நீட் - ஆளுநரைக் கண்டித்து ஆக.20இல் தி.மு.க. அணிகள் உண்ணாவிரதம்
நீட் விவகாரத்தில் மைய அரசையும் ஆளுநரையும் கண்டித்து தி.மு.க. மாணவர், மருத்துவர், இளைஞர் அணிகள் சார்பில் வரும் 20ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக மாணவர் அணி செயலாளர் எழிலரசன், மருத்துவர் அணியின் எழிலன் நாகநாதன், இளைஞர் அணியின் உதயநிதி, மாணவர் அணியின் தலைவர் இராஜீவ்காந்தி, மருத்துவர் அணியின் கனிமொழி சோமு ஆகியோர் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், “ எத்தனை மரணங்கள் நிகழ்ந்தாலும் நீட் தேர்வு நடக்கும் என்ற இதே சதிகாரப் போக்கில் உள்ள ஒன்றிய அரசையும் இல்லாத அதிகாரம் இருப்பது போல் மாளிகையில் கொக்கைக்கும் ஆளுநரையும் கண்டித்து இந்த மாபெரும் உண்ணாவிரதம் தமிழ்நாடு எங்கும் நடைபெற இருக்கிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் நடக்கின்ற உண்ணாவிரதத்தில் திமுக இளைஞரணி மாணவரணி மருத்துவ அணி செயலாளர்கள் பங்கேற்கின்றனர்.
”அரியலூர் அனிதாவில் ஆரம்பித்த நீட் மரணம் குரோம்பேட்டை ஜெகதீஸ்வரன் அவரைத் தந்தை செல்வ சேகர் வரை தொடர்கிறது. இந்த மரணங்கள் அனைத்திற்கும் ஒன்றிய பாஜக அரசும் அவர்களுக்கு அடிமை சேவகம் செய்யும் அதிமுகவினரும் நீட் பாதுகாவலர் ஆளுநர் ரவியுமே காரணம். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் எண்ணத்தின் வெளிப்பாடாக நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் முயற்சிகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எடுத்துவருகிறது. ஆனால் இந்த நடவடிக்கைகளுக்கு எல்லாம் ஆளுநர் ரவி முட்டுக்கட்டை போட்டு வருகிறார். நம் மாணவச் செல்வங்களின் மரணம் ஆளுநரையோ அவரை இங்கு அனுப்பி இருக்கும் ஆரிய மாடல் ஆட்களையோ துளியும் பாதிக்கவில்லை.” என்று தி.மு.க. அணிகளின் செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.