முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அ.தி.மு.க. மாநாட்டு நாளில் தி.மு.க. உண்ணாவிரதம்- காழ்ப்புதான் என்கிறார் ஜெயக்குமார்!

Published on

மதுரையில் அ.தி.மு.க. சார்பில் மாநாடு நடத்தப்படும் 20ஆம் தேதியன்றே தி.மு.க. உண்ணாவிரதத்தை அறிவித்திருப்பது காழ்ப்புணர்ச்சியே என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தி.மு.க.வின் அறிவிப்புக்குப் பின்னர் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”மதுரை அ.தி.மு.க. மாநாட்டுக்கு 10 லட்சம் பேர் வரவுள்ளனர். சுமார் 40 ஆயிரம் வாகனங்கள் வரவுள்ளன. தி.மு.க.வால் இதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதுபற்றிய தகவலை உளவுத் துறையிடம் உறுதிசெய்துவிட்டு, எப்படியாவது மாநாட்டைத் தடுக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.” என்று கூறினார்.

“மாநாடு நெருங்க நெருங்க நிர்பந்தம் கொடுப்பார்கள். தட்டி பதாகைகளை வைக்க முடியவில்லை. ஆளுங்கட்சியினர் வைத்தால் அனுமதிக்கிறார்கள். ஆனால், எங்கள் கட்சியினர் வைத்தால், வழக்கு பதிகிறார்கள்; விளம்பரப் பதாகைகளையும் அகற்றி விடுகிறார்கள்.” என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

பொள்ளாச்சியில் அ.தி.மு.க. மாநாட்டு பலூன்களைப் பறக்கவிட்டவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது; இதுபோல பல நிர்பந்தங்களைக் கொடுக்கிறார்கள்; அவர்களைப் பொறுத்தவரை அ.தி.மு.க. மாநாடு வெளியே பெரிதாகத் தெரிந்துவிடக் கூடாது; தி.மு.க. உண்ணாவிரதம்தான் தெரியவேண்டும் என்பதற்காக, ஆகஸ்ட் 20-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்; இது ஓர் அரசியல் காழ்ப்புணர்ச்சிதான் என்று கூறிய ஜெயக்குமார்,

”ஏன் அந்த உண்ணாவிரதப் போராட்டத்தை 19 அல்லது 21ஆம் தேதிகளில் நடத்துங்களேன். தேர்தல் வந்துவிட்டால் போதும், உடனே முதலமைச்சர் வாயைத் திறந்துவிடுவார். நீட் சுவர் தகர்க்கப்படும் என்கிறார்; அது எப்போது தகர்க்கப்படும்? கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று இப்போது சொல்கிறார்." என்றும் கிண்டலாகவும் விமர்சனமாகவும் பேசினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com