3-வது நீதிபதி தீர்ப்பு: செந்தில் பாலாஜிக்கு பின்னடைவா?

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி
Published on

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரண்டு அமர்வு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருந்தனர். இதையடுத்து, மூன்றாவது நீதிபதியாக சி.வி கார்த்திகேயனுக்கு வழக்கு மாற்றப்பட்டது.

வெள்ளிக்கிழமை, இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பை வழங்கினார்.

தீர்ப்பில், “போக்குவரத்து துறையில் வேலை பெற நகைகளை விற்றும் நிலங்களை விற்றும் பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டவர்களின் நிலைமையை கருத்தில் கொள்ள வேண்டும். பணம் யார் மூலமாக யாரிடம் சென்றது. அதை எப்படி மீட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி வழங்க வேண்டும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

அமலாக்கப்பிரிவுக்கு காவலில் எடுக்க அதிகாரம் உள்ளதா எனபது குறித்து இரண்டு தரப்பும் வாதங்களை வைத்தார்கள். அமலாக்கப்பிரிவினர் காவல்துறையினர் அல்ல என கபில் சிபல் வாதத்தில் மாற்றுக் கருத்து இல்லை. அமலாக்கப்பிரிவினர் காவல்துறையினராக கருத முடியாவிட்டாலும் அவர்கள் புலன் விசாரணை நடத்துவதை தடுக்க முடியாது. அவர்களின் உரிமை பறிக்க முடியாது. கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது.

செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். தான் குற்றம் செய்யவில்லை என்பதை விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும். கைது செய்யப்பட்டால் காவல் எடுக்க வேண்டியது அவசியம். கஸ்ட்டடி வழங்கி பரத சக்கரவத்தி உத்தரவு தான் என் உத்தரவும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் சரவணன், “ஆட்கொணர்வு மனு செல்லத்தக்கதல்ல. செந்தில் பாலாஜியை கைது செய்தது சரியானமுறையில் நடைபெற்றுள்ளது. நீதிபதி பரத சக்கரவர்த்தி தீர்ப்புடன் ஒத்துப் போகிறேன் என நீதிபதி கூறி உள்ளார். அதே இரண்டு நீதிபதிகளுக்கு இந்த தீர்ப்பு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பின் அடிப்படையில் அவர்களது தீர்ப்பு அமையும். கைது செய்வதற்கான காரணத்தை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவரது வீட்டில் சோதனை செய்வதன் காரணமாக என்ன காரணத்திற்காக கைது செய்கிறோம் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்வது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது. முதல் 15 நாளில் போலீஸ் காவலில் எடுக்கவில்லையென்றால் பிறகு எப்போதுமே எடுத்து விசாரிக்க முடியாது என்று அனுபம் குல்கர்னி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் மீண்டும் கைது செய்யலாம் என்றலாம் என்ற புதிய கருத்தை நீதிபதி என்று கூறியுள்ளார். அமலாக்கத்துறையினர் காவல் துறையினர் அல்ல என்பதை சொலிசிட்டர் ஜெனரல் ஒப்புக்கொண்டுள்ளார். அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு 24-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது, இந்த தீர்ப்புகள் எல்லாம் உச்ச நீதிமன்றத்தின் முன் வைக்கப்படும். உச்ச நீதிமன்றம் இறுதி முடிவை எடுக்கும்.


செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுக்க உத்தரவு இருந்தும், அவர்கள் நீதிமன்றக் காவலில் எடுக்கவில்லை. செந்தில் பாலாஜியை நாளைக்கே யாரும் கஸ்டடியில் எடுக்கப்போவதில்லை. இது எங்களுக்குப் பின்னடைவு இல்லை. இந்த வழக்கில் இந்தியாவிலேயே முதன்முறையாக தாங்கள் காவல்துறையினர் கிடையாது என்று அமலாக்கத்துறையே ஒப்புக்கொண்டுள்ளது” என்று தெரிவித்தார்.

உச்சநீதிமன்றத்தில் என்ன நடக்கப்போகிறது? செந்தில் பாலாஜியின் அரசியல் எதிர்காலம் என்னவாகும்? என்பதை ஒட்டுமொத்த அரசியல் வட்டாரமும் பரபரப்புடன் உற்று நோக்குகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com