ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் சஞ்சய் சிங், ராகவ் கட்டா இருவரின் இடைநீக்கமும் தொடரும் என அவைத்தலைவர் ஜெகதீப் தாங்கர் தெரிவித்துள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் சஞ்சய் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டதுடன், அந்தப் பிரச்னை குறித்து அவையின் உரிமைக் குழுவின் பரிசீலனைக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, அதே கட்சியின் உறுப்பினர் ராகவ் கட்டாவும் இடைநீக்கம் செய்யப்பட்டார். கடந்த திங்களன்று மாநிலங்களவையில் தில்லி அதிகார சட்டவரைவு கொண்டுவரப்பட்டு, விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அப்போது, தங்கள் கட்சி உறுப்பினர்கள் உட்பட 19 பேரின் பெயர்களைக் குறிப்பிட்டு, அந்த சட்ட மசோதாவை நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பவேண்டும் என்று ராகவ் கட்டா கோரியிருந்தார். ஆனால் அதில் குறிப்பிடப்பட்டிருந்த தம்பிதுரை உட்பட ஆறு உறுப்பினர்கள், தங்கள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதே தெரியாது என்று புகார் அளித்தனர்.
உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமலேயே அவர்களின் பெயர்களைச் சேர்த்ததாக ராகவ் கட்டா மீது நடவடிக்கை எடுத்து அவைத்தலைவர் ஜெகதீப் தாங்கர் உத்தரவிட்டார்.
இருவர் மீதும் உரிமைக் குழுவின் அறிக்கை கிடைக்கும்வரை, இடைநீக்க நடவடிக்கை தொடரும் என்று இன்று ஜெகதீப் தாங்கர் கூறினார்.