கருகும் பயிர்கள்- காவிரி டெல்டாவில் ஆக.14, 22-ல் போராட்டம்!

டெல்டா காய்ந்த நெல் வயல்கள்
டெல்டா காய்ந்த நெல் வயல்கள்
Published on

கருகும் குறுவைப் பயிர்களை காப்பாற்ற கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடவேண்டும் எனக் கோரி ஆகஸ்ட் 14ஆம் தேதி போராட்டம் நடத்துவதாக சிபிஎம் கட்சி அறிவித்துள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில், குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. குறுவை சாகுபடியை ஊக்குவிக்க தமிழ் நாடு அரசு குறுவைத் திட்டத்தை அறிவித்தது. இம்முறை டெல்டா மாவட்டங்களில் மட்டும் 5 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், சில பகுதிகளில் போதிய அளவு தண்ணீர் வராததால் சாகுபடி செய்த நெற்பயிர்கள் காய்ந்து கருகும் நிலை உருவாகியுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் வேதனையில் மூழ்கியுள்ளனர்.

இந்த விவரங்களையெல்லாம் குறிப்பிட்டுள்ள சிபிஐஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், “ காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் படி தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. 2023-2024ஆம் ஆண்டில், 2023 ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை கர்நாடகாவிலிருந்து பிலிகுண்டுலுவிற்கு 40.4 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர வேண்டும். ஆனால் இதுவரை 11.6 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வந்துள்ளது. கர்நாடகாவில், 4 முக்கிய நீர்த்தேக்கங்களின் முழு கொள்ளளவான 114.6 டி.எம்.சி.-யில், 91 டி.எம்.சி அளவிற்கு மொத்த நீர் இருப்பு உள்ள நிலையிலும் கர்நாடக அரசு 28.8 டி.எம்.சி அளவிற்கு தண்ணீர் திறந்து விட மறுத்துள்ளதால் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் குறுவை சாகுபடி செய்துள்ள கடைமடை பகுதிகளில் தண்ணீர் செல்லாமல் பயிர்கள் கருகியுள்ளன.” என்றும் விவரித்துள்ளார்.

காவிரிப் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் வரை போராடி பெறப்பட்ட தீர்ப்பினை அமலாக்க மறுப்பதுடன் மேகேதாட்டு அணைப் பிரச்சனை உட்பட புதிய பிரச்னைகளை உருவாக்கி, தமிழ்நாட்டின் நியாயத்தை கர்நாடக அரசு மறுத்து வருகிறது என்றும்,

தீர்ப்பைச் செயல்படுத்தும்படி வற்புறுத்தவேண்டிய ஒன்றிய அரசு, அரசியல் சுயலாபத்துடன் மௌனம் காப்பதுடன், கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று பொறுப்பில்லாமல் பேசிவருகிறது என்றும் கூறி, பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குறுவைப் பயிர்கள் கருகி வரும் அவசர சூழலில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உடனடியாகத் தலையிடவும், தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தண்ணீரை முழுமையாக திறந்து விடவும் வலியுறுத்தி சி.பி.ஐ(எம்) சார்பில் வரும் ஆகஸ்ட் 14 அன்று டெல்டா மாவட்டங்களில் (பாதிக்கப்பட்ட பகுதிகளில்) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அக்கட்சியின் மாநிலச் செயற்குழு தெரிவித்துள்ளது.

முன்னதாக, நேற்று கூடிய காவிரி உரிமை மீட்புக் குழு அமைப்பினர் வரும் 22ஆம் தேதி அன்று காவிரி நீருக்கான போராட்டம் அறிவித்திருந்தனர்.

தமிழக விவசாயிகளின் கடும் அதிருப்திக்கு இடையே வரும் 11ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெறுகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com