’என் அண்ணன்… என் அண்ணன்’ என்று கட்சியிலிருந்து நீக்கப்படுவதற்கு முன்பு வரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது பாசமழை பொழிந்த திருச்சி சூர்யா, கடந்த ஒரு மாதமாக வசைமழை பொழிந்து கொண்டிருக்கிறார்.
இவர் ஒருவர் மட்டுமல்ல; பாஜகவின் மற்றொரு முன்னாள் நிர்வாகியான கல்யாணராமனும்தான். இவர்கள் இருவரின் ஒரு மாத காலமாக எக்ஸ் தள பதிவுகளை வாசித்தால் தலை சுற்றுகிறது.
ஏன் இந்த வசைமாரி…
மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பாஜகவின் மையக்குழு கூட்டம் கடந்த ஜூன் 19ஆம் தேதி நடைபெற்றது. அக்கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பாஜகவின் சிந்தனையாளர் பிரிவின் மாநில பார்வையாளராக இருந்த கல்யாணராமனையும், இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநிலச் செயலாளராக இருந்த திருச்சி சூர்யாவையும் நீக்க வேண்டும் என கட்சியின் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தியாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, கூட்டம் நடைபெற்ற அன்று இரவே அவர்கள் இருவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.
இதற்காகத்தான் காத்திருந்தேன் என்பதுபோல, அறிவிப்பு வெளியான அன்றே, ‘அண்ணாமலை திமுகவுடன் ரகசிய உறவை உருவாக்கி அதிமுக-பாஜக கூட்டணியை முறித்ததாகச் சொல்லப்படுவதே எனது அடிப்படை குற்றச்சாட்டு.’என அண்ணாமலையை கல்யாணராமன் சீண்டிப் பார்க்க, அடுத்த ஓரிரு நாளில் ’தமிழக பாஜகவில் சாதி லாபி’ அப்பட்டமாக இருப்பதாக திருச்சி சூர்யா குண்டைத் தூக்கிப்போட்டார்.
தொடர்ந்து கல்யாணராமன் அமைதியாகிவிட, திருச்சி சூர்யா மட்டும் அண்ணாமலைக்கு எதிராக சாட்டை சுழற்ற ஆரம்பித்தார். இடையிடையே, தமிழிசை செளந்தரராஜன், ராம ஸ்ரீநிவாசன், ஆர்.கே. சுரேஷ், கேசவ விநாயகம், மனோஜ் பி செல்வம், அமர்பிரசாத் ரெட்டி குறித்த விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
இந்த நிலையில், நக்கீரன், கலாட்டா போன்ற சேனலுக்கு பேட்டி அளித்திருந்த திருச்சி சூர்யா, ’தன்னை கக்கன், காமராஜர் போல காண்பிக்க நினைத்த அண்ணாமலை மற்ற அரசியல் தலைவர்கள் போல் கிடையாது. எந்த பதவியிலும் இல்லாதபோதே பத்தாயிரம் கோடி சொத்து உள்ளதாக’ மிகவும் அதிர்ச்சி தரும் குற்றச்சாட்டைக் கூறியிருந்தார்.
இது மிகைப்படுத்தப்பட்ட சொத்து மதிப்பு என்று கூறிய கல்யாணராமன், “10000 கோடிகள் அண்ணாமலை கொள்ளையடித்தாக திருச்சி சூர்யா குற்றம் சாட்டுவதை பார்த்த பின்னர் வரும் முதல் கேள்வி. ஏன் அண்ணாமலை மௌனம் காக்க வேண்டும்?! சூர்யா கூறியதில் எனக்கு முழுமையான நம்பிக்கை இல்லாவிட்டாலும் நிச்சயமாக அந்த தொகை மூன்று பூஜ்ஜியங்களை கொண்டதாக இருக்கும் என்பதை நான் அறிவேன். காரணம் ஆரம்ப காலத்தில், இசட் பிரிவு பாதுகாப்பு வருவதற்கு முன்பே, ரெசிடென்சி ஓட்டலில் காபி சாப்பிட செல்வதாக சென்று பேஸ்மெண்டில் ஒளிந்து இருந்த காரில் சென்று, மருமகனை மூன்று முறை சந்தித்து செய்து கொண்ட பாஜக-அதிமுக கூட்டணியை முறிப்பேன் என்ற ஒப்பந்தம்.
அக்கா தமிழிசை மீது வன்மத்தை கக்க வேண்டும் என தன்னை தூண்டியது அண்ணாமலை என்று சூர்யா கூறுவதில் உண்மை இருப்பதாகவே பார்க்கிறேன். அப்படி என்றால் அண்ணாமலை ஒரு பயந்தாங்கொள்ளி என்பது தெளிவாகிறது.
தனக்கு தகுதியை மீறி கிடைத்த பதவியை காப்பாற்றிக் கொள்ள போட்டியாக பிற்காலத்தில் வரவாய்ப்புள்ள நபர்களை கட்சியில் இருந்து ஓரம்கட்ட வேண்டும் என அண்ணாமலை திட்டமிட்டது கட்சிக்குள் அனைவருக்கும் தெரியும். அதில் ஓரளவு வெற்றியும் பெற்ற நிலையில் புதிதாக திரும்ப வந்த டாக்டர் தமிழிசை தனக்கு தலைவலியாக வருவார் என்பதால் அவரையும், மாநில தலைவருக்கு தகுதியான நபராக அறியப்படும் பேராசிரியர் சீனிவாசன் அவர்களையும் சூர்யா தொடர்ந்து தாக்கியது எப்படி?! கட்சிக்குள் ரகசியமாக மாநில தலைவருக்கு புகாராக வந்த ஆடியோக்கள் சூர்யாவிடம் சென்றது எப்படி?!
கடந்த சுமார் 44 ஆண்டுகளில் வன்னியர், முக்குலத்தோர், தேவேந்திர குல வேளாளர்கள் என தமிழகத்தின் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் சுமார் 35-40% மக்களை கொண்ட இந்த முப்பெரும் சமுதாயங்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என தலைமை ஆலோசித்து வரும் நிலையில் முக்குலத்தோரில் முக்கிய நபராக அறியப்படும் அண்ணன் நயினார் நாகேந்திரன் மீது 4 கோடி பணம் குறித்த பிரச்சனை உருவாக்க காரணம் யார்?!
ஆலமரத்தின் எதுவும் முளைக்காது; அண்ணாமலையின் தலைமையின் கீழ் பாஜக வளராது. அண்ணாமலையின் தகுதிக்கு சுடுகாட்டிற்கு தான் தலைவனாக இருக்க முடியும். ஏனென்றால், அங்குதான் கேள்வி கேட்காத ஜடங்கள் இருக்கும். அதிகபட்சம் அடிமைகளை வைத்து அண்ணாமலையால் கட்சி நடத்த முடியும்.
அண்ணாமலை அதிமுக பக்கம் திரும்பி விடக்கூடாது என்பதால் அதை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு ரவீந்திரன் துரைசாமி மற்றும் ஜெ. வி. சி, ஸ்ரீராம் அகியோருக்கு திமுகவால் வழங்கப்பட்டது.”என்று விமர்சித்துள்ள கல்யாணராமன், மேலும் மிகக்கடுமையாக அண்ணாமலையை விமர்சித்துள்ளார்.
இப்படி, அண்ணாமலைக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை திருச்சி சூர்யாவும் கல்யாணராமனும் முன்வைத்து வருகிறார்கள்.
இது வரை பொறுமை காத்துவரும் அண்ணாமலை எப்போது அதிரடி நடவடிக்கையில் இறங்குவார் என்று பாஜகவினர் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.