இனி அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டுமா?

Chandrababu
சந்திரபாபு நாயுடு
Published on

மணமக்கள் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழவேண்டும் என்பார்கள். இந்தப் பதினாறில் மாடு, மனை, பொன், புகழ் போன்றவை அடக்கம். பலர் பதினாறு குழந்தைகளைப் பெற்று வாழவேண்டும் என்று வாழ்த்துவதாகப் பொருள்கொள்கிறார்கள்.

இப்போது நாம் அளவோடு பெற்று, வளமோடு வாழுங்கள் என்றுதான் வாழ்த்துகிறோம். ஆனால் நாடாளுமன்றத் தொகுதிகள் குறையும் நிலை வரும்போது, ஏன் அளவோடு பெற்று வளமோடு வாழவேண்டும்? நாமும் பதினாறு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற குரல் எழுந்துள்ளது.”

- சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதுதான் இது.

கிட்டத்தட்ட இந்த விவகாரம் தொடர்பாக ஒரு கருத்தை அதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னர் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு பேசியிருந்தார்.

தென் மாநிலங்களில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தியதால் முதியோர் எண்ணிக்கை பெருகிவிட்டதாகவும் இதை ஈடுசெய்ய நிறைய குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டது மட்டுமல்லாமல், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்பவர்கள் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும்வகையில் சட்டம் கொண்டுவரப்படும் என்றும் அதிரடியாக அறிவித்தார்.

இரண்டு முதலமைச்சர்களுமே மக்களிடம் கொண்டுசெல்ல விரும்பிய விசயம், ஒன்றுதான். தென்னிந்திய மாநிலங்கள் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைத் தீவிரமாகச் செயல்படுத்தியதன் விளைவு, வரும் காலத்தில் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்புக்கு உட்படும்போது இப்போது அந்தந்த மாநிலங்களில் இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைவதற்கான ஆபத்து இருப்பதைத்தான் இருவரின் பேச்சும் சுட்டிக்காட்டுகிறது.

வளங்களைச் சரிசமமாகப் பங்கிட்டுக்கொள்ளவும் வளர்ச்சியைச் சீராக எல்லோருக்கும் எடுத்துச்செல்லவும் மக்கள்தொகையை மட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டது, குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம். தென்னிந்திய மாநிலங்கள் முனைப்புக் காட்டி சாதித்தாலும், வட மாநிலங்களில் அந்த அளவுக்குத் தீவிரமாகச் செயல்படுத்தப்படவில்லை.

இதன் தொடர்ச்சி, வட மாநிலங்களில் மக்கள்தொகை பெருக, தெற்கில் மட்டுப்படுத்தப்பட்டது. இந்தச் சாதனைக்குப் பெருமைப்பட்டுக்கொள்வதற்குப் பதிலாக தற்போது வருத்தப்படும் நிலைக்கு தென்னிந்தியா தள்ளப்பட்டுள்ளது.

வடக்கில் கூடிய மக்கள்தொகைக்கு ஏற்ப நாடாளுமன்றத் தொகுதிகள் உயரும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஆனால் தென்னாட்டில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவதற்கான ஆபத்து காத்திருக்கிறது. குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தியதற்கான தண்டனையா இது எனும் கேள்வி எழுகிறது.

தொகுதிகளின் எண்ணிக்கை குறைவது என்பது மக்களின் ஜனநாயக உரிமைகளில் கைவைப்பது மட்டுமல்லாமல், மக்களின் அதிகாரத்தை நீர்த்துப்போக வைக்கும் ஒரு செயலாகவே பார்க்கப்படும். நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையும்போது நமது முக்கியத்துவம் குறைக்கப்பட்டு குரல் ஒடுக்கப்படும் அபாயம் தலைதூக்குகிறது. மாறாக, மக்கள்தொகையை அதிகமாகக் கொண்ட வட மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை ஏறுவது என்பது தெற்கில் நிதிப் பகிர்வு, மொழித் திணிப்பு, வளர்ச்சியில் ஒதுக்கப்படும் தன்மை ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.

தற்போதைக்கு பா.ஜ.க.வோ அல்லது பின்னர் வேறு ஏதாவது ஒரு கட்சியோ வட மாநிலங்களில் மட்டும் கவனம்செலுத்தி ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பும் உண்டு.

இது தொடர்பான விழிப்புணர்வு தென்னிந்தியாவில் ஏற்படாவிட்டால் நாம் ஒதுக்கப்படுகிறோமோ எனும் அளவுக்கு நிலைமை மாறும் வாய்ப்பு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் விபரீதமும் உண்டு. இதை எப்படி தடுக்கப்போகிறோம் என்பதே நம் முன்னே நிற்கும் பெரும் கேள்வியாக இருக்கிறது.

மக்கள்தொகைக் கணக்கெடுப்பு(சென்சஸ்) நடத்தப்பட்டு, அதன்படி தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ள வேண்டும் என்பது அரசமைப்புச்சட்டத்தில் சொல்லப்படும் ஒன்று. அதன்படிதான், 1952ஆம், 1963ஆம், 1972ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்டது. 1952இல் 494ஆக இருந்த நாடாளுமன்றத் தொகுதிகள் 1971 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 543ஆக உயர்ந்தது. 10 இலட்சம் மக்களுக்கு ஒரு தொகுதி என்று பிரிக்கப்பட்டது. அதன்பிறகு மக்கள்தொகை உயர்ந்தும் அதே எண்ணிக்கை தொடர்கிறது. காரணம் என்ன?

தொகுதி மறுசீரமைப்பு என்பது தேன்கூட்டில் கைவைப்பது போன்றது. இதை உணர்ந்துகொண்ட இந்திராகாந்தி, 1976ஆம் ஆண்டில் 42ஆவது சட்டத்திருத்தத்தின் மூலம் அதை 2000ஆவது ஆண்டுவரை ஒத்திவைத்தார்.

மறுசீரமைப்புக்காக அமைக்கப்பட்ட கமிசனின் பணிகளில் நிறைய சவால்கள் உண்டு.

சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளை ஒருங்கிணைத்து ஒரு நாடாளுமன்றத் தொகுதியை நிர்ணயிக்கும்போது, உள்ளூர் அரசியல்வாதிகளின் தலையீடு அதிகமாக இருக்கும். சாதி, மதம், இனம், வட்டார அடிப்படையில் மக்கள் பிரிந்து வாக்களிப்பதைத் தெரிந்துகொள்ளும் அரசியல்வாதிகள் தங்கள் செல்வாக்குக்கு ஏற்ப தொகுதியின் எல்லைகளை வரையறுக்க அழுத்தம் கொடுப்பார்கள். ஏன் ஒரு கட்சியேகூட குறிப்பிட்ட வட்டாரத்தில் அதிகமான தொகுதிகளை ஏற்படுத்தும்வகையில் மறுசீரமைப்பைப் பயன்படுத்திக்கொள்ளும்.

சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் நடந்த மறுசீரமைப்பில் இந்துக்கள் அதிகமாக வாழும் ஜம்மு பகுதியில் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டதாக பா.ஜ.க. மீது குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க.வின் நோக்கம் நிறைவேறாதவகையில் தேர்தல் முடிவுகள் இருந்தன.

இத்தனை அரசியல் சிக்கல்கள் இருக்கும் நிலையில், 2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பின்னர் மறுசீரமைப்பு நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அப்போது இருந்த வாஜ்பாய் அரசு 84ஆவது அரசியல் சட்டத்திருத்தத்தின் மூலம் 2026ஆம் ஆண்டுக்குப் பின்னரே தொகுதி மறுசீரமைப்பு என்று சொல்லிவிட்டது. அதன்படி பார்த்தால், 2031ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பின்னர்தான் மறுசீரமைப்பு நடக்கவேண்டும். ஆனால், 2021இல் கோவிட் பெருந்தொற்று காரணமாக மக்கள்தொகைக் கணக்கு எடுக்கப்படவில்லை.

இடையில், நாடாளுமன்றத் தேர்தல் வந்ததால் கணக்கெடுப்பு அடுத்த வருடம்தான் தொடங்கவிருக்கிறது. அதன்பின்னர் மறுசீரமைப்பு கமிசன் அமைக்கப்பட்டு பணிகள் தொடங்கவேண்டும். சவாலான இந்தப் பணி பா.ஜ.க. அரசுக்கு பெரிய தலைவலியாக இருக்கக்கூடும். அதனால்தான் ஸ்டாலின், சந்திரபாபுவின் பேச்சுகளுக்கு எதிர்வினையாற்ற பா.ஜ.க. தயங்குகிறது.

மொத்தத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றாமல், 2002இல் உச்சநீதிமன்ற நீதிபதி குல்தீப் சிங் தலைமையில் மறுசீரமைப்பு நடந்தது. 2009 தேர்தலில் அதன் முடிவுகள் செயல்படுத்தப்பட்டன. தமிழகத்தில் புதுக்கோட்டை, செங்கல்பட்டு போன்ற மாவட்டத் தலைநகரங்கள் பெயரிலான தொகுதிகள் இல்லாமல் போயின. ஆனால், 2026-க்குப் பின்னர் நடக்கும் மறுசீரமைப்பு தொகுதிகளின் எண்ணிக்கையை பாதிக்கும்.

புதிய நாடாளுமன்றக் கட்டடம் கிட்டத்தட்ட 900 உறுப்பினர்கள் பங்குகொள்ளும்வகையில் கட்டப்பட்டிருக்கிறது. இப்போது இருக்கும் உச்சபட்ச எண்ணிக்கையான 543 என்பது மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. மக்கள்தொகைக்கு ஏற்ப இது 848ஆக உயரும் என்கிறார்கள்.

இப்போது இருக்கிறபடி 543 தொகுதிகளாகவே தொடர்ந்து, மக்கள்தொகைக்கு ஏற்ப தொகுதிகள் எண்ணிக்கை மாறும்போது, தென்னிந்தியாவில் இப்போது இருக்கும் 130 தொகுதிகள் 104ஆகக் குறையும். தமிழகம் 39இல் எட்டு தொகுதிகளை இழக்கும். ஆனால், வட மாநிலங்களான உத்தரப்பிரதேசம், பீகார், இராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தொகுதி எண்ணிக்கை 188இலிருந்து 213ஆக உயரும்.

இதுவே, தொகுதிகளின் உச்ச எண்ணிக்கை 848ஆக உயர்த்தப்படும்போது, தென்னிந்தியாவின் நிலை இந்திய ஜனநாயகப் பரப்பில் சிறுபான்மையாக மாறக்கூடிய பெரும் ஆபத்து இருக்கிறது.

இந்த அடிப்படையில் உ.பி, பீகார், இராஜஸ்தான், ம.பி.யில் மட்டும் 324 தொகுதிகள் இருக்கும்.

உத்தரப்பிரதேசத்தில் மட்டும் தொகுதிகளின் எண்ணிக்கை 143ஆக உயரும்.

ஒட்டுமொத்தத் தென்னிந்தியாவிலுமே 164 தொகுதிகள்தான் இருக்கும்.

இந்த அடிப்படையில் மறுசீரமைப்பு அமைந்தால் இந்தி பேசுவதாகக் கூறப்படும் மாநிலங்களில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி, ஒரு கட்சி ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்போ அல்லது தனிப்பெரும் கட்சியாக உருவாகவோ சாத்தியம் இருக்கிறது.

இந்த நிலைப்பாடு என்பது ஏற்கெனவே சொன்னதைப்போல, பல பாதிப்புகளை தென்னிந்தியாவுக்கும் குறிப்பாக தமிழகத்துக்கும் ஏற்படுத்தும் என்பது உறுதி.

இந்த சூழலில் தமிழ்நாடு என்ன செய்யப்போகிறது?

2026இல் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் வெற்றிபெறும் கட்சிக்கு மறுசீரமைப்பு கடும் நெருக்கடியைத் தரப்போகிறது.

2029வரை மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. மறுசீரமைப்பில் தனக்குச் சாதகமான நிலைப்பாட்டை உருவாக்க கட்டாயம் முயற்சிசெய்யும். 1972ஆம் ஆண்டில் மறுசீரமைப்பு நடந்தபோது, “காங்கிரஸ் கட்சிக்குச் சாதகமாகச் செய்யப்பட்டதாக” சோஷலிச இயக்கத் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயண் குற்றம்சாட்டியது வரலாறு.

தென்னிந்தியாவில் கணிசமாக செல்வாக்கு பெற்றுள்ள காங்கிரஸ் இங்கு தொகுதிகளின் எண்ணிக்கை குறைவது குறித்து இப்போதே பேசத் தொடங்கிவிட்டது. ஆனால், பிரதமரோ “மக்கள்தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு கேட்கும் காங்கிரஸ் அதே அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கையை நிர்ணயிக்க எதிர்ப்புத் தெரிவிப்பது ஏன்?” என்று கேட்கிறார்.

எனவே, வரும் காலத்தில் இந்த அரசியல் கச்சேரியின் டெசிபல் இன்னும் எகிறும்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com