ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ராகுல் தண்டனைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு! அடுத்தது என்ன?

Published on

அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத்தண்டனைக்கு தடை விதிக்க குஜராத் உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜூலை 7) மறுத்துவிட்டது.

தண்டனையை நிறுத்தி வைக்காவிட்டால் காந்திக்கு எந்த அநீதியும் ஏற்படாது என்று நீதிபதி ஹேமந்த் பிரச்சக் கூறினார். “அவர் மீது குறைந்தது 10 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போதைய வழக்குக்குப் பிறகும் அவர் மீது மேலும் சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வீர் சாவர்க்கரின் பேரன் ஒருவர் தாக்கல் செய்துள்ளார். எப்படியிருந்தாலும், தண்டனை எந்த அநீதியையும் ஏற்படுத்தாது. அந்த உத்தரவில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,'' என தனது தீர்ப்பில் நீதிபதி கூறியதாக பார் அண்ட் பெஞ்ச் கூறியுள்ளது.

காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ், தீர்ப்பை கட்சி ஆய்வு செய்து வருவதாகவும், வழக்கறிஞரும் கட்சியின் மூத்த தலைவருமான அபிஷேக் மனு சிங்வி மாலை 3 மணிக்கு செய்தியாளர்களிடம் பேசுவார் என்று ட்வீட் செய்துள்ளார். "தீர்ப்பு இந்த விஷயத்தை மேலும் தொடர எங்கள் உறுதியை இரட்டிப்பாக்குகிறது," என்று அவர் மேலும் கூறினார்.

மார்ச் 23 அன்று, சூரத் நீதிமன்றம் ஒரு கிரிமினல் அவதூறு வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளி என்று அறிவித்து, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, கேரளாவின் வயநாட்டிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் விதிகளின் கீழ் எம்.பி.யாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

லோக்சபா செயலகம் மார்ச் 24 அன்று தகுதி நீக்க உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும், சூரத் நீதிமன்றம் அவரை குற்றவாளி என்று அறிவித்த மார்ச் 23 முதல் தகுதி நீக்கம் அமலுக்கு வந்தது.

ஏப்ரல் 3 ஆம் தேதி, காந்தி தனது தண்டனைக்கு தடை கோரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் சென்றார், அது ஏப்ரல் 20 ஆம் தேதி நிராகரிக்கப்பட்டது. இருப்பினும், அவரது மேல்முறையீடு முடிவடையும் வரை ஏப்ரல் 3 ஆம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டு கோலாரில் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி “எனக்கு ஒரு கேள்வி உள்ளது. நிரவ் மோடியோ, லலித் மோடியோ, நரேந்திர மோடியோ எதுக்கு இந்த திருடர்கள் அனைவரின் பெயர்களிலும் மோடி என்று உள்ளது? இன்னும் எத்தனை மோடிகள் வெளிவருவார்கள் என்று தெரியவில்லை” என பேசியிருந்தார். இந்த உரையின் அடிப்படையில், பாரதிய ஜனதா கட்சித் தலைவர் பூர்ணேஷ் மோடி அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு தொடரப்பட்டது. மோடி என்ற குடும்பப்பெயர் கொண்ட அனைவரையும் காந்தி அவதூறாகப் பேசியதாக புகார்தாரர் கூறியிருந்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com