவகாரம் அதுபோல் தேர்தல் பிரச்னையாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.